TNPSC Thervupettagam

ஆங்கிலம் கற்பிப்பதில் தீவிரக் கவனம் செலுத்துமா தமிழகம்?

October 12 , 2020 1560 days 658 0
  • ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சட்டப் போராட்டம் நம்முடைய கவனத்தைக் கோருகிறது.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வியை ஆங்கில வழியிலேயே வழங்க வேண்டும்என்கிறது ஆந்திர அரசு.
  • உயர் நீதிமன்றம் அரசின் இந்த முடிவுக்குத் தடை விதித்தபோதும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தடையைத் தகர்த்து வந்திருக்கிறது ஆந்திர அரசு.
  • வறுமையால் வாடுபவர்களையும் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களையும் முன்னேற்றுவதற்கான ஒரே வழி ஆங்கில வழிக் கல்விதான் என்ற ஆந்திர பிரதேச அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், ‘ஏறக்குறைய 96% பெற்றோர்களின் ஆதரவுடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது; தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெற விரும்பும் சிறுபான்மையினருக்கு அதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படும்என்று ஆந்திர அரசு கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
  • தாய்மொழியையும் தாண்டிய செல்வாக்கு இன்றைக்கு ஆங்கிலத்துக்கு எப்படி இந்தியாவில் உருவாகிவருகிறது என்பதற்கான சாட்சியமாக இதை நாம் பார்க்க முடியும் என்றாலும், தாய்மொழி தவிர்த்த ஆங்கிலம் என்பது வெற்றிகரமான அணுகுமுறை அல்ல என்பதையே உலகளாவிய அனுபவங்கள் நமக்குச் சொல்கின்றன.
  • அந்த வகையில் தமிழ்நாட்டின் தாய்மொழியுடன் கூடிய ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையே சிறந்த ஒன்றாகும்.
  • அதேசமயம், தாய்மொழியோடு கூடவே அளிக்கும் இன்னொரு மொழி எனும் இடத்தில் இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவை ஆங்கிலம் பெற்றுவருவதானது, ‘இப்படிப்பட்ட சூழலில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலத்தை அந்நிய மொழியாகவே கருதப்போகிறோம்?’ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
  • அதாவது, ஆங்கிலத்தையும் இந்திய மொழியாகக் கருத வேண்டிய காலக் கட்டாயத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பதையே இது நமக்குச் சொல்வதாக இருக்கிறது. 

ஆங்கிலம் எனும் ஆயுதம்

  • தமிழ்நாடு இன்றைக்குச் சமூக - பொருளாதாரத் தளங்களில் இந்திய அளவில் அடைந்திருக்கும் முன்னேற்ற நிலைக்கு ஆங்கிலமும் ஒரு முக்கியமான கருவி என்பது சகல தரப்புகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை ஆகும்.
  • காலனியாதிக்கத்தின் காரணமாக ஆங்கிலம் இந்தியாவில் உள்ளே நுழைந்திருக்கலாம். ஆனால், இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழலில் கிடைத்துவரும் வேலைவாய்ப்புகளின் பின்னணியில் ஆங்கில மொழித்திறனே முக்கியக் காரணமாக இருக்கிறது.
  • வணிகம் மட்டுமின்றி அறிவியல், தூதரக உறவுகள், பண்பாட்டுத் தொடர்புகள் என அனைத்தும் ஆங்கிலத்தையே முதன்மைப்படுத்துகின்றன.
  • இதன் விளைவாகவே ஒருகாலத்தில் இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை முன்னிறுத்தி, ஆங்கிலம் கற்பிப்பதைத் தொடக்கப் பள்ளிகளில் புறக்கணித்த இந்தி நேச அரசியல் கட்சிகளும்கூட இன்று ஆங்கிலத்தைப் பள்ளிக்குள் கொண்டுவந்திருக்கின்றன.
  • குஜராத் தொடங்கி உத்தர பிரதேசம் வரை பல மாநிலங்கள் இன்று ஆங்கிலம் கற்பிப்பதில் கவனம் செலுத்துகின்றன.
  • இத்தகு சூழலில் ஆங்கிலத்தைக் கையில் எடுத்த முன்னோடி மாநிலங்களில் ஒன்றான தமிழகம் தன்னுடைய செல்வாக்கை இதில் தக்கவைக்க வேண்டுமா, வேண்டாமா? அப்படியென்றால், தமிழ் - ஆங்கிலம் இரு மொழிகளைக் கற்பிப்பதிலும் தீவிரக் கவனத்தைத் தமிழ்நாட்டுக் கல்வித் துறை செலுத்த வேண்டும்.

கலப்பில்லா மொழி இல்லை

  • அரசியல் தளத்தில் ஆங்கிலத்தைப் பொதுமொழியாக்குவதும் கல்வித் தளத்தில் ஆங்கில வழிக் கல்வியைக் கையிலெடுப்பதும் ஒன்றல்ல.
  • ஆங்கில மொழிப் பாடத்தையே வெற்றிகரமாகப் போதிக்க இயலாத கல்வியமைப்பைத்தான் நாம் கொண்டிருக்கிறோம்.
  • இந்நிலையில், அனைத்துப் பாடங்களையுமே ஆங்கிலத்தின் வழியாகப் பயிற்றுவிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
  • அதேநேரத்தில், இந்தச் சிரமங்கள் ஆங்கில மொழிப் பாடத்துக்கு மட்டும்தான் என்றில்லை. இந்திய மொழிப் பாடங்களையும் மாணவர்களுக்கு வெற்றிகரமாகப் போதிக்க முடியாத நிலையில்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
  • சமீபத்தில் வெளியான உத்தர பிரதேசப் பள்ளித் தேர்வு முடிவுகளில், 7.97 லட்சம் மாணவர்கள் இந்திப் பாடத்திலேயே வெற்றிபெற முடியவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்தித் தேர்வில் தோற்றுவிட்டார்கள் என்பதாலேயே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தி தெரியாது என்று அர்த்தமா என்ன? இந்தச் சூழல் தமிழ்நாட்டிலிருந்து நிறைய வேறுபட்டது என்று நாம் கூறிவிட முடியாது.
  • இந்தியாவில் தாய்மொழி தவிர, அதிகளவில் பயன்படுத்தப்படும் இரண்டாவது மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே இருந்துவருகிறது; இந்தியாவின் எந்த மூலையிலும் செல்லுபடியாகும் மொழியும் அதுதான்.
  • இன்று ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்காமல் பேசப்படும் இந்திய மொழி எதுவுமே இல்லை. மொழிக் கலப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்று விழிப்புணர்வு அவசியமாக இருந்தாலுமேகூட, காலத்தின் பெரும் போக்கில் அது தவிர்க்கப்பட முடியாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
  • இன்னொரு பக்கம், அனைத்து மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைப் பெற்று வளப்படுத்திக்கொள்ளும் மொழியாகவும் ஆங்கிலம் விளங்குகிறது.
  • அறிவியல் உள்ளிட்ட அறிவுத் துறைகளில் சர்வதேச அளவில் அதன் வேகத்துக்குத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு மொழி இல்லை.
  • ஆக, ஆங்கிலத்தை ஒரு சமூகம் கையில் எடுப்பதானது அறிவுலகோடு நெருக்கமாக்கிக்கொள்வதாகிறது. ஆனால், அதற்கான சிறந்த வாசல் தாய்மொழிதான்.

ஆசிரியக் கட்டமைப்பு

  • தாய்மொழி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளின் வாயிலாகவும் மாணவர்களுக்கு வெற்றிகரமாக வகுப்புகளை நடத்த முடியும்.
  • அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியில் பயிற்றுவித்தபடியே அவர்களின் ஆங்கில மொழித் திறனையும் வளர்த்தெடுக்க முடியும்.
  • ஆனால், இதற்குத் தகுதியான சிறந்த ஆசிரியக் கட்டமைப்பை இன்று நாம் பெற்றிருக்கவில்லை. ஓர் உதாரணத்துக்கு 2012-ல் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தகுதித் தேர்வை எடுத்துக்கொள்ளலாம்.
  • அந்தத் தேர்வில் 91% ஆசிரியர்களால், சற்றேறக்குறைய 7,30,000 பேரால் வெற்றிபெற முடியவில்லை.
  • ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் சி-டெட்தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களையும், அவர்களில் தகுதிபெறுபவர்களின் எண்ணிக்கையையும்கூட ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
  • எனவே, மொழிப் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி என்பது கல்வியமைப்பில் உள்ள தவறுகளைத்தான் எடுத்துக்காட்டுகிறதேயொழிய மாணவர்களின் கற்கும் திறனை அல்ல.
  • ஆக, ஏனைய பாடங்களைக் கற்பிப்பதில் நாம் காட்டும் அக்கறையை மொழிப் பாடங்களுக்கு முதலில் அளிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களை விட்டு ஒரு பிள்ளை வெளியேறுகையில் குறைந்தபட்சம் இரு மொழிகளில் நன்றாக எழுதப் படிக்கப் பேசத் தெரியும் என்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
  • தமிழகம் இந்த விஷயத்தில் பின்தங்கிவிடக் கூடாது!ஆங்கிலம் தவிர அறிவியல் உள்ளிட்ட அறிவுத் துறைகளில் சர்வதேச அளவில் அதன் வேகத்துக்குத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு மொழி இல்லை.
  • ஆக, ஆங்கிலத்தை ஒரு சமூகம் கையில் எடுப்பதானது அறிவுலகோடு நெருக்கமாக்கிக்கொள்வதாகிறது. ஆனால், அதற்கான சிறந்த வாசல் தாய்மொழிதான்!

நன்றி: தி இந்து (12-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்