- ஆங்கிலேய ஆட்சியாளரின் கண்களில் பயத்தை வரவழைத்த பெண் வீராங்கனை மணிகர்னிகா என்று பெயர் சூட்டப்பெற்று மனு என்று அன்புடன் அழைக்கப்பெற்று பின்னர் ஜான்சிக்கு ராணியாகி லெட்சுமிபாய் என்று வழங்கப்பட்டவர் ஜான்சிராணி லெட்சுமிபாய் ஆவார்.
- இவரோடு இணைந்து இவருடைய பெண்கள் படையில் பணி செய்தவர். வரலாற்றுலகால் அதிகம் அடையாளப்படுத்தப்படாத வீராங்கனை ஜல்காரிபாய் என்பவர் ஆவார்.
- 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கிளர்ச்சியின்போது ஜான்சி போரில் முக்கிய பங்கு வகித்த இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை இவராவார்.
- வறுமையான குடும்பம் ஒன்றில் பிறந்த ஜல்காரிபாய் லெட்சுமிபாயின் பெண்கள் படைப்பிரிவில் ஒரு சாதாரண படைவீராங்கனையாக இணைந்த இவர், பின்னர் படிப்படியாக வளர்ந்து ராணி லெட்சுமிபாயுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.
- ஜல்காரிபாய் ஆங்கிலேயப் படையினரை ஏமாற்றும் வகையில் ராணி லெட்சுமிபாயைப்போல் உடை அணிந்துகொண்டு படைக்குத் தலைமை ஏற்று ராணி கோட்டையைவிட்டு வெளியே செல்வதற்கு உதவிபுரிந்தார்.
- இவர் செய்த தன்னலமற்ற பணியினால் இவ்வம்மையாரைப் போற்றும் விதத்தில் இவருடைய உருவம் கொண்ட அஞ்சல் தலையினை வெளியிட்டு இந்திய அரசு அவ்வம்மையாருக்குச் சிறப்பு சேர்த்தது.
- இவ்வம்மையாரின் வீரவரலாறு பந்தேல்கண்டில் நினைவுகூறப்பட்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- பந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையினை எதிர்த்த வரலாற்றையும் கூறுவனவாக அமைந்திருக்கும்.
- ஜல்காரிபாய் தோற்றத்தில் ராணி லெட்சுமிபாய் போலவே இருந்தார். ராணி லெட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த கூரன்சிங்கைத் திருமணம் செய்துகொண்டார்.
- கூரன்சிங்தான் ஜல்காரிபாயை ராணி லெட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு இவர் தன்னை லெட்சுமிபாயின் படையில் இணைத்துக்கொண்டார்.
- அங்கு துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கி இயக்குவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். பார்ப்பதற்கு ஜல்காரிபாய் இராணி, லெட்சுமிபாய் போல இருந்ததால் லெட்சுமிபாயிக்கு மிகவும் பிடித்துப்போனவராக இருந்தார்.
- விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த சடோபாசிங் ஜமுனாதேவி தம்பதியினருக்கு 22.11.1830-ஆம் ஆண்டு பிறந்தார். ஜான்சிக்கு அருகில் உள்ள போச்லா என்னும் சிற்றூரே இவர் பிறந்த ஊராகும்.
- சிறுவயதிலேயே இவர் தாயார் இறந்துபோனதால், தன் தந்தையின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட இவர், ஆண் பிள்ளையைப் போலவே திகழ்ந்தார். குதிரை ஏற்றத்தையும் ஆயுதங்கள் கையாளும் விதத்தையும் முறையாகக் கற்றுக்கொண்டார்.
- அக்கால சமுதாய வழக்கத்தின்படி முறையான கல்வியை இப்பெண் பெறாவிட்டாலும் போர்ப்பயிற்சியில் சிறந்த வீராங்கனையாகத் திகழ்ந்தார். நம் தமிழிலக்கியம் புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்கள் பற்றிக் கூறுவதுபோல இப்பெண்ணான ஜல்காரிபாய் காட்டில் ஒரு புலியால் தாக்கப்பட்டபோது அப்புலியினைக் கோடரியால் வெட்டி வீழ்த்தினார். இதனால் பந்தேல்கண்ட் முழுவதும் இம்மங்கையின்புகழ் பரவத்தொடங்கியது.
- 1857–58-ஆம் ஆண்டுகளில் ஜான்சிக்கோட்டையின்மீது ஆங்கிலேய அரசு பலமுறை போர்த்தொடுத்தது. ஒவ்வொரு முறையும் அப்படையெடுப்புகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார் ராணி லெட்சுமிபாய்.
- 1857-ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின்போது 1858-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி சர் ஹியூரோஸ் மிகப்பெரும் படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி மிகப்பெரும் படையை எதிர்த்து போர்புரியக்கூடிய நிலையில் இல்லை. அவர் பிற பகுதியில் உள்ள புரட்சிப் படைகளுடன் இணையவே திட்டம் தீட்டியிருந்தார்.
- அச்சமயத்தில் ஜான்சிராணி போலவே தோற்றம் கொண்ட ஜல்காரிபாய் தானே முன்னின்று போர் புரிவதாகவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ராணி லெட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
- முதலில் மறுத்தாலும் பிறகு இராணி லெட்சுமிபாய் இவரது வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் 4-ஆம் தேதி கோட்டையிலிருந்து தப்பித்துச் சென்றார். பின்னர் ஜல்காரிபாய் இராணிபோல் உடையணிந்து கொண்டு ஜான்சி படைக்குத் தலைமையேற்று ஆங்கிலேயப்படை தங்கியிருந்த முகாமுக்குச் சென்று வீரதீரத்துடன் போரிட்டார்.
- அப்போரின் முடிவில் அவர்களிடம் வீரமங்கை பிடிபடக்கூடிய சூழல் ஏற்பட்டது. அவரைத்தான் உண்மையான இராணி என நம்பிய அதிகாரிகள் ஜல்காரிபாயிடம் உங்களை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசத்துடன் கூறினார்.
- இருந்தாலும் ஆங்கிலேயர்கள் இவரை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டனர். இவர் இராணி லெட்சுமிபாய் அல்ல என்று தெரிந்து இருந்தாலும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு ஜல்காரிபாய் தன் இராணியின்மீது கொண்ட விசுவாசமும் அவருடைய வீரமும் வியப்பை அளித்தது.
- அதனால் அவர்கள் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையுடன் நடத்தி விடுதலை செய்தனர். ஜான்சி போருக்குப் பிறகு இந்த வீரமங்கையின் சரியான வரலாற்றுத் தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை.
- ஒருசில ஆய்வாளர்கள் இவர் இப்போரில் இறந்ததாகக் கூறுகின்றனர். அதேநேரம் வேறுசில ஆய்வு கருத்துகள் இவர் ஆங்கிலேயரால் விடுதலை செய்யப்பெற்று 32 ஆண்டுகள் அதன்பிறகு வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
- தலித் குடும்பத்தில் பிறந்த இப்பெண்ணின் வீரத்தைக் கண்ட ஆங்கிலேய தளபதி சர் ஹியூரோஸ் இந்தியாவின் பெண்மணிகளில் ஒரு சதவிகிதம் பேர் மட்டும் இந்த மாதிரி வீராங்கனைகளாக இருந்தால் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு ஓட வேண்டியதுதான் என்றாராம்.
- மிகப்பெரும் எழுத்தாளர்கள் பதிவு செய்யாத நிலையில் 1951-இல் பி.எல். வர்மா என்பவர் ஜல்காரியின் பேரனை பேட்டி எடுத்துள்ளார். அப்பேட்டியிலிருந்தே ஜல்காரிபாயின் வீரச்செய்தியானது தெரியவந்தது.
- அதனைத் தொடர்ந்து பவானிசங்கர் விசாரத் என்பவர் 1964-இல் ஜான்சி பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய கீழ்த்தட்டு மக்களின் எழுதப்படாத கதைகளில் இருந்தும் இந்தப் பேட்டியை வைத்தும் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு எழுதியிருக்கிறார்.
- அதன்பிறகு பகுஜன் சமாஜ் கட்சி அவரைத் தூக்கிப் பிடித்தது. இந்திய அரசும் இவரின் வீர தீரச் செயலைப் பாராட்டும் விதத்தில் சிறப்புத் தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
- தன் இன்னுயிரைத் துச்சமென மதித்து தேச விடுதலைக்காகவும், விடுதலை வேண்டி வீரமுடன் போரிட்ட பெண்ணரசி ஜான்சிராணியின் உயிரைக் காத்தும் நின்றனர்.
- இத்தகு துணிவும் தியாகமும் கொண்ட ஒரு பெண் வாழ்ந்த மண் இந்த மண் என்பதில் உலக மகளிர் தினம் கொண்டாடும் இந்நன்னாளில் உலகெங்கும் தேடினாலும் கிடைக்காத மிகச்சிறந்த வீரம் நிறைந்த பெண்கள் பிறந்த மண் நம் மண் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
நன்றி: தினமணி (08 – 03 – 2021)