- சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வரலாறு காணாத அளவுக்கு பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவில் இருந்து சென்ற வீரர், வீராங்கனைகளில் 46 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தங்கத் தமிழர்கள்
- ஆடவர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் பிரித்விராஜ் தொண்டைமான், கைனன் செனை, சோராவார் சிங் சத்து ஆகியோரைக் கொண்ட அணி, 361 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. பிரித்விராஜ் தொண்டைமான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
- ஸ்குவாஷ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பள்ளிக்கல், ஹரிந்தர் பால் சிங் சந்து இணை 11-10, 11-10 என்கிற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
- திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றி வருபவர் ராஜேஷ் ரமேஷ். ஆடவர் 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் அனஸ் முகமது யாஹியா, அமோஜ் ஜேக்கர், முகமது அஜ்மல் வாரியதோடி ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- கலப்பு 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் முகமது அஜ்மல் வாரியதோடி, ராஜேஷ் ரமேஷ், வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் ஆகியோரைக் கொண்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மகளிர் 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிராச்சி, ஐஸ்வர்யா மிஷ்ரா ஆகியோரைக் கொண்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
மூன்றாவது பதக்கம்
- 25 வயதான கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், 55:68 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், 55:42 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த வித்யா, இந்தியாவின் ’தங்க மங்கை’ பி.டி உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்து அசத்தினார்.
- ஆடவர் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெருமை சேர்த்தவர்கள்
- ஆடவருக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி இணை சீன தைபேவின் ஜங் ஜேசன், ஷு யூ ஷியோ இணையுடன் இறுதிப் போட்டியில் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-4 என்கிற செட் கணக்கில் தோற்றதால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா, தீபிகா பள்ளிக்கல் ஆகியோரைக் கொண்ட மகளிர் அணி ஸ்குவாஷ் விளையாட்டின் அரை இறுதிப் போட்டியில் ஹாங்காங் அணியிடம் தோல்வியடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றது.
- ஆடவர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் குமார் வேல்குமார், சித்தாந்த் ராகுல் கம்ப்ளே, விக்ரம் ராஜேந்திர இங்கேல், ஆர்யன் பால் ஆகியோரைக் கொண்ட அணி வெண்கலம் வென்றது. ஆனந்த் குமார் சென்னையைச் சேர்ந்தவர்.
- மகளிர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. போட்டியில் இந்தியாவின் கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல் சத்து, சஞ்சனா பத்துலா ஆகியோரைக் கொண்ட அணி வெண்கலம் வென்றது. கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன், பாய்மர படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2023)