TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுகள் – 18வது பதிப்பு

September 7 , 2018 2299 days 4314 0
ஆசிய விளையாட்டுகள் – 18வது பதிப்பு

- - - - - - - - - - -

ஆசிய விளையாட்டுகள் - வரலாறு
  • ஆசியாட் என்று அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுகள் ஆசிய கண்டத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பல விளையாட்டுகளின் நிகழ்ச்சியாகும். ஆசிய முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ளுகின்றனர்.
  • ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு ஆசிய விளையாட்டாகும்.
  • இந்தியாவில் புது தில்லியில் நடைபெற்ற முதலாவது ஆசியப் போட்டியில் தொடங்கி 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகள் வரை அனைத்து போட்டிகளையும் ஆசிய விளையாட்டுகள் பெடரேஷன் என்ற அமைப்பு (AGF – Asian Games Federation) நடத்தியது.
  • 1982 ஆம் ஆண்டு தொடங்கி ஆசிய விளையாட்டுகள் பெடரேஷனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் என்ற அமைப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது (OCA – Olympic Council of Asia).
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் (IOC – International Olympic Committee) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்தமாக ஒன்பது நாடுகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் 46 நாடுகள் பங்கு பெற்றுள்ளன. இஸ்ரேல் கடைசியாக 1974 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றது. தற்பொழுது இஸ்ரேலும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டது (2018).
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசி பதிப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை தென்கொரியாவில் இன்ச்சியான் நகரத்தில் நடத்தப்பட்டது.
  ஆசிய விளையாட்டுகள் - 2018
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18-வது பதிப்பை வியட்நாம் (ஹனோய்) நடத்துவதாக இருந்தது. ஆனால் பொருளாதார காரணங்களுக்காக வியட்நாம் ஏலத்தில் இருந்து விலகியது.
  • வியட்நாம் விலகியதையடுத்து, இந்தோனேஷியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பை (2018) நடத்த முன் வந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பை இந்தோனேஷியா இரண்டாவது முறையாக நடத்தியது. இதற்கு முன் 1962 ஆம் ஆண்டு ஜகார்தாவில் இது நடைபெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – 2018 ஆனது முதன்முறையாக ஜகார்தா மற்றும் பலேம்பேங் ஆகிய இரு நகரங்களில் நடைபெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜகார்தா மற்றும் பலேம்பேங் ஆகிய இரு நகரங்கள் நடத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் பல விளையாட்டுகளை மேற்கு ஜாவாவின் தலைநகரான பாண்டுங் (ஜாலா பாரத்), போகோர், பீகாசி, சீகாராங், சுபாங் மற்றும் திபோக் ஆகிய நகரங்கள் நடத்தின.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பில் முதன்முறையாக பென்கேக், சிலட், யுசு, ஜுஜுசு, பாராகிளைடிங், ஜெட் ஸ்கை மற்றும் மின்னணு விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றன.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் 2018-வது பதிப்பு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையிலான விளையாட்டுகளைக் கொண்டது. இதில் 462 விளையாட்டுகளை ஜகார்தா, பலேம்பாங் மற்றும் இதர நகரங்கள் நடத்தின. 2010 ஆம் ஆண்டில் குவான்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற விளையாட்டுகளை விட 14 விளையாட்டுகள் குறைவாக 18வது பதிப்பில் இடம்பெற்றன.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 18வது பதிப்பை இந்தோனேஷியாவின் அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
  • ஆசிய விளையாட்டுகளில் 19வது பதிப்பை 2022-ல் சீனா (ஹங்சோ) நடத்தவிருக்கிறது.
  இந்தியா மற்றும் ஆசிய விளையாட்டுகள்
  • புது தில்லியில் 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி ஆசிய விளையாட்டுகள் பெடரேஷன் 5 உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. அந்த 5 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. ஆசிய விளையாட்டுகள் பெடரேஷன் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 26-ல் கலைக்கப்பட்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது.
  • ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தெற்கு ஆசிய மண்டலத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளது. 1951ஆம் ஆண்டு முதல் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறது.
  • 1982 மற்றும் 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி நடத்தியது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அனைத்து பதிப்புகளிலும் பங்குபெற்ற ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகியவை மற்ற 6 நாடுகள் ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அனைத்து பதிப்பிலும் இந்தியா குறைந்தபட்சம் ஒரு தங்க பதக்கத்தையாவது பெற்றுள்ளது. 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் தவிர பதக்கப் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
  சிறப்பம்சங்கள் – ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018
  • முதன்முறையாக காணொளி விளையாட்டுகளைப் பயன்படுத்தி விளையாடப்படும் மின்னணு விளையாட்டுகள் (e-Sports) மற்றும் கனோ போலோ ஆகியவை காட்சி விளக்க விளையாட்டுகளாக இதில் இடம்பெற்றன. இந்த விளையாட்டுப் போட்டியில் 6 காணொளி விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் கொரிய ஒன்றிணைப்பு கொடியுடன் இணைந்து பங்கு பெற்றன. சில போட்டிகளில் முதன்முறையாக இரு அணிகளும் இணைந்து ஒரு அணியாக பங்கு பெற்றன. மேலும் இவ்வாறு இணைந்து பங்குபெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் முதலாவது ஒரு தங்கப் பதக்கத்தையும் அது பெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் ஒன்றிணைந்து பங்கு பெற்றன.
  • இந்த 18வது பதிப்பில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அனைத்து 46 உறுப்பினர்களும் பங்கு பெற்றன.
  • தொடக்க விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குவைத் நாடு தனது சொந்த கொடியுடன் பங்குபெற அனுமதிக்கப்பட்டது.
  தொடக்க விழா, சின்னம், இசைத் தொகுப்பு – 2018 தொடக்க விழா
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பன் தொடக்க விழாவானது 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியில் யோகியகர்தாவிற்கு அருகில் உள்ள 9வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்பனன் என்ற இந்து கோயிலின் பிரம்மா இடத்தில் நடைபெற்றது.
சின்னம்
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பின் சின்னமானது கேலொரா புங் கர்னோ விளையாட்டு அரங்க வடிவத்திலிருந்து எடுக்கப்பட்டது. இச்சின்னமானது வண்ணமுள்ள வட்டமாகும். உலகம் வியக்கும் வகையில் பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாடுகள் பங்குபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ‘ஆசியாவின் ஆற்றல்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இசைத் தொகுப்பு
  • 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இந்தோனேஷிய ஆசிய விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் குழுவால் ஆசியா விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பிற்கான இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த இசைத் தொகுப்பானது “ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 : ஆசியாவின் ஆற்றல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பின் தொடக்க விழாவில் கொடி அணி வகுப்பில் இந்தியாவின் சார்பாக நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா பங்குபெற்றது.
  • இந்த 18வது பதிப்பின் நிறைவு விழாவில் இந்தியா ராணி ராம்பால் தலைமையில் பங்குபெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 18வது பதிப்பின் ஜோதி 2018 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
  • இந்த போட்டியின் மூன்று சின்னங்கள் : பின் பின், அடுங் மற்றும் காகா.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்கங்கள்
  • தொடர்ந்து பத்து ஆண்டுகளாக பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • 18வது பதிப்பின் சிறந்த விளையாட்டு வீரராக ஜப்பானிய நீச்சல் வீரர் ரிகாகோ இக்கி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – முக்கியக் குறிப்புகள்
  • 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா விளையாட்டு சேர்க்கப்பட்டது. 18வது பதிப்பில் இந்தியா முதன்முறையாக இந்த விளையாட்டில் பதக்கம் வென்றுள்ளது. ரேகு விளையாட்டில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் காலிறுதியில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் முதலாவது இந்தியப் பெண் வீராங்கனையாக ரகி சர்னோபேட் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலாவது இந்தியப் பெண் மல்யுத்த வீரராக வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முதலாவது பதக்கத்தை சாய்னா நேவால் பெற்றுள்ளார். இவர் அரையிறுதியில் வீழ்ச்சியுற்ற பிறகு வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை சென்ற முதலாவது இந்திய வீராங்கனையாக V. சிந்து உருவெடுத்துள்ளார். இவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டின் முதலாவது வீரராக நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதலாவது இந்திய குத்துச்சண்டை வீரராக விகாஸ் கிருஷ்ணன் யாதவ் சாதனை படைத்துள்ளார்.
  இந்தியாவின் சாதனைகள்
  தமிழ்நாட்டின் சாதனைகள்
  • R. ஸ்ரீஜேஸ் – வெண்கலப் பதக்கம் – ஹாக்கி
  • ஆரோக்ய ராஜிவ் – வெள்ளிப் பதக்கம் – ஆண்கள் மற்றும் கலப்பு 4X400மீ ரிலே.
  • தருண் அய்யாசாமி – வெள்ளிப் பதக்கம் – ஆண்களுக்கான 400மீ தடை ஓட்டம்.
  • தீபிகா பல்லீகல் கார்த்திக் – வெள்ளிப் பதக்கம் – ஸ்குவாஷ்
  • ஜோஸ்னா சின்னப்பா – வெண்கலப் பதக்கம் – ஸ்குவாஷ்
  • சுனயானா குருவில்லா – வெள்ளிப் பதக்கம் – ஸ்குவாஷ்
  • சத்யன் - வெண்கலப் பதக்கம் - டேபிள் டென்னிஸ்
  • அஜந்தா சரத் கமல் - வெண்கலப் பதக்கம் - டேபிள் டென்னிஸ்
  • அமல்ராஜ் - வெண்கலப் பதக்கம் - டேபிள் டென்னிஸ்
  • டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மூவருக்கும் தமிழக முதல்வர் தலா ரூ. 20 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
  • ஆசியப் போட்டியில் 400 மீ கலப்பு ரிலே போட்டியில் ராஜீவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 400 மீ தடை ஓட்டப் போட்டியில் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர்களை கௌரவிக்கும் விதமாக 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி தமிழக அரசு தலா ரூ. 30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
 

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்