- சீனாவின் ஹாங்சூ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை (செப். 23) முறைப்படி தொடங்குகின்றன. 45 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் 40 விளையாட்டுகளிலிருந்து 481 போட்டிகள் நடைபெற உள்ளன. இத்தொடரில் இந்தியா சார்பில் 324 மகளிர், 331 ஆடவர் என மொத்தம் 655 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் சாதிக்க வாய்ப்புள்ள அணிகள், வீரர்கள் யார்?
ஈட்டி எறிதல்
- தடகள விளையாட்டில் இந்தியாவின் தங்க மகனாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கிறார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர், தொடர்ந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2023இல் உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்க மழையைப் பொழிந்தார்.
- ஈட்டி எறிதலில் 89.94 மீட்டர் வீசியது நீரஜ்ஜின் சாதனையாக உள்ளது. 90 மீட்டரைக் கடப்பதை அவர் இலக்காகக் கொண்டிருக்கிறார். இந்த முறை புதிய சாதனையோடு தங்கப் பதக்கத்தை நீரஜ் வெல்லக்கூடும்.
குத்துச்சண்டை
- டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் உள்பட 6 வீராங்கனைகள் ஆசிய விளையாட்டிப் போட்டியில் பங்கேற்கின்றனர். இவர்களில் நிஹத் ஜரீன் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- ஏனெனில் 2022 காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2022, 2023 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் எனத் தொடர்ந்து தங்கத்தை தட்டித் தூக்கி வந்திருக்கிறார். 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் நிஹத் ஜரீன், ஆசிய போட்டியில் வெற்றி பெற்றால் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெறுவார். எனவே முழு திறமையையும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
ஆடவர் ஹாக்கி அணி
- 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2022 காமன்வெல்த்தில் வெள்ளி, 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் என தொடர்ந்து முழு திறனையும் வெளிப்படுத்தி வருகிறது ஆடவர் ஹாக்கி அணி. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்திய அணி திருப்தி அடைந்தது.
- அப்போது அணியின் விளையாட்டுத் திறன் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. ஆனால், தற்போது ஆடவர் அணி தொடர்ச்சியாக சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திவருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றால், 2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெறலாம் என்பதால், இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
டென்னிஸ்
- டென்னிஸில் 43 வயதிலும் சிறந்த விளையாட்டுத் திறனை இந்திய வீரர் ரோகன் போபண்ணா வெளிப்படுத்தி வருகிறார். இரட்டையர் பிரிவில் போபண்ணா தங்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் திவிஜ் ஷரனுடன் இணைந்து தங்கம் வென்றார்.
- இந்த முறை திவிஜ் இல்லை என்றாலும் போபன்ணா தங்கம் வெல்ல வாய்ப்பு அதிகம் உண்டு. அண்மைக் காலமாக ஏடிபி டூர் பட்டம், விம்பிள்டனில் அரையிறுதி, அமெரிக்க ஓபனில் இரண்டாம் இடம் என அசத்தியிருக்கிறார் போபண்ணா.
- ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் அறிமுகமாகின்றன. இரண்டு அணிகளுமே பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆடவர் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகளிர் அனி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் அறிவிக்கப்பட்டாலும் இரண்டு போட்டிகளில் விளையாட கவுருக்கு தடை இருப்பதால், ஸ்மிருதி மந்தனா தலைமயில் மகளிர் அணி களமிறங்கும். முக்கியமான மற்ற ஆசிய ஆடவர் அணிகள் உலகக் கோப்பையில் விளையாடுவதால் இரண்டாம் கட்ட இந்திய ஆடவர் அணி சுலபமாகப் பதக்கம் வெல்லக்கூடும். ஆசியாவில் இந்திய மகளிர் அணி வலுவாக இருப்பதால் அந்த அணியும் சாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
வில்வித்தை
- வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா மூலம் பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், வில்வித்தை உலகக் கோப்பைகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை ஜோதி சுரேகா வென்றிருப்பதே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
- இந்த ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பெண்கள் குழு போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பிரனீத் கவுர், அதிதி சுவாமியுடன் இணைந்து ஜோதி வென்றார். 27 வயதான ஜோதி மகளிர் அணிப் பிரிவில் சாதிக்கும் முனைப்போடு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாட்மிண்டன்
- பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி அந்தச் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தரவரிசையில் இந்த ஜோடி மூன்றாமிடத்தில் உள்ளது.
- இந்த ஜோடி சிறப்பான ஃபார்மில் இருப்பதும் இன்னொரு பிளஸ். 2022 இந்தியன் ஓபன், தாமஸ் கோப்பை, 2022 காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் என இந்த ஜோடி சிறப்பான வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. 2023இல் இந்த ஜோடி ஸ்விஸ் ஓபன், இந்தோனேசிய ஓபன், கொரியா ஓபன், ஆசிய சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது. எனவே, இந்த வெற்றி ஆசிய விளையாட்டுத் தொடரிலும் தொடர வாய்ப்புகள் உள்ளன.
- தமிழகத்திலிருந்து 42 பேர்: 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 பேர் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் 10 பேர், கைப்பந்தாட்டத்தில் 6 பேர், பாய்மர படகில் 6 பேர், ஸ்குவாஷில் 2 பேர், செஸ்ஸில் 4 பேர், கூடைப்பந்தில் ஒருவர், ரோலர் விளையாட்டில் மூவர், கால்பந்தில் மூவர், டேபிள் டென்னிஸில் இருவர், டென்னிஸில் ஒருவர், சாப்ட் டென்னிஸில் ஒருவர், வாள்வீச்சில் ஒருவர், துப்பாக்கிச் சுடுதலில் ஒருவர், துடுப்புப் படகில் ஒருவர் என 42 பேர் பங்கேற்கிறார்கள்.
துப்பாக்கிச் சுடுதல்
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 19 வயதேயான ருத்ராங்ஷ் பாட்டீல் மீது நம்பிக்கை கூடியிருக்கிறது. இந்த ஆசிய போட்டியில்தான் ருத்ராங்ஷ் அறிமுகமாகிறார். அப்படியிருந்தும் அவர் மீது நம்பிக்கை ஏற்பட முக்கிய காரணம், 2022 உலக சாம்பியன்ஷிப்பில் அவர் தங்கப் பதக்கம் வென்றதுதான்.
- அதேபோல 2023இல் கெய்ரோ, போபாலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பைகளில் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை ருத்ராங்ஷ் வென்று, தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார். அந்த வெற்றிப் பயணம் ஆசிய விளையாட்டிலும் தொடராதா என்ன?
தடகளம்
- ஆசிய விளையாட்டுப் போட்டியில் டெக்கத்லான் போட்டியில் தேஜஸ்வின் சங்கர் சாதிப்பார் என்கிற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. 24 வயதான அவர், 2023 ஏப்ரலில் அரிசோனாவின் டக்சனில் நடைபெற்ற போட்டியில் 7648 புள்ளிகள் பெற்று சாதித்தார்.
- ஜூனில் நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7576 புள்ளிகள் ஈட்டி ஆசிய விளையாட்டுத் தகுதிப் பெற்றார். கடந்த ஜூலையில் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 7527 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றிகள் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
பளுதூக்குதல்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்குப் பதக்க கணக்கைத் தொடங்கி வைத்தவர் மீராபாய் சானு. இவர் 2014 இன்சியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் அறிமுகமானார். அப்போது அவரால் ஒன்பதாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
- என்றாலும் அப்போது முதலே சீரான வளர்ச்சியை மீராபாய் காட்டி வந்தார். காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடினமான பிரிவில் மீராபாய் இடம் பிடித்திருந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக் போல சாதிப்பார்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2023)