TNPSC Thervupettagam

ஆசிரியர்களும் கையூட்டும்: ஓர் எதிர்வினை

February 17 , 2024 341 days 215 0
  • கல்வித் துறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் எனப் பல்வேறு தரப்புகளைக் குறித்தும் உயர்கல்வித் துறையில் புலப்படாத பக்கங்களைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவருபவர் ஓய்வுபெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான பெருமாள்முருகன். அந்த வகையில் 27.01.2024 அன்றுஅருஞ்சொல்இதழில் வெளியானஆசிரியர்களும் கையூட்டும்எனும் கட்டுரை பரவலான வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இட்டுச் சென்றது. இது தொடர்பில் வாசகர் சா.விஜயகுமார் எழுதியுள்ள இந்த எதிர்வினை இங்கு வெளியாகிறது.
  • எழுத்தாளர் பெருமாள்முருகனின்ஆசிரியரும் கையூட்டும்என்கிற கட்டுரையை வாசித்தேன். பேராசிரியர் பெருமாள்முருகன் துரோகி அல்ல, பேராசிரியர் என்னும் பதவிக்கு மிகச் சரியான நியாயம் செய்கிறார். இதைச் சொல்ல நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் அறம் வழுவாத வாழ்வை வாழ்ந்திருக்கிறேன் என்கிற நிமிர்வும், நெஞ்சுரமும் வேண்டும்; மிகத் தைரியமான பணி. வெளியிடும்அருஞ்சொல்இதழும் பாராட்டுக்குரியது.
  • கல்வித் துறையில் நிகழும் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைளை வெளியில் இருக்கும் வேலை தேடுவோர் அல்லது பாதிக்கப்பட்டோர் பேசுவதற்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியர் / முதல்வர் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பின்னவர் தகுதி பற்றிக் கேள்விகள் எழாது. ஆனால், அதைச் சொல்வதற்கான தகுதி சிலருக்கே உண்டு. இல்லையென்றால் இத்தகு விஷயத்தை சூழலுக்கு உள்ளிருந்து நாம் பொதுவெளியில் இறுதியாகக் கண்டது எப்போது? பேராசிரியரைத் துரோகி என்றழைப்பதற்குக் காரணம் என்ன? ஆசிரியர்கள் என்னும் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் என்பதாலா? இது உள்ளிருந்து எழும் உண்மை என்பதாலா? அரசதிகாரமும் கல்வித் துறையும் இணையும் புள்ளியில் இதற்கு மேலும் கையூட்டுகள் புழக்கத்தில் உண்டு என்பதாலா?
  • கொஞ்சம் விரிவாகவே பேசுவோம், இது இந்திய மாநிலம் எதற்கும் பொருந்தக் கூடியது.

உதவிப் பேராசிரியர் பணி நியமனம்

  • கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சென்ற வருடம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது; அதற்கு முன் நேர்முகத் தேர்வுதான்‌. நேர்முகத் தேர்வுகள் எப்படியெல்லாம் நடக்கும் என்பது அங்கு சென்று வந்தவர்களைக் கேட்டால் உதவிப் பேராசிரியர் பணியின் சந்தை மதிப்புத் தெரியும்.
  • கேரளத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான சந்தை மதிப்பு நாற்பது இலட்சங்கள்; அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அறுபது லட்சத்திற்கும் மேல். மதம் / சாதியைப் பொறுத்து தள்ளுபடியும் உண்டு. சமூக மதிப்பு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட மதிப்புறு பலன்களால், வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக வைப்பதைக் காட்டிலும், தொழில் தொடங்குவதைக் காட்டிலும் சிறந்த திட்டமாக இது கருதப்படுகிறது. ஆசிரியர் பணியிலிருப்பவருக்குத் திருமணச் சந்தையில் நல்ல விலை உண்டு, போட்டதில் பாதியை வரணிடம் வசூலிக்கலாம் என்கிற எதிர்கால நலத் திட்டங்களையும் உள்ளடக்கியதே ஆசிரியர் பணியின் சந்தை விலை.
  • இதை விமர்சித்து 2022இல் கேரள முன்னாள் சட்ட அமைச்சர் .கே.பாலன் அரசு உதவிபெறும் பள்ளி / கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களையும் அரசு நுழைவுத் தேர்வைக் கொண்டே நிரப்ப வேண்டும் என்றார்.1 அதற்கு அந்நிறுவங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதே ஒழிய, வேலை தேடுவோர், ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்வோர், முனைவர் பட்ட மாணவர்கள், பலகைக்கழக மாணவர்கள், மாணவர் அரசியல் அமைப்புகளிடமிருந்து இருந்து ஆதரவோ எதிர்ப்போ இல்லை.
  • தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். இங்கு இருக்கும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் நியமனங்கள் அரசு விதிப்படிதான் நடக்கின்றன எனச் சொல்ல முடியுமா? அல்லது அவற்றையெல்லாம் பாலன் முன்மொழிந்ததுபோல் அரசிடமே வழங்கிவிடுவது ஏற்புடையதா? அரசால் நிதி நல்கப்பட்டு, அரசால் சம்பளம் கொடுக்கப்படும் ஆசிரியர்களை அரசு நியமிப்பதுதானே நியாயம்? அதைத் தமிழ்நாடு அரசு ஏன் துவங்கிவைக்கக் கூடாது? இது தனிப்பட்ட ஆளாக என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, சென்ற செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் திருநாவுக்கரசும் இதையேதான் சொன்னார்.
  • இந்த வருடம் பிப்ரவரியில் ஆசிரியர் தேர்வு வாரியம் 4000 பணிக்கான தேர்வை நடத்தும் என்கிறார்கள்; இதற்கிடையே ‘டிஎன்எஸ்ஈடி’ (TNSET) எனும் தகுதித் தேர்வு நடக்குமா என்கிறார்கள் காத்திருப்போர். இதற்குமுன் செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி நிரந்தரமாகவில்லை எனும்போது, பணி நிரந்தரத்திற்குப் போராடும் கௌரவ விரிவுரையாளர்கள் ஒருபுறம்; செட் தேர்வில் தேர்ச்சி இருந்தாலும் அவர்களுக்கென சம்பள வரைமுறைகள் இல்லை என்பதால் தனியார் கல்வி நிறுவனங்களால் சுரண்டப்படுபவர்கள் ஒருபுறம். இப்படியிருக்கிறது ஆசிரியராக விரும்புவர்களின் நிலை.
  • ஆசிரியர் பணியை அடைவதற்கு இவ்வளவு குறுக்கு வழிகள் இருக்கும்போது, கல்வியையும் மதிப்பெண்ணையும் மட்டுமே கொண்ட ஒருவர் நேர்மையான வழியில் உள்நுழைவதற்கான வழிகள் இல்லாதபோது, கல்வித் துறை எங்ஙனம் புனிதமானதாக இருக்கும்? கையூட்டுக் கொடுத்துப் பெற்ற பணியிலிருப்பவர் போட்ட பணத்தை எடுக்கும் முதலீட்டுத் திட்டமாகவே ஆசிரியர் பணியைப் பார்ப்பார். எனவேதான் இவர்கள் கையூட்டு வாங்குவது, வகுப்பிற்கு வராமலிருப்பது, அர்ப்பணிப்பில்லாத அற்பர்களாய் இருப்பது, மாணவர்களை, சக பணியாளர்களை இனத்தால், மதத்தால் வேறுபடுத்தி நடத்துவது எனக் கல்வி நிலையங்களைக் கீழ்மைகளால் நிறைக்கிறார்கள்.
  • கூடவே, சிறுமை நிறைந்த இத்தகு ஆளுமைகள் மேல் மாணவர்களுக்கு இயல்பாகவே ஒரு விலக்கமும், மரியாதையின்மையும் ஏற்படுவதை உணர்ந்தே இருக்கும் இவர்கள், அவர்களின் எதிர்காலத்தைத் தங்கள் அகங்கரத்திற்குப் பலியிட்டு நிறைவடைவதும் உண்டு. ஒட்டுமொத்தமாக, துறைசார் அறிவின்மை, முதிர்ச்சின்மை உள்ளிட்ட காரணங்களால் நமது கல்விச்சூழலின் தரத்தைப் பெருமளவு பாதிக்கிறார்கள். இம்முறை தொடர்வது மாணவர் நலனுக்கோ, மாநில நலனுக்கோ, நாட்டிற்கோ நல்லதல்ல.

ஆசிரியர்களின் பணியிட மாறுதல்

  • பள்ளியோ கல்லூரியோ இரு ஆசிரியர்களுக்கிடையேயான மனமொத்த பணிமாறுதல் அல்லாதவற்றுக்கு இங்கு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கிற விஷயம் இங்குள்ள அரசுப் பள்ளி / கல்லூரி ஆசிரியர்களுக்குத் தெரியாததா? அப்படியென்றால் ஆசிரியர் தவிர்த்து கல்வித் துறையில் வாங்கும் இடத்தில் இருப்பவர் எவர்?

குற்றமும் தண்டனையும்

  • நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள், மாநில அளவில் உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, எம்.ஏ, எம்.ஃபில் பட்டங்கள், கற்பித்தல் அனுபவம் பெற்ற எழுத்தாளரிடம் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட தொகை நாற்பது லட்சங்கள்; அதுவும் எட்டு வருடங்களுக்கு முன்பு.
  • பிறகு அதே பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தும்போது, கழிவறைக் குழாயில் பணத்தை ஒளித்துவைத்திருந்ததும் கண்டறியப்பட்டு, தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு கையும் களவுமாக பிடிபட்டதெல்லாம் வரலாறு. அவருடன் அவருக்கு உதவிசெய்த பேராசிரியர்(கள்) தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறைக்குச் சென்றதெல்லாம் நாம் அறிந்ததே.4 தற்போது வழக்கு நடந்துகொண்டிருப்பதும் அவர்கள் மீண்டும் பணியில் இருப்பதும் எனக்குப் புதிய செய்தி. அதிர்ச்சியாக இருக்கிறது.

நடைமுறை இப்படி இருக்கையில், சட்டத்தின் நடவடிக்கைகள் இப்படி இருக்கையில் நாம் யாரை நம்புவது? அல்லது இவையும் மீடூ இயக்கம்போல் ஒரு குற்றவாளியை அம்பலப்படுத்துவது மட்டும்தானா

  • ஒரு அரசுக் கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்கிற கனவோடு அரசுக் கல்லூரியிலிருந்து வெளியே வந்தவனாக, மாநில, தேசிய அளவிலான உதவிப் பேராசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவனாக, முனைவர் பட்ட இறுதியாண்டு மாணவனாகச் சொல்கிறேன்: எங்களைப் போன்றவர்களுக்குக் கண்ணெதிரில் நேர்வழி என்கிற ஒன்று இல்லை.

நன்றி: அருஞ்சொல் (17 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்