TNPSC Thervupettagam

ஆசிரியர் - மாணவர் இடையில் ‘கெமிஸ்ட்ரி’ வேலை செய்ய வழி

January 12 , 2024 313 days 352 0
  • குழந்தைகள் கேட்கும் வினாக்கள் பல நேரத்தில் ஆசிரியர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது. அந்த வகையில் குழந்தைகள் கேட்ட சில முக்கியமான வினாக்களைப் பார்ப்போம். வாசிக்கும் போது குறிப்பேடு, பேனாவோடு இருக்க வேண்டியது ஏன், எந்தெந்த கருத்துகள் வரும்போது குறிப்பெடுக்க வேண்டும் வகுப்பில் ஆசிரியர் தீவிரமாக விளக்கிக் கொண்டிருந்தார்.
  • ஆனால் நான்கைந்து மாணவர்கள் ஆசிரியரின் பேச்சைக் கவனிக்காமல் கேலிப்புன்னகையோடு தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள். பேச்சை இடையில் நிறுத்திய ஆசிரியர் நான் சொன்ன கருத்துகளில் சிரிக்க என்ன இருக்கு? என்று கேட்டார்.

எந்த காலத்தில இருக்கீங்க

  • அந்த வாய்ப்புக்காக காத்திருந்ததுபோல் ஒரு மாணவர் எழுந்தான். நீங்க எந்த காலத்தில சார் இருக்கீங்க.. குக்கு எப்எம். ஸ்போட்டிபை, ஆடிபிள்... என்று பல ஆப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன.
  • ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் அது உங்களுக்காக வாசித்துக் காட்டும் சார். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். தேவையானதை, சுவையானதை மட்டும் தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வாசிக்கணும், குறிப்பெடுக்கணும்? என்றான்.
  • இதுபோல கையெழுத்து அழகாக இருக்க வேண்டுமென ஆசிரியர் பேசும்போதும், நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? ஸ்பீச் டு டெக்ஸ்ட் என்று ஓர் ஆப்பு இருக்கிறது. நாம் எதையாவது பேசினால் அதை தட்டச்சு செய்து தந்துவிடும். அப்புறம் எதற்கு எழுத வேண்டும்? என்றனர் மாணவர்கள்.
  • இவற்றையெல்லாம் விட பள்ளிக்கூடம் என்ற அமைப்பையே அசைத்துப் பார்க்கும் இந்தக் கேள்வி நம்மை திடுக்கிடச் செய்யும். எல்.கெ.ஜி. வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை பதினான்கு ஆண்டுகள் நாங்கள் பள்ளியில் இருந்தோம். எங்களுடைய விலை மதிப்பற்ற நேரத்தை, காலத்தை உங்களுக்காகத் தந்தோம்.
  • ஆயிரக்கணக்கான மணி நேரம் உங்கள் பேச்சைக் கேட்டோம். ஆயிரக்கணக்கான பாடப்புத்தகப் பக்கங்களைப் படித்தோம். ஆயிரக்கணக்கான குறிப்பேட்டுப் பக்கங்களை எழுதி நிரப்பினோம். இருந்தும் ஏன் எங்கள் மொழித்திறன் வளரவில்லை?

சின்னஞ்சிறு மனிதர்கள்

  • இத்தகைய எண்ணங்களோடு, கேள்விகளோடு வகுப்பில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையால் ஆசிரியர் சொல்வதை எப்படி முழுமனதோடு உள்வாங்க முடியும்? ஆசிரியர் நடத்தும் செயல்பாடுகளில் எப்படி முழுமையாக ஈடுபட முடியும்?
  • குழந்தைகளால் தங்களின் மனத்தில் தோன்றும் இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி பெற்றோரிடமும் பேச முடிவதில்லை. ஆசிரியர்களிடமும் பேச முடிவதில்லை. குழந்தைகளின் கற்றலை இது பாதிக்கும். இந்த பாதிப்பு ஆசிரியரின் உற்சாகத்தைப் பெரிதும் குறைத்துவிடுகிறது. நாங்கள் இவ்வளவு முயற்சி செய்கிறோம். இருந்தும் அதற்கான பலனை காணமுடிவதில்லை எனும்போது மெல்ல மெல்ல அவர்கள்தம் செயல்களில் ஓர் இயந்திரத்தனம் புகுந்து விடுகிறது.

தீர்வு என்ன

  • ஆசிரியர்கள் பாடப்பொருளோடு சேர்த்து பலவற்றைப் பற்றியும் குழந்தைகளிடம் பேச வேண்டியிருக்கிறது. சில நாட்கள் எதுவும் செய்யாமல் குழந்தைகள் பேசுவதைக் கேட்க வேண்டியிருக்கிறது. எதுவும்தெரியாதவர் போல் நடிக்க வேண்டியிருக்கிறது.
  • அன்றைய செய்தியைப் பற்றி, பார்த்த காணொளி பற்றி, கைபேசியில் கற்றுக்கொண்ட புதிய செயலியைப் பற்றி... என கலந்துரையாடல் விரிந்துசெல்ல வாய்ப்பளிக்க வேண்டியிருக்கிறது. இது ஆசிரியர்-மாணவர் உறவை வலுப்படுத்தும். மெல்ல அவர்களுக்கு இடையில் ஒருகெமிஸ்ட்ரிவேலை செய்யத் தொடங்கும்.
  • உண்மையான கற்றல் ஆரம்பமாகும். ஆனால் உணவு இடைவேளை நேரத்தைக்கூட அட்டவணையில் உட்படுத்தி என்னென்ன செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிடுவது எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கும் மனம் என்று ஒன்று இருக்கிறது. அது அட்டவணைக்குள் அடங்காது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்