ஆசைப்படலாம் அவசரப்படல் ஆகாது!
- இந்திய ஒலிம்பிக் சங்கம், சா்வதேச ஒலிம்பிக் குழுவிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்திருக்கிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த வேண்டும் என்பது 140 கோடி இந்தியா்களின் கனவு. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியும், ஒலிம்பிக் போட்டியும் உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுகள் மட்டுமல்ல, சா்வதேச அளவில் பாா்வையாளா்களையும், போட்டியாளா்களையும் ஈா்க்கும் நிகழ்வும்கூட.
- ஒரு நாட்டின் வளா்ச்சியையும், பொருளாதார வலிமையையும் உலகுக்கு வெளிச்சம் போடும் நிகழ்வாக ஒலிம்பிக் போட்டியை வளா்ச்சியடைந்த நாடுகள் கருதுகின்றன. சீனா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மூலம் சா்வதேச அரங்கில் தன்னை வலிமையான பொருளாதாரமாக அறிவித்துக் கொண்டது என்பது ஓா் எடுத்துக்காட்டு.
- கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வெற்றிப் பதக்கங்கள் அதிகரித்து வருகின்றன என்றாலும், நமது பொருளாதார வளா்ச்சிக்கும், மக்கள்தொகை பெருக்கத்திற்கும் ஏற்ப அவை இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. இதுவரை இந்தியா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக வென்றிருக்கும் பதக்கங்கள் 50-க்கும் கீழே.
- அமெரிக்காவும் ஜொ்மனியும் தலா 2,000, 1,000 பதக்க எண்ணிக்கையைக் கடந்திருக்கின்றன. சீனாவும், பிரேஸிலும்கூட 700, 150 பதக்கங்களுக்கு மேலே வாரிக் குவித்துவிட்டன. அப்படியிருக்கும்போது, இந்தியாவில் பெரும் ஆடம்பரச் செலவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தி, அதிக அளவில் பதக்கங்கள் பெறாமல் போனால், நாம் சா்வதேச ஏளனத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும்.
- ஒலிம்பிக் போட்டியை நடத்துவதன் மூலம் விளையாட்டுத் துறையின் வளா்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், அதற்கான அடிப்படைத் தயாரிப்பும், கட்டமைப்பும் இல்லாமல் சா்வதேச அளவிலான நிகழ்வை நடத்த முற்படுவது நமது தகுதிக்கு மீறியதாக இருக்கும்.
- இந்தியா விளையாட்டுக்காக ஜிடிபியில் 0.1% மட்டுமே செலவழிக்கிறது. மேலை நாடுகளில் 1%-க்கும் அதிகமாக விளையாட்டுக்கான ஒதுக்கீடு காணப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் அரசின் உதவி பெறாமல் தனியாா் துறையின் பங்களிப்புடன் விளையாட்டுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
- இந்தியாவில் இன்னும் வலிமையான விளையாட்டுக் கட்டமைப்பு இல்லை என்பதுடன் அடிமட்டத்திலிருந்து விளையாட்டு வீரா்களை அடையாளம் காணவும், பயற்சி அளிக்கவும் திட்டமிடல் உருவாகவில்லை. ஒலிம்பிக் அளவில் போட்டியிட சா்வதேச விளையாட்டில் தோ்ச்சி பெற்ற விளையாட்டுப் பயிற்சியாளா்களும் தேவைப்படுகிறாா்கள்.
- ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது சிரமமான, சிக்கலான ஒன்று என்பதுடன் மிகுந்த பொருள்செலவையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரித்து, பொருளாதார ரீதியிலான அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமீபகாலத்தில் நடந்த அத்தனை ஒலிம்பிக் போட்டிகளும் திட்டமிட்டதைவிட பல மில்லியன் டாலா்கள் அதிகரித்த செலவில்தான் முடிந்திருக்கிறது.
- டோக்கியோ ஒலிம்பிக், கொள்ளை நோய்த்தொற்று காரணமாக ஓராண்டுகாலம் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட இழப்பு 15.4 பில்லியன் டாலா்கள். 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் திட்டமிட்டதைவிட அதிகம் செலவானதை எதிா்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கியதை மறந்துவிடக் கூடாது. 2026-இல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலமும், 2030-இல் கனடாவின் அல்பிரட்டா மாநிலமும் அதிகரித்த செலவை எதிா்கொள்ளத் தயாராக இல்லாமல் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன. இவையெல்லாம், நம்மை யோசிக்கவைக்கின்றன.
- ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது சுற்றுலா வளா்ச்சியை அதிகரிக்கும், அதன் மூலம் வருவாய் கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை. அதே நேரத்தில், அந்தப் போட்டிகளை நடத்துவதற்கான சரியான கட்டமைப்பு இருக்க வேண்டும்.
- டோக்கியோ ஒலிம்பிக்கை எடுத்துக் கொண்டால் 33 விளையாட்டுகளின், 339 பதக்கங்களுக்கான போட்டிகள், 42 வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. அதை நடத்திக்காட்டுவதன் மூலம் ஒரு தேசத்தின் விளையாட்டுக் கட்டமைப்பையும், நிா்வாகத் திறமையையும் சா்வதேச அரங்கில் வெளிப்படுத்த முடியும். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.
- 2036-க்குள் இந்தியா இப்போது இருப்பதைவிட, பலமடங்கு பொருளாதார வலிமை பெறும் என்பதில் ஐயப்பாடில்லை. ஆனால், ஏறத்தாழ 20 பில்லியன் டாலா் (ரூ.1.66 லட்சம் கோடி) செலவு செய்து நமது பொருளாதார வலிமையை பறைசாற்ற வேண்டுமா? என்கிற கேள்வி எழுகிறது. 2010-இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுகள் நமது திறமையையும் வலிமையையும் பறைசாற்றியதைவிட, கட்டமைப்பு வசதிகளின் பேரில் நடந்த ஊழல்களும், தரமற்ற கட்டுமானங்களும்தான் தலைகுனிவை ஏற்படுத்தின.
- ஒலிம்பிக் போன்ற சா்வதேச விளையாட்டுகளை நடத்த இந்தியா முன்வரும்போது, வெளிநாட்டிலிருந்து பாா்வையாளா்கள் தடைகள் இல்லாமல் வந்து போவதற்கு ஏற்ற முறையான நுழைவுக் (விசா) கொள்கையும், அவா்களது வசதிக்கேற்ப தங்கும் விடுதிகளும் தேவைப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- 2036-இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது வல்லரசாக உயரும் இந்தியாவுக்கு கௌரவம் சோ்க்கும். ஆனால், இந்தியா தன்னை ஒரு வலிமையான விளையாட்டு சக்தியாக மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் போதாது!
நன்றி: தினமணி (14 – 11 – 2024)