TNPSC Thervupettagam

ஆச்சரியப்படுத்தும் காக்கைகளின் அறிவாற்றல்

November 18 , 2023 419 days 266 0
  • காகங்கள் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. நாம் தினமும் பார்த்துப் பழகி வரும் நமது வீட்டின் செல்லமான அழையா விருந்தாளியான காகங்கள் புத்திசாலிகள். கதைகள் மூலமாகவோ அனுபவங்கள் மூலமாகவோ இதை நீங்களும் அறிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் விலங்கியல் இயல்பினைப் பற்றி நாம் அறிவோமா? நாம் பார்க்கும் காக்கை வகைக்கு இந்திய வீட்டுக் காகம் (Indian House Crow - Corvus splendens) என்று பெயர். இவை Corvidae (காக்கை) விலங்கியல் குடும்பத்தைச் சேர்ந்தவை.
  • இந்தக் குடும்பத்தில் காகங்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட வேறு சில பறவை இனங்களான Jackdaws, Magpies ஆகியவையும் அடங்கும். காக்கைக் குடும்பம்தான் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியாகக் கருதப்படுகிறது. அவற்றின் அறிவுத்திறன் குறித்துப் பற்பல பரிமாணங்களில் ஆய்வு நடத்த உலகில் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சிக் கூடங்கள் இருக்கின்றன.

தன்னை அறியும் ஆற்றல்

  • ஓர் உயிரினம் தன்னை ஓர் உயிரினமாகக் கருதி, தனது நடத்தை ஒவ்வொன்றும் தன்னால் உருவாக்கப்பட்டது என அறியும் ஆற்றலை சுய அடையாளம் காணுதல் எனலாம். இது ஒரு வகை சிறப்பு அறிவாற்றல். இந்த ஆற்றல் மனிதர்களுக்குச் சிறு வயதில் இருந்தே காணப்படுகின்றது. ஆனால், மனிதர்கள் அல்லாத வெகு சில உயிரினங்களே இத்தகைய ஆற்றலைப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று காகம். சுய அடையாளம் காணும் ஆற்றலை பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் கண்ணாடி சோதனை முறையைப் பயன்படுத்து கின்றனர். இந்தச் சோதனை முறையில், காகங்களின் முன் கண்ணாடி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வைப்பார்கள்.
  • பின்பு அதன் அலகின் அடிப்பகுதியில் காகத்தால் காண இயலாதவாறு சிவப்பு நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் புள்ளி ஒன்றை வரைவர். அந்தப் புள்ளிகளுள் சிவப்புப் புள்ளியை மட்டுமே காகங்களால் கண்ணாடி மூலமாகப் பார்க்க முடியும். சுய அடையாள ஆற்றல் இருந்தால் அந்தக் கண்ணாடி பிம்பத்தில் தெரிவது, தான்தான் என அறிந்து தங்களது உருவத்திலிருந்து அந்தச் சிவப்புப் புள்ளியை காகங்கள் அழிக்க முயலும் என்பது ஆராய்ச்சியின் அனுமானம். இந்தியக் காகங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆறில் நான்கு காகங்கள் அந்தச் சிவப்புப் புள்ளியை எடுக்க முயன்றது, அவற்றிற்கு சுய அடையாள ஆற்றல் உள்ளதாகத் தெரியவந்தது.
  • காகங்களின் குடும்பத்தை சேர்ந்த மற்ற பறவை இனங்களான Jackdaws, Magpie ஆகியவற்றுக்கும் இந்த ஆற்றல் உண்டு என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பறவைகளைத் தவிர சிம்பான்சீ, கொரில்லா போன்ற வாலில்லாக் குரங்குகள் (Great Apes), யானைகள், சில வகையான ஓங்கில்கள், வெகு சில உயிரினங்களிடையேதான் இந்த ஆற்றல் காணப்படுகிறது. அடுத்த முறை உங்கள் வீட்டின் அருகில் காகம்ஒன்று கண்ணாடியைப் பார்த்துக் கொண் டிருந்தால், அது உங்களையும் என்னையும் போல தன்னை சுயமாக அடையாளம் கண்டு, தனது பிம்பத்தை அது காண்கிறது என்பதை அறியுங்கள்!

உணவு சேமித்தல்

  • உயர்ந்த அறிவாற்றல் தேவைப்படும் செயல்களுள் ஒன்று Food Caching அதாவது உணவைச் சேமித்து, ஓரிடத்தில் பத்திரமாக வைத்தல். இப்படிச் செயல்பட, முதலில் நேரம் என்கிற ஒரு மனஉருவைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, இப்பொழுது தனக்குப் பசி இல்லை. எனினும் சற்று நேரம் கடந்த பின், தனக்குப் பசி எடுக்கும் எனக் காலத்தை அறிதல் வேண்டும். மேலும் உலகத்தை மற்றவர் பார்வையில் இருந்து பார்க்கும் திறன் வேண்டும். தனது கூட்டத்தில் உள்ள மற்ற பறவைகள் தனது உணவைப் பார்த்துவிட்டால், அதனை எடுத்து உண்ணும் சூழ்நிலை உருவாகலாம் என்று கணிக்க இயல வேண்டும். இந்த ஆற்றல் காக்கை குடும்பத்திலிருக்கும் பெரும்பாலான பறவைகளுள் காணப்படுகிறது.
  • ஏன் இந்தச் செயலை வீட்டு காகங்களிடம் நாமே பார்த்திருப்போம். பாதி உண்ட மீன், சிறிது சுவைத்த பழக்கொட்டை என நமது திண்ணைகளிலும் படிக்கட்டு ஓரத்திலும் காகங்கள் கொண்டு வந்து போடுகின்றனவே, எதற்கு? மற்ற காகங்களிடமிருந்து மறைத்து வைத்து Food Caching செய்யவே! இவ்வாறு காலத்தை அறிந்து உணவைச் சேமித்து வைக்கும் உத்தி, காக்கை இனத்தின் மகுடத்தில் மற்றொரு வைரமாக அமைகிறது.

கருவி வடிவமைப்பு

  • மனிதப் பரிணாம வளர்ச்சியின் முக்கியத் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படுவதில் ஒன்று மனித இனம் கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது. இந்தக் கருவிகள் (ஈட்டி போன்ற), மரங்களின் கிளைகளில் இருந்து, கற்கள் மூலம் செதுக்கி உருவாக்கப்பட்டவையாக இருந்திருக்க வேண்டும். உயிரினங்களில் மிகச் சில உயிரினங்களே இந்த ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. விலங்கினங்களிலேயே வாலில்லாக் குரங்குகளைத் தவிர காகங்கள் மட்டுமே சிறு பொருள்களைக் கொண்டு கருவிகளை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
  • உதாரணமாக கேலிடொனியன் காகம் எனும் ஒரு வகைக் காக்கை இனம் (Caledonian crow) கம்பியை அலகால் வளைத்து, உணவு இருக்கும் மூடியைத் திறக்க கருவியாக அதனைப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியில் கண்டறிப்பட்டுள்ளது. நாம் சிறு வயதில் கேட்டு வியந்த, காகமொன்று பானையின் உள்ளே கற்களைப் போட்டு தண்ணீர் குடித்த கதையின் பின்னால் உள்ள அறிவியலும் இதுவே!

எப்படி இவ்வளவு புத்திசாலித்தனம்

  • இவ்வகையான சிறந்த அறிவாற்றல் மற்ற பறவைகளிடம் இல்லாமல், காகங்களிடையே மட்டும் காணப்படுவதற்குக் காரணம் என்ன? காகங்கள் மேலே குறிப்பிட்ட செயல்களைச் செய்தபோது, அவற்றின் மூளையில் உள்ள செல்களின் செயல்பாட்டினை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். அந்த ஆராய்ச்சியில் ‘Nidopallium Caudolaterale' என்கிற மூளைப் பகுதியில் உள்ள செல்கள் மிகவும் அதிகமாகச் செயல்பட்டதாகக் கண்டறிந்தனர். இந்தப் பகுதி, மனிதர்களின் பெருமூளையின் முன்மடலுக்கு (Frontal Cortex) ஒப்பானது.
  • மேலும் மனிதர்களில் இந்த முன்மடல் பகுதியே உயர்ந்த அறிவாற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. வாலில்லாக் குரங்குகளின் பரிணாம வளர்ச்சியின்போது, மனிதர்களின் முன்மடல் பகுதி எவ்வாறு சிறப்பு செயல்பாடுகளைப் பெற்றதோ, அதுபோலவே ‘Nidopallium Caudolaterale'வும் காக்கைக் குடும்பத்தில் இருக்கும் பறவை இனங்களில் சிறப்பு செயல்பாடுகளைப் பெற்றுத் தோன்றியிருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் அனுமானிக்கின்றனர்.
  • இந்த வகை ஆராய்ச்சிகள், காகங்களின் பரிணாம வளர்ச்சியையும் வாலில்லாக் குரங்கினத்தின் பரிணாம வளர்ச்சியில் இருந்து அது எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்பதை அறியவும் உதவுகிறது. இவ்வாறு பல புத்திசாலித்தனமான அறிவாற்றல்களைப் பெற்று நமது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் காகங்களை சிறகுள்ள வாலில்லாக் குரங்கினம்' என ஆராய்ச்சியாளர்கள் அழைப்பதில் தவறொன்றும் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்