TNPSC Thervupettagam

ஆடுதொட்டி மாமிச நிலத்தின் வரைபடங்கள்

November 26 , 2022 710 days 480 0
  • சீமை ஓடுகள் வேய்ந்த கூரையின் கிழக்குப் பகுதியின் ஓடுகள் முற்றிலும் உதிர்ந்துள்ளன. பாதி உடைந்த ரீப்பாக்கள் மட்டுமே இடிந்த சுவரின் மேல் இருக்க, ஆங்காங்கே உடைந்த ஓடுகளுக்குள் தெரியும் வானத்தின் வழியே எட்டிப் பார்க்கும் பறவையின் அலகுகள். மூங்கிலில் தலைகீழாய்த் தொங்கும் தோலுரிக்கப்பட்ட மாடுகள். சிமென்ட் தரை எங்கும் அலையடிக்கும் ரத்தச் சமுத்திரத்தை அள்ளும் ரப்பர் வாளிகள். ரத்தத்தில் பீறிடும் தரையில் துடிதுடிக்கும் மாட்டின் அறுந்த கழுத்து.
  • ஈக்களின் ரீங்காரத்தில் அடுக்கப்பட்டிருக்கும் காதுகளும் நாக்குகளும் கூடவே நீலம் ஏறிய கண்களும். எஞ்சிய உறுப்புகள் சிதறிக் கிடக்கும் நடைபாதைக்கும் கிழக்கே அழுகிய மாட்டு எலும்புகளின் மீது அமர்ந்த பறவைகள் கண்களைக் கொத்தி உறிஞ்ச, பற்களும் கண்களும் ஒட்டிய தலை எலும்புகள் குண்டானில் அள்ளப்பட்டு கேன்டர் வண்டியில் ஏற்றப்படுகின்றன. இறைச்சி துண்டங்களுக்கு இடையே மனிதர்களும் மனிதர்களுக்கு இடையே இறைச்சி துண்டங்களுமாகக் காட்சி மாறி மாறி நகர்கிறது.
  • சென்னைப் புளியந்தோப்பிலுள்ள ஆடுதொட்டி 1903இல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது. மேற்கில் ஓட்டேரியும் வடமேற்கில் பெரம்பூரும் வடக்கே வியாசர்பாடியும் வடகிழக்கே பேசின் பாலமும் தெற்கே பட்டாளமும் சூழ இவற்றின் மையத்தில் அமைந்துள்ளது புளியந்தோப்பு. திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதி நகரமாய், பெருநகரமாய் சென்னை உருவாவதற்கு முன்பே கிராமமாக இருந்தது. பெயருக்கேற்றவாறே புளிய மரங்கள் நிறைந்த பகுதி இன்னும் அதன் புராதனத்தன்மையை இழக்காது இருக்கிறது. கண்கூசும் விளக்குகள் எங்கும் இல்லை. இருளை விலக்கிக் காட்டும் கருஞ்சிவப்பு ஒளியே எங்கும் நிறைந்துள்ளது.
  • பிரிட்டிஷார் வருகைக்குப் பிறகு பின்னி மில், ஆடுதொட்டி போன்ற ஆலைகளும் தொழிற்சாலைகளும் இங்கு அமைந்தன. சென்னையின் பிற இடங்களுக்குச் செல்லும் பெரும்பான்மை இறைச்சி இங்கிருந்துதான் போகிறது.
  • இப்பகுதிக்குச் சென்றாலே மாட்டுக்கறி காற்றில் மிதந்து நாசியைத் துளைத்த வண்ணம் இருக்கும். அழுகிய எலும்புகள் குவிந்துகிடக்கும் பகுதிக்குச் சென்றால் மட்டும் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம் அடிக்கும். மாட்டின் காயாத இரத்தம், இறைச்சித் துண்டுகள், மாட்டு எலும்புகள், சேறும் சகதியுமான கழிவுகள் என அத்தனையும் தேங்கிப்படிந்துள்ளன. நடைபாதையின் மீதே மாட்டின் காது, நாக்கு, கொம்பு, கால்கள் என அங்குமிங்குமாகச் சிதறிக் காணப்படும். கால்வாயிலும் சாலையோரமெங்கும் எலும்புகள் கலந்த சதைச் சகதி குவிந்துகிடக்கும்.
  • இந்தக் குவியலுக்கு நடுவே உள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே கோணிப்பைகளை விரித்துக் கூறு கூறாய் மாட்டுக்கறி விற்கப்படுகிறது. அதன் முனையில் மீன்பாடி வண்டியிலிருந்து இறக்கப்படும் ஆட்டுத்தோல்கள் பதப்படுத்தப்பட்டுப் பாண்டிச்சேரிக்குக் கொண்டுசென்று அங்கிருந்து அயல்நாடுகளுக்கு ஆடை உற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • ஆடுதொட்டியில் அம்பேத்கர் சாலைக்கு மேற்கே சுமார் 50 ஏக்கர் அளவில் காலியாக உள்ள இடம் இன்னும் பூர்வ கிராமத்தின் எச்சத்தைச் சுமந்திருக்கிறது. பின்னி மில்லின் எதிரே அமைந்துள்ள இதன் நுழைவாயிலில் குழிநீரில் ஊறிய மாட்டுத் தோலைக் கவ்வி இழுத்துச் சென்றது நாய். கொட்டாமணக்குச் செடிகள் விரவிக்கிடக்கும் நிலமெங்கும் கண்ணுக்கு எட்டும் தூரமிருந்த பச்சையத்தைச் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் மேய்ந்த வண்ணம் இருந்தன.
  • மணலி அருகே உள்ள சின்னமாத்தூரைச் சேர்ந்த சிறுவன் மேய்ப்பர்களில் ஒருவன். அவனின் இடது கன்னம் தசையற்று இருந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனைப் பிணவறையில் பணி செய்த அவனது தந்தை அளவுக்கு மீறி மது குடித்ததால் சிறுநீரகம் செயலிழந்து இறந்துள்ளார். அதன் பின் இவ்வேலைக்கு வர நேர்ந்ததாகச் சொன்னவனிடம் வருமானம் குறித்து கேட்டேன். உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்றபடி ஆடுகளை வளைத்து வர ஓடினான். எல்லை மீறும் ஆடுகளுக்குக் கற்கள் நிரப்பிய வெற்றுத் தண்ணீர்ப் போத்தலைக் குலுக்கிச் சத்தமிட்டான்.
  • ஆடுதொட்டிக்கு எதிரே அமைந்திருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புச் சிதைந்து, உருக்குலைந்து போர்க்காலத்தில் எஞ்சிய பகுதிபோலத் தோற்றம் அளித்தது. முக்கால்வாசிக் குடும்பங்கள் காலி செய்யப்பட்டு மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் இன்னும் அங்கு வசிக்கின்றனர். நாய் குரைக்கும் சத்தத்தை விரட்டிப் படியேற முயன்றபோது படிமுனைகள் உடைந்திருந்தன. சோடா பாட்டில் மூடிகளும் உடைந்தும் உடையாத மது போத்தல்களும் விரவிக் கிடந்தன.
  • அரசாங்கம் பல முறை காலி செய்யச் சொல்லியும் காலி செய்யாததால், தரைத் தளத்துப் படிகள் மட்டும் இடித்துத் தள்ளப்பட அவ்விடத்தில் குட்டியானை வண்டியை நிறுத்திக் கழற்றப்பட்ட கதவு, ஜன்னல்களுடன் ஒவ்வொரு பொருளாய் இறக்கிக்கொண்டிருந்தனர். மாட்டு எலும்புகள் கொட்டப்பட்ட அடுக்குமாடியின் ஓரம் அன்னை மரியாள் புழுதியைப் போர்த்தியிருந்தாள். புதைசாக்கடை செல்லும் கால்வாய் சீரமைப்புப் பணி சாலை வாகனங்களை நகர்த்தாமல் இயக்கிக்கொண்டிருந்தது. இடைவிடாது ஒலிக்கும் வாகனங்களின் ஒலிப்பான்கள் காதைப் பிளந்தன. தீபாவளி பண்டிகையை அறிவுறுத்தும் பட்டாசு மட்டும் அங்கு வெடிக்கப்படவே இல்லை.
  • ஆடுதொட்டிக்குத் தெற்கே உள்ளது டிக்காஸ்டர் சாலை. இங்கு கூண்டில் அடைக்கப்படாத அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. 14.09.1997 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் சிலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றியுள்ளார் வாழப்பாடியார். கூண்டற்ற அம்பேத்கர் சிலைகளைப் புளியந்தோப்புத் தெருக்களின் பல இடங்களில் காணலாம்.
  • தேங்கிய குண்டானில் ஒட்டியிருந்த மாட்டுச் சாணத்தை சாலையில் தேங்கிய மழைநீரில் அலசிக் கழுவியவனின் மேல் சேற்றை அள்ளி வீசிச் செல்கிறது வாகனம். ஆடுதொட்டி வாசலின் இடதுபுறமிருக்கும் ‘கேஜிஎஃப் ஹரிஃபா பிரியாணி சென்டர்’  மிகவும் பிரபலமான அதிகாலை பிரியாணி கடை. விடிவதற்கு முன்பு 3 மணிக்கே சுடச் சுட பிரியாணி இங்கே கிடைக்கும்.
  • சென்னையில் சில இடங்களில் கடிப்பதற்குக் கடினமான கறித்துண்டுகள் இருக்கும். ஆனால், ஹரிஃபா கடை பிரியாணியில் கறித்துண்டுகள் மைசூர் பாகைப் போல் வாயில் வைத்ததும் மேல்கீழ் அன்னங்களின் அழுத்ததில் கரைந்து கரைசலாக மாறிவிடுகிறது. சில சமயம் அது அல்வா துண்டுபோலும் இருக்கும். டிக்காஸ்டர் சாலை ஏ1 பீஃப் ஸ்டாலில் தலைகீழாய்த் தொங்கும் மாடு கத்தியால் வகுந்தபடி இருந்தது. அதன் எதிரே அமைந்துள்ள இஃப்ரான் பிரியாணிக் கடையில் நல்லி எலும்புகள் எண்ணெயில் கொதித்து ஆவியை எழுப்பின.
  • 2017இல் பெய்த கனமழையில் வெள்ளநீர் ஆடுதொட்டியில் உட்புகுந்து ஏராளமான ஆடுகள் செத்து மடிந்துள்ளன. கட்டிவைக்கக்கூட இடமின்றிச் சாணச் சகதியின் மீதே கால்நடைகள் நிற்கும் இங்கு இருசக்கர வாகனம், மீன்பாடி வண்டி, ஆட்டோ, குட்டியானை, லாரி போன்ற எண்ணற்ற வாகனங்களில் இறைச்சி ஏற்றிச் செல்லப்படுகிறது. புதிதாக வந்து செல்பவர்கள் மூக்கைப் பொத்தி முகம் சுளிக்கும் அளவுக்குக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.
  • தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஆட்டுச் சந்தையான ஆடுதொட்டியிலிருந்துதான் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நாம் விவசாயத்தைக் கைவிட்டதனால் தமிழ்நாட்டுக்கு உள்ளிருந்து 25 சதவீதம் ஆடுகளும் மகாராஷ்டிரா, குஜராத், அசாம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்து 75 சதவீதம் ஆடுகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
  • இவை யாவும் பருவகாலத்திற்குத் தக்கதான வரத்தாக இருந்தாலும் ஜோத்பூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து எப்பொழுதும் வந்த வண்ணமிருக்கும். “தமிழ்நாட்டு ஆடுகளுக்கு வெறுமனே புல்தான் தின்னக் கொடுப்போம். ஆனால், வடமாநிலங்களில் ஆடுகளுக்குச் சிறுதானியங்கள் கொடுப்பார்கள். இதனால் கறியின் சுவையும் மாறுபடும். மலைப் பகுதியில் வளரும் ஆடுகளை வாலாடுகள் என்று அழைப்பது உண்டு.
  • ஆனால், அதை நாய்க் கறி என்று பொதுவில் விமர்சனம் எழுப்பியதால் பெரிய அளவில் எங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது’’ என்கிறார் ஆடுதொட்டி சங்கச் செயலாளரான ராஜ். இப்போதைய சந்தை நிலவரப்படி கிலோ 620 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆடுகளின் வரத்து அதிகமாகும்போது விலை குறையவும் வரத்து குறையும்போது விலை அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்.
  • ஆடுதொட்டியின் நுழைவாயிலின் இருபுறமும் ஆண்களும் பெண்களும் கடைவிரித்திருந்தனர். மென்பச்சைச் சட்டையுடன் கறுப்புக் குல்லா அணிந்த பாய் வெண்கோணியை விரித்து நெருப்பில் வாட்டிய ஆட்டுக் கால்களை நான்கு நான்காகக் கூறுபோட்டிருந்தார். வழக்கமான நாட்களில் ஒரு கூறு 230 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தீபாவளி அன்று கூறு 350 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் தெரிவித்தார். தீபாவளிக்கு முந்தைய நாள் 450 ரூபாய்க்கு விற்றதைக் கடைக்காரரின் பேரன் கூறினான்.
  • புரட்டாசி மாதம் முடிந்த மறுநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஆனால், ஆட்டுத் தலை வழக்கமான விலையான 130 ரூபாய்க்கே விற்கப்பட்டது. அருகில் மரப்பலகையில் விரிக்கப்பட்ட கோணியில் நீர்நிரப்பிய பலூனைப் போல் குடல் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், அதனுள் கோலிக்குண்டைப் போல் பத்துப் பதினைந்து உருண்டைகள் இருந்தன. அது என்னவென்று வினவியபோது, “இதுதான் கருவறை. இதனுள் இருப்பதெல்லாம் சினைமுட்டைகள். இதைத் தின்றால் முதுகுவலி சரியாகும்” என்றார் கடைக்காரர்.
  • குழந்தைகளின் கழுத்து நேராக நிற்கவில்லை என்றால் ஆட்டுத்தலையைத் தாய் தின்றால் நின்றுவிடும் என்றவரிடமிருந்து விடைபெற்று ஆடுதொட்டியின் நுழைவுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியபோது சகதியில் கோணியை விரித்துக் குடல்களை விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெண். மேலும் சில பெண்கள் வானவில் நிறக் குடைகளை விரித்துக் குடற்கூறுகளின் மேல் மொய்த்த ஈக்களைக் கைகளால் விரட்டிக்கொண்டிருந்தனர். சாலைக்கு வந்தபோது அவ்விடத்தைக்  கடப்பவர்கள் மூக்கைப் பொத்தியபடிச் சென்றனர்.
  • சுவரில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் படங்கள் பொறித்த வண்ணச் சுவரொட்டிகளும் கறுப்பு நிறக் கண்ணீர் அஞ்சலிச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. மாட்டுக்கொழுப்பைப் போல் மிதந்தூறும் கழிவுகளில் ஊன்றிக் கண்கள் தெளிவின்மையைத் தோற்றுவித்தன.
  • ஆடுதொட்டியின் கிழக்கு நுழைவாயிலின் மூலையில் வயிற்றுக் கன்று அறுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கருமையான வெற்று மீன்பாடியும் கேன்டர் வண்டியும் நின்றுகொண்டிருக்க, கோணியில் கட்டி அடுக்கப்பட்டிருந்த எலும்புகளின் மீது காக்கைகள் கரைந்த வண்ணம் இருந்தன. சுவரையொட்டித் தொங்கிய கயிறுகளில் துணிகளைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன குடல்கள். தரையில் குவிந்திருந்த விலா எலும்புகளை அள்ளிக்கொண்டிருந்தவரின் கைக்குவியலிலிருந்து விறகுகளைப் போல் நழுவி விழுந்தன எலும்புகள். முதுகில் ‘N’ என்று எழுதப்பட்ட நான்கு மாடுகளைத் தாழியைப் போல் வயிற்றைத் தொங்கவிட்ட ஒருவர் பிடித்துச் சென்றார்.
  • காலணிகளற்ற கால்களுடன் அடர்பச்சைச் சராய் அணிந்திருந்த அவர் மாட்டின் நான்கு கழுத்துகளும் கோக்கப்பட்ட ஒற்றைக் கயிற்றைப் பிடித்திருந்தார். அந்நான்கு மாடுகளின் பின்பகுதியைத் தன் வலக்கைக் குச்சியால் அடித்தபடி இடக்கையில் முதுகில் ‘EB’ எனப் பொறிக்கப்பட்ட செவலை மாட்டை இழுத்துச் சென்றான் சிறுவன். தொட்டியின் கிழக்குப் பகுதியில் முற்றும் பூசப்படாத செங்கல் வீட்டின் இரண்டாவது மாடியின் சுவரோரம் ஆலமரம் கிளை பரப்பியிருந்தது.
  • தொட்டியின் பூட்டிய கழிப்பறை வாசலில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட மாட்டுக்கறிகளை ஈக்கள் மொய்க்க, எதிர்த்திசையில் எண்ணிலிறந்த மாட்டின் கரும்பாதங்கள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தன. கறுப்பு நிற மாமிசச் சகதியின் மேல் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தது.
  • பட்டாசுச் சத்தங்களுக்கும் பறவைகளின் கீச்சொலிகளுக்கும் நடுவே மாடுவெட்டும் இடத்திற்குள் நுழைந்தேன். மூங்கில் கழியில் எண்ண முடியாத அளவுக்கு மாடுகள் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருந்தன. இடையே தரையில் கிடத்திச் சங்கறுக்கப்பட்ட மாட்டின் கழுத்திலிருந்து பீறிட்ட இரத்தம் தரையெங்கும் தெறித்தது. ரத்தக் குழம்பில் விரிக்கப்பட்ட பச்சை மாட்டுத் தோலில் குடல்களும் கொம்புகளும் தலைகளுமாகக் குவிந்துகிடக்க, நரம்புப் புடைக்க உள்ளிருந்து அறுத்த மாட்டைத் தூக்கிவருபவர் தன் இரு சக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் திணித்தார். மற்றொருவர் உடல் அழுந்த தூக்கிவந்த மாட்டின் ஒரு பாதியை மீன்பாடி வண்டியில் எறிந்தார்.
  • அந்த இடத்தில் காத்திருந்த கணக்கற்ற வாகனங்களில் தங்களுக்கான இறைச்சியை ஏற்றிய வண்ணம் இருந்தனர். கீறல்விட்ட சுவரின் அருகே பாலித்தீனை விரித்துத் தோலுரிக்கப்பட்ட மாட்டின் தலைகள் நீலக் கண்களுடன் வானம் பார்க்கத் தலைகீழாய்க் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. வெகுநேரமாய்த் தெருவிளக்கின் மீது அசைவற்று இருந்த ஓர் ஒற்றைப் பறவை தனக்கான மாமிசத் துண்டைக் கவ்வி மேற்கூரை இடிந்து பாழடைந்த சுவரைத் தாண்டிக் கிழக்குத் திசையில் மறைந்தது. மேற்கூரையற்ற இடம் கழிவுநீரில் மிதந்துகொண்டிருந்தது.
  • தொட்டியின் கிழக்குத் திசையில் உடன் பிறந்த சகோதரிகளின் அருகருகே தனியே கடைவைத்திருந்தார் ஜானகி. தன் 12 வயதில் தொட்டியில் வியாபாரம் செய்யத் தொடங்கிய இவருக்குத் தற்போது 85 வயது. மாட்டின் குடல், ஈறல், நாக்கு ஆகியவற்றைக் காலின் கட்டைவிரல் இடுக்கில் கத்திபிடித்து அறுக்கும் பழக்கமுடையவர். இவ்வாறு காலிடுக்கில் கறியறுக்கும் லாவகம் வாடிக்கையாளர் மட்டுமல்லாது சக வியாபாரிகளே வியக்கும் வண்ணம் இருக்கும்.
  • தான் வியாபாரம் ஆரம்பித்த தொடக்கக் காலத்தில் ஒரு கிலோ மாட்டுக்கறி 2 ரூபாய் 50 பைசா என்பவர், ஒருநாளைக்குப் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்த நினைவுகளை மீட்கிறார். “லாரியில் ஏற்றிவரும் மாடுகள் செத்துப் போனால் எங்களிடம் கொடுத்துவிடுவார்கள். ஏனென்றால் செத்த மாட்டை பாய்கள் அறுக்க மாட்டார்கள். இப்போது அதுவும் நடைமுறையிலில்லை, மாடு செத்துவிட்டால் அதன்மீது பினாயிலை ஊற்றி லாரியில் ஏற்றிவிடுவார்கள்” என்கிறார்.
  • மாட்டின் எந்தவோர் உறுப்பும் வீண் இல்லை; அத்தனையும் பொன். ஆடுதொட்டியின் சாணம் முழுவதையும் பிரபல நடிகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்துத் தன் தோட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார். மாடு அறுக்கும், விற்கும் தொழிலில் இஸ்லாமிய - தலித் சமூக மக்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். மூன்று, நான்கு தலைமுறைகளாயினும் இருவருக்கும் இடையே எந்தவொரு பிணக்கும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.
  • சமீபத்தில் மாடு அறுக்கும் இடத்திற்குக் காரில் வந்த பிராமணப் பெண், காச நோய்க்கு என்னென்னவோ மருத்துவம் பார்த்தேன் ஒன்றும் சரியாகவில்லை என்று புலம்பியுள்ளார். கடைசியில் மருத்துவர் அப்பெண்ணை இங்கு அனுப்பியுள்ளார். மாட்டைக் கடவுளாகக் கும்பிடும் அப்பெண், மாட்டின் பச்சை ரத்தத்தைப் பல்லைக் கடித்துக் குடித்ததோடு, கடந்த வாரம் நோய் குணமானதைத் தெரிவித்து ரத்தம் கொடுத்த பெண்ணைக் கும்பிட்டு நன்றி தெரிவித்ததோடு மாட்டின் ரத்தம் தோய்ந்த தொட்டியின் மண்ணைத் தொட்டு வணங்கியும் சென்றுள்ளார்.
  • மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் இறைச்சியை விநியோகிக்கும் ஆடுதொட்டியின் சுற்றுச்சூழல் மிகவும் துயர் படிந்துள்ளது. மேலும், இது அழுகிய நகரமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
  • எங்கும் விலங்கின் சதைகளும் எலும்புகளும் மண்ணோடு மண்ணாகக் கலந்து போவதற்கு இடமின்றித் தேங்கியுள்ளன. இக்கழிவுகளுக்கிடையேதான் விலங்குகளை அறுப்பதும் வியாபாரம் நடத்துவதும் நடக்கின்றன. டிக்காஸ்டர் சாலை முழுவதும் விதவிதமான பிரியாணிக் கடைகளும் ஏராளமான இறைச்சிக் கடைகளும் உள்ளன. ஆடுதொட்டியைச் சுற்றியுள்ள வீடுகள் விலங்குகளின் அழுகிய வாசத்திற்குப் பழகிவிட்டன போலும். இங்குள்ளோர் கேட்பதற்கு நாதியற்ற மக்களாய்ப் போயுள்ளனர். உதாரணமாகச் சமீபத்தில் பெய்த மழைக்கு மின்மாற்றியின் கீழ்ப் பகுதி மழைநீரில் மூழ்கியிருந்தது. ஆடுதொட்டியின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் எலும்பும் தோலும் நிறைந்த சகதி நீண்ட காலமாய் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.
  • மாநகரின் பல பகுதிகளில் சாலை ஓரம் குப்பையற்ற மண்ணைச் சுரண்டும் தொழிலாளர்களை நாம் பலமுறை பார்த்திருப்போம். என்னவென்று விசாரித்தால் அமைச்சர் வருகிறார் என்பார்கள். இன்னும் சில இடங்களில் சாலையின் மத்தியில் உள்ள புல்வெளிகளுக்குக் களையெடுத்தல், நடைபாதைக்கு வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளையும் அவ்வேலைகளை மேற்பார்வையிடும் மேலதிகாரிகளையும் பார்த்திருப்போம். இப்போது பெண் துப்புரவுப் பணியாளர்கள் விடிய விடிய சென்னை மாநகரையே சுத்தம் செய்த வண்ணம் உள்ளனர். இவ்வாறான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும்போது, ஆடுதொட்டியின் உள்ளும் புறமுமுள்ள கழிவுகள், குப்பைகள் மட்டும் ஏன் மாதக் கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன.
  • இடிந்து விழும் சுவர்களைப் புனரமைப்புச் செய்து புதிய கட்டடங்களை ஏன் கட்டித்தரவில்லை. மேற்கூரையுடன் சுவர் இடிந்து விலங்குகளும் மனிதர்களும் பலியானால்தான் இதற்கு அரசு செவி சாய்க்குமா? எந்தவித அக்கறையில்லா அரசுகள் வெறுமனே வாக்குச் சீட்டுகளாக மட்டுமே புளியந்தோப்பு மக்களை எண்ணுவது பேரவலம் அல்லவா
  • புளியந்தோப்பை விட்டு ஏதேதோ காரணங்களுக்காக எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், என் உடலெங்கும் அழுகிய விலங்கின் நாற்றம் வீசியபடி இருக்கிறது. சிற்சில சமயங்களில் அந்நாற்றம் நாசியின் நுனியில் ஒட்டி வெளிப்படுவதான உணர்வு மேலிடுகிறது!

நன்றி: அருஞ்சொல் (26– 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்