ஆட்சிகளைப் பிடிக்கும் வலதுசாரிகள்!
- உலகின் பல நாடுகளில் மையவாத – வலதுசாரி கட்சிகளோ மையவாத – இடதுசாரி கட்சிகளோதான் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கின்றன. மார்கரெட் தாட்சரும் டோனி பிளேரும் மையவாத – வலதுசாரியினர் என்றால், மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் மையவாத சித்தாந்தங்களை உறுதியாகப் பின்பற்றியவர்கள்.
- நவதாராளமயக் கொள்கை ஏழைகளின் வாழ்க்கையை மிகுந்த வன்மத்தோடு நிலைகுலையச் செய்துவிட்டது, வருமானம் – செல்வக்குவிப்பு ஆகியவற்றில் மிகப் பெருமளவு ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது, மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேறவிடாமல் தேக்க நிலைக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ கொண்டுசென்றுள்ளது.
- ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் கண்ணியமான அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையிலும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்களால் இது வெகுவாக வெறுக்கப்படுவதால் மையவாத அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தோல்வியைச் சந்திக்கின்றனர்.
- இந்தியாவில் 2014 மக்களவை பொதுத் தேர்தலில் இது நடந்தது. சமீபத்திய ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் முடிவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்தெழுவதற்கும் இதுவே முக்கிய காரணம். (வங்கதேச அரசியல் பற்றி இங்கு விவாதிக்கப்போவதில்லை).
மக்கள் ஆதரவு யார் பக்கம்?
- ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட இம்மானுவேல் மெக்ரான் பிரான்ஸில், உரிய காலத்துக்கு முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்திய பிறகும் தோல்வியையே சந்தித்துள்ளார்.
- பிரிட்டனில் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி, மையவாத – இடதுசாரி சார்புள்ள கட்சி - அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது, ஆனால் அதற்குக் காரணம் இதற்கு முன்னால் ஆண்ட டோரி (பழமைவாத -கன்சர்வேடிவ்) கட்சியின் கொள்கைகள்தான். தொழிலாளர் கட்சிக்கு 2019 தேர்தலில் 32.1% வாக்குகள் கிடைத்தன, இந்தத் தேர்தலில் 33.8% வாக்குகள்தான் கிடைத்தன. டோரி கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்று முடிவெடுத்த பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள்கூட, அப்படியே தொழிலாளர் கட்சி பக்கம் திரும்பிவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருப்பதற்குக் காரணம் அரசின் மையவாதக் கொள்கைதான். நவதாராளமயக் கொள்கையால் மக்களில் மிகச் சிறிய அடுக்குக்கு மட்டுமே அதிக லாபம் அடைகிறது. இதனால் மாற்று வழிமுறையைக் கையாள்வதாகக் கூறும் வலதுசாரி அல்லது இடதுசாரிகள் பக்கம் மக்களுடைய ஆதரவு குவிகிறது.
பிரான்ஸின் நிலை
- பிரான்ஸில் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ‘புதிய மக்கள் முன்னணி’ நாடாளுமன்றத்தில் அதிக தொகுதிகளை வென்ற கூட்டணியாக இருக்கிறது. மரீன் லி பென்னுடைய ‘தேசியக் கட்சி’ ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தாலும், மெக்ரானுடைய கட்சிக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு வாக்குகளும் தொகுதிகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
- அதேபோல பிரிட்டனில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிகம் ஆதாயம் அடைந்தது நைஜல் ஃபாரேஜ் தலைமையிலான ‘பிரிட்டனை சீர்திருத்துவோம்’ என்ற தீவிர வலதுசாரி கட்சிதான். டோரி கட்சிக்கு 24% வாக்குகள் கிடைத்தன என்றால் நைஜல் கட்சிக்கு 14% வாக்குகள் கிடைத்தன என்பதிலிருந்தே தெரியும்.
- அதேசமயம் ஜெரிமி கோபின் தீவிர இடதுசாரி கருத்துகளுக்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், வடக்கு ஐலிங்டன் தொகுதியில் சுயேச்சையாகவே போட்டியிட்டு வென்றிருக்கிறார். இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடாவிட்டாலும் இடதுசாரிகளுக்கும் மக்களிடையே ஆதரவு இருப்பது தெரிகிறது.
ஜெர்மன் நிலை
- ஜெர்மன் நாட்டிலும் உக்ரைன் போர் காரணமாக மக்களுக்கு வழக்கமாக கிடைத்திருக்க வேண்டிய வசதிகள் கிடைக்கவில்லை, வாழ்க்கையை நடத்துவது கடினமாகிவருகிறது. எனவே, ஆளும் மையவாத கட்சிக்கு மக்களிடையே ஆதரவு சரிந்துவிட்டது.
- சோஷியல் டெமாக்ரட், ஃப்ரீ டெமாக்ரட், கிரீன்ஸ் என்ற மூன்று மையவாத அரசியல் கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு குறைந்துவிட்டது. அதேசமயம் இதனால் பயன் அடைந்தது கிறிஸ்டியன் டெமாக்ரட்ஸ், கிறிஸ்டியன் சோஷலிஸ்ட்ஸ் ஆகிய மையவாத – வலதுசாரி கட்சிகள் அல்ல, அதிதீவிர வலதுசாரி கட்சியான ‘ஏஎஃப்டி’ கட்சி. அதாவது ஜெர்மனியின் வளர்ச்சிக்கான மாற்று அரசியல் உத்தி கட்சி!
- அதேசமயம், சாரா வேகன்நெக் என்பவர் தலைமையிலான புதிய இடதுசாரி கட்சிக்கு அதன் தாய்க் கட்சியான ‘டை லிங்க்’ என்பதைவிட மக்களிடையே ஆதரவு அதிகமாகிவருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. டை லிங்க் கட்சியானது நேட்டோவுக்கு எதிராகக் குரல் கொடுக்க துணிவில்லாமல் தொடை நடுங்கியாக இருக்கிறது. சாராவின் கட்சிக்கு, தோன்றிய ஏழு மாதங்களிலேயே 7% முதல் 9% வரையில் மக்களிடையே ஆதரவு குவிந்திருக்கிறது.
காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள்
- இவற்றிலிருந்து தெரிவது, மையவாத அரசியல் கட்சிகள் உலகெங்கிலும் ஆதரவை இழந்துவருகின்றன, தீவிர வலதுசாரி அல்லது தீவிர இடதுசாரி கட்சிகள் மேலெழுந்துவருகின்றன. ஆனால், இடதுசாரி கட்சிகள் சரியான அரசியல் தலைமை இல்லாததாலோ அல்லது கட்சியமைப்பு இல்லாததாலோ இருப்பதால் பெரிதாக வளரவில்லை.
- இந்தியாவிலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகமானதற்குக் காரணம் நவதாராளமயக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இடதுசாரிக் கொள்கைகளுக்கு நெருக்கமானவற்றைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுதான்.
- பொருளாதார செயல்திட்டங்களில் வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. வலதுசாரி கட்சிகள் சிறிது காலம் கழித்து நவதாராளமயக் கொள்கையுடன் சமரசம் செய்துகொண்டு பெருநிறுவனங்களின் சில்லாதிக்க ஆட்சியை (ஆலிகார்க்கி) ஆதரித்துவிடும். இத்தாலியின் ஜார்ஜ் மெலோனியும் இந்தியாவின் நரேந்திர மோடியும் இதற்கு உதாரணங்கள்.
- பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா, தேர்தலுக்கு முன்னதாகவே நவதாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கிவிட்டார். சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சில்லாதிக்க நிறுவனங்கள் மையவாத அரசியல் கட்சிகளுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டு தீவிர வலதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கியதும்கூட அவற்றின் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
- தீவிர வலதுசாரி கட்சிகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கையை வெளியில் தெரியாமல் மறைக்க, சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக பெருங்குரலெடுத்து பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்களைப் பிரித்துவிடும். சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூக ஏழைகளுக்கு வெறுப்பை வளர்த்துவிடும். பெருநிறுவனங்கள் ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மக்களிடையே ஆதரவு இல்லையென்றாலும் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளும்.
கிரேக்க வெற்றி
- கிரீஸ் (கிரேக்கம்) நாட்டில் இடதுசாரித் தலைவர் சிரிசா, சர்வதேச நிதியமைப்புகளுக்கும் பெருநிறுவனங்களின் கூட்டுக்கும் எதிராக அரசியல் செய்து வெற்றிபெற்றார். அப்படி மாற்றுப் பொருளாதார திட்டங்களுடன் துணிச்சலாக களம் இறங்காததால் பிரான்ஸில் இடதுசாரி கட்சிகளின் அமைப்புகளுக்கு அரசியல்ரீதியாக வெற்றி கிட்டவில்லை. அந்த அமைப்பிலும் அலைபாயும் மனதுடன் இருக்கும் சிறிய கட்சிகளை வேறு குழுக்கள் தங்கள் பக்கம் இழுத்துவிடுகின்றன.
- நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை, ஆனால் இடதுசாரி கட்சிகளின் அமைப்புக்குத்தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளன என்றாலும், ஆட்சியமைக்க அவை அழைக்கப்படுவதில்லை. இடதுசாரிகளை ஒதுக்கிவிட்டு கூட்டணி அரசு அமைக்க தீவிர வலதுசாரி கட்சிகளும் மையவாத – வலதுசாரி கட்சிகளும் பல்வேறு சமரசங்களைச் செய்து கொண்டு கைகோக்கின்றன.
- அப்படியே இடதுசாரி கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்தாலும் பெருமுதலாளிகளும் முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலை விலக்கிக்கொண்டு, வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். பிரான்ஸில் பிராங்குவோ மித்தரான் அதிபரானபோது இப்படித்தான் நடந்தது. அப்படியும் இடதுசாரி கூட்டணி தாக்குப்பிடித்து ஆட்சியைத் தொடர்ந்தால், உலக வல்லரசுகள் அந்த நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கின்றன, ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றன.
- நவதாராளமயம் என்பது உறக்கத்தில் இருப்பவரை அழுத்திக் கொல்லப் பார்க்கும் அமுக்குவான் பிசாசைப் போல, எளிதில் அதனிடமிருந்து தப்பிவிட முடியாது. பிரான்ஸ் போன்ற நாடு எப்படி அதிலிருந்து தப்பி ஜனநாயகத்துக்குப் புத்துயிர் அளிக்கப்போகிறது என்பதைப் பார்க்க வரும் வாரங்களில் ஆவலோடு காத்திருப்போம்.
நன்றி: அருஞ்சொல் (18 – 08 – 2024)