TNPSC Thervupettagam

ஆட்டம் காணும் அஸ்திவாரம்! | உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும்

September 14 , 2019 1901 days 820 0
  • தமிழகத்தில் திரும்பும் இடத்தில் எல்லாம் தொழில்நுட்பக் கல்லூரிகளும், உயர் கல்விச் சாலைகளும் காணப்படுவது குறித்து ஒரு வகையில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில், இந்த உயர் கல்விச் சாலைகளின் கற்பித்தல் தரமும், அதிலிருந்து வெளிவரும் மாணவர்களின் தரமும் மெச்சும்படியாக இல்லை என்கிற கசப்பான உண்மையை யாருமே உரக்கக் கூறுவதில்லை.
  • உயர் கல்விச் சாலைகளை அமைப்பது மட்டுமே மாணவர்களுடைய வருங்காலத்துக்கு உத்தரவாதமாகிவிடாது. அவர்கள் பட்டம் முடித்துவிட்டு வேலையில்லாமலும், மிகக் குறைந்த ஊதியத்தில் வேறு தொழில்களிலும் இருக்கும் அவலங்களை எண்ணிப் பார்த்தால், கல்விச் சாலைகள் அமைப்பதாலோ, அனைவருக்கும் கல்வி வழங்குவதாலோ பிரச்னை முடிந்து விடுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உயர் கல்வியின் தரம்

  • உயர் கல்வியின் தரம் குறைந்திருப்பதற்குக் காரணம், நமது பள்ளிக் கல்வியின் தரம் குறைந்து காணப்படுவது. பள்ளிக் கல்வியின் தரம் குறைந்திருப்பதற்குக் காரணம், தொடக்கக் கல்வி அளவிலும், நடுநிலைப் பள்ளி அளவிலும், உயர்நிலைப் பள்ளி அளவிலும் கற்பித்தலின் தரம் மிகவும் மோசமாக இருப்பது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சரியாக எழுத்துக் கூட்டிப் படிக்கவும், பெருக்கல், வகுத்தல் கணக்குத் தெரியாமலும் இருக்கும் அவலநிலை பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டு விட்டது.
  • தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி அளவில் முறையாகப் பயிற்சி பெறாததுதான் அதற்குக் காரணம்.
  • இந்தப் பின்னணியில்தான் நாம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை அணுக வேண்டும். இப்படி ஒரு தேர்வு தேவைதானா என்று கேட்பவர்கள், கல்வியின் இன்றைய தரத்தையும், உயர் கல்விச் சாலைகளில் பல லட்சம் ரூபாய் செலவழித்துப் படித்துத் தேர்ச்சி பெற்றும், வேலை கிடைக்காமல் திண்டாடும் நிலையையும் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
  • கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம்  நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடையவில்லை. போதிய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. மீண்டும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஓரளவுக்குத் தேர்ச்சி விகிதம் காணப்பட்டது.
  • 2014-லும், 2018-லும் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 60,000 பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆசிரியர் பணி நியமனத்துக்குக் காத்திருக்கிறார்கள். 
  • இதற்கிடையில், 2010-க்குப் பிறகு ஆசிரியர்களாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டது.
  • அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, தமிழக அரசு ஐந்தாண்டுகள் அவகாசம் வழங்கியது. அதற்குப் பிறகும் ஒவ்வோர் ஆண்டும் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இனியும் அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்கிற நிலையில் இந்த ஆண்டு அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினார்கள்.

ஒரு சதவீதம் பேர்

  • கடந்த ஜூனில் நடந்த தேர்வின் முடிவுகளில், அவர்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களில் வெறும் 80 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றால், கடந்த ஒன்பது ஆண்டுகளாக எத்தனை மாணவர்கள் இவர்களால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும், அவர்களின் தரம் எப்படி இருக்கும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
  • வகுப்பறையில் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, அனைத்துப் பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுதும்போது அவர்கள் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. தேர்வுக்குத் தயாராக அவர்களுக்குப் போதுமான அவகாசம் இல்லை. வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. அந்த ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி  கருணை அடிப்படையில் அவர்களுக்குத் தகுதிகாண் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.
  • ஏறத்தாழ ஒன்பது ஆண்டு அவகாசத்துக்குப் பிறகும், தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் கற்பித்தலில் அடுத்த தலைமுறை மாணவர்கள் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. கடினமான வினாக்களுக்கு விடையளிக்கத் தெரிந்தவர்கள்தானே ஆசிரியர்களாக வேண்டும்? இந்த 1,500 ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரத்துக்காக, ஒரு தலைமுறை மாணவர்களின் எதிர்காலத்தையே பாழாக்க முடியுமா என்ன? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் சுமார் 60 ஆயிரம் பேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்.

மதிப்பெண் அடிப்படையில்...

  • அவர்களையேகூட, மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான், வருங்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்கும். சொல்லப்போனால், அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கும் தகுதி மேம்பாட்டுப் பயிற்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • அரசுப் பள்ளிகளில் கையூட்டு இல்லாமல், நேர்மையான முறையில் திறமையான ஆசிரியர்கள் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமிக்கப்பட்டு, கல்வித் தரம் மேம்படுத்தப்பட்டால், தனியார் கல்வி நிலையங்கள் புற்றீசல்களாகப் பெருகாது.
  • உயர் கல்விச் சாலைகளில் சேரும் மாணவர்கள், தேர்ச்சியாக முடியாமல் தவிக்க மாட்டார்கள். அஸ்திவாரத்தில் சமரசம் செய்துவிட்டு அழகான வீட்டைக் கட்டுவதில் அர்த்தமில்லை!

நன்றி: தினமணி (14-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்