ஆட்டோ, டாக்ஸிகளில் க்யூஆர் குறியீடு: மகளிர் பாதுகாப்பில் புதிய மைல்கல்!
- கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை பெண்களும் குழந்தைகளும் சந்தித்து வருகின்றனர். அவர்களை எதிர்பாராத துன்பங்களில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளும், காவல்துறையும், மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறைந்தபாடில்லை.
- பெண் காவலர் மீதே நடைபெறும் தாக்குதல்கள், கல்வி நிலையங்களில் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை என இன்னல்கள் தொடர்கின்றன. அவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக பெண்கள் பயணம் செய்யும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் ஓட்டுநர் இருக்கையின் பின்பகுதியில் ‘க்யூஆர் கோடு’ ஒட்டும் நடைமுறையை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய முறையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளது மகளிர் பாதுகாப்பில் புதிய மைல்கல்லாகும்.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை பெருநகரப் பகுதியில் 89,641 ஆட்டோக்கள் இயங்குவதாகவும், இதில் 78 ஆயிரம் ஆட்டோக்கள் ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து போக்குவரத்து வசதியை அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
- வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற ஆட்டோ, வாடகை கார்களில் பயணம் செய்கின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும்போது பதட்டத்துடன் பயணிக்கும் நிலையே உள்ளது. அத்தகைய பெண்களுக்கு ஆபத்து காலங்களில் உடனடி உதவிக்கரம் நீட்டும் வகையில் காவல்துறை எடுத்துள்ள இத்தகைய முயற்சி பாராட்டுக்குரியது.
- இந்த ‘க்யூஆர்’ கோடை ஸ்கேன் செய்தால் உடனடியாக அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தின் எண், இருப்பிடம், ஓட்டுநர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைப்பதுடன் அந்த வாகனத்தின் நகர்வை பின்தொடர்வது, அருகில் பணியிலுள்ள ரோந்து காவல் வாகனங்களை உடனடியாக உதவிக்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும் என்பது குற்றத்தடுப்பு நடவடிக்கையில் புதிய பாய்ச்சலாக இருக்கும்.
- தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த ‘க்யூ ஆர்’ கோடை பயணிகளிடம் இருந்து மறைப்பதற்கு கிழித்துவிட வாய்ப்புண்டு. அப்படி ஏதாவது செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரிக்கையும் விடுத்திருப்பது மேலும் வரவேற்கத்தக்கது.
- காவல்துறை இப்பணியை இதோடு நிறுத்திவிடாமல், இந்த வசதி, பாதிக்கப்படும் பெண்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, ஆபத்து காலங்களில் அவர்கள் உதவி கோரும்போது, எவ்வளவு விரைவாக அவர்களுக்கு உதவி போய்ச் சேருகிறது என்பது போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும்.
- சென்னை நகரில் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் இந்த பாதுகாப்பு அம்சத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதற்கும் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் புதிய சிந்தனைகளையும் தொழில்நுட்பத்தையும் காவல்துறை தொடர்ந்து புகுத்தும்போது பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தை எட்டும் என்பதுடன் நாட்டிற்கே முன்னோடியாக வழிகாட்டும் வாய்ப்பும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 03 – 2025)