ஆணாதிக்கப் பார்வையை உடைக்கும் தருணம்!
- ‘டாக்டர் சுப்ரஜா எதிர் அரசு’ வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுளா எழுதிய ஒரு தீர்ப்பை அண்மையில் வாசித்தேன். பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தற்போதுள்ள சட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது ஆகியவை தொடர்பான வழக்கு அது.
- இப்பிரச்சினையை விவாதிக்கும்போது நீதியரசர் ஒரு சுவையான, முக்கியமான கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். அது ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பிரச்சினையைப் பார்ப்பது அல்லது ஒரு அறிவார்ந்த பெண்ணின் அளவுகோலைப் பயன்படுத்துவதாக உள்ளது.
அடிப்படை மாற்றம் தேவை:
- ஒரு பெண் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டிய வழக்குகளின் எண்ணிக்கை, அவருக்கு ஏற்பட்ட கருச்சிதைவின் காரணமாகக் குறைந்ததாகக் கூறிப் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வழங்கிய கருத்துகளையும் வாசித்தேன். அதில் அவர், “ஆண்களுக்கும் மாதவிடாய் இருந்திருந்தால் மட்டுமே, அவர்களால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
- பாலியல் வன்முறை தொடர்பாகச் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எலிசபெத் சேஷாத்ரி அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையையும் வாசித்தேன். ஒரு முறைசார் பாடத்திட்டத்தின் வழியாகச் சிறுவர்களுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுத்தரும் செயல்பாடு வேண்டும் என்று அவர் அக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
- பாலினங்களுக்கு இடையிலான ஊடாட்டத்தின் சிக்கல் மிகுந்த சேர்க்கைகளில், பெண்களின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகிறது; உண்மையான பாலினச் சமத்துவத்தை நோக்கிய பயணத்துக்குச் சாதாரண சட்ட வரையறைகளைத் தாண்டி, சமுதாய விழிப்பு உணர்வு அடிப்படையிலான புத்துருவாக்கமும் தேவைப்படுகிறது. இந்தியக் காப்பியங்களான ராமாயணமும் மகாபாரதமும் ஆற்றல்மிக்க வரலாற்று அடையாளங்கள் ஆகின்றன. ஆழமாக ஆணாதிக்கப் பார்வைகள் பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை விளிம்பு நிலைக்குத் தள்ளிவிட்டதையே அவை வெளிப்படுத்துகின்றன.
- இந்தக் கதையாடல்கள் அடிப்படையில், பெண்களைத் தன்னுரிமையுள்ள தனியாள்களாக இல்லாமல், ஆண் கதையாடலின் கருவிகளாக ஆக்கிவிட்டன என்றே நான் கருதுகிறேன். ராமாயணத்தில் சீதையின் பயணம் பெண்களின் தனிப்பட்ட போராட்டங்களை வலிமையாக எடுத்துக்காட்டுகிறது. அவர் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்டது, அவமானகரமான அக்னிப்பிரவேசம் போன்றவை பெண்கள் அனுபவித்த துன்பத்தின் அடையாளங்கள்.
- பெண் ஒரு விற்பனைப் பொருளாக நடத்தப்படுவதை மகாபாரதம் எடுத்துக்காட்டுகளுடன் முன்வைக்கிறது. பலரும் பயன்படுத்தும் ஒரு கிண்ணத்தைப் போலவும், பந்தயப் பொருளாகவும் திரௌபதி நடத்தப்படுகிறார். இது பெண்களை முரட்டுத்தனமாக ஒரு பண்டமாற்றுப் பொருளைப் போல நடத்தியதற்கான சான்று. அரசவையில் எல்லோர் முன்னிலையிலும் அவர் துகிலுரியப்பட்டது, ஆண்களின் பழிவாங்குதலுக்கும் அவமானப்படுத்துதலுக்குமான கருவிகளாகப் பெண்கள் கருதப்பட்டார்கள் என்பதை விளக்குகிறது.
- பாலினச் சீண்டுதலும் பாலினம் சார்ந்த வன்முறையும் அங்கொன்றும் இங்கொன்று மாக நிகழ்கின்றவை என்று கருதக் கூடாது. இவை பழைமை ஊறிப்போன ஆணாதிக்க மனநிலை சார்ந்த கட்டமைப்பின் வெளிப்பாடுகள். நீதியரசர்கள் மஞ்சுளா, நாகரத்னா, எலிசபத் சேஷாத்ரி போன்ற வழக்கறிஞர்கள் பகிர்ந்துகொண்ட பார்வைகள் பெண்களின் அனுபவங்களை ஆண் என்கிற கண்ணாடி வழியாகப் பார்ப்பதிலிருந்து விலகி, அவர்களது மெய்யான வாழ்க்கை அனுபவங்களைப் புரிந்துகொள்ள அடிப்படை மாற்றம் உடனடியாகத் தேவை என்பதை விளக்குகின்றன.
எல்லைக்கோடுகளைத் தாண்டி...
- பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகள் பற்றி ஆராய்ந்தபோது ‘டாக்டர் சுப்ரஜா எதிர் அரசு’ வழக்கில் நீதியரசர் மஞ்சுளா, அறிவார்ந்த ஒரு பெண்ணுக்கான அளவுகோலைப் பயன்படுத்துவதை வலியுறுத்தியுள்ளார். ஆண்களை மையப்படுத்துவதை விட்டுவிட்டு, பெண்களின் கண்ணோட்டத்தில் அனுபவங்களைப் புரிந்துகொள்ள வலியுறுத்தும் ஒரு புரட்சிப் பார்வை இது.
- நீதியரசர் நாகரத்னாவின் கூர்ந்த பார்வையில், “ஆண்களுக்கு மாதவிலக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்பது, ஆண்களை அவர்களது சிறப்புரிமை பெற்ற பார்வையிலிருந்து வெளியே வருமாறும் பெண்களின் அனுபவங்களை அவர்கள் நிலையிலிருந்து பார்க்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறது; மேலோட்டமான புரிதலை விடுத்து அனுபவபூர்வமான கரிசனையை இது எதிர்பார்க்கிறது.
- ஜிசெலா பெலிகட் நிகழ்வு போன்ற வழக்குகளில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நம்மைத் தொந்தரவுக்கு உள்ளாக்கும் உண்மைகளை அழுத்தமாக எடுத்துரைக்கின்றன. பாலின வன்முறைகளை மேற்கொள்வோர் யாரோ கொடுமையான வெளியாள்கள் இல்லை, சமுதாயத்தில் மரியாதைக்குரிய இடத்தில் இருப்பவர்களே. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கும் தந்தைகள், கணவர்கள், அதிகாரிகள் ஆகியோரே அவர்கள்.
- பாலியல் வன்கொடுமைக்காரர்கள் பற்றி நாம் குறுகலாகப் புரிந்துகொண்டிருக்கும் கதையாடலுக்கு இது சவால் விடுக்கிறது. திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறையை இன்னும் நுணுக்கமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது. பெலிகாட் வழக்கு பற்றிய வழக்கறிஞர் எலிசபெத் சேஷாத்ரியின் ஆய்வு இந்தக் குற்றவாளிகள் 27 முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர்களில் தந்தைகள், கணவர்கள், சிறைக் காவலர், தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர் என்றும் காட்டுகிறது. பாலின வன்முறைக் குற்றங்கள் சார்ந்து நாம் வைத்திருக்கும் அச்சில் வார்த்த எல்லைக்கோடுகள் தகர்க்கப்படுவதை இது வெளிப்படுத்துகிறது.
அடிப்படை மனித மாண்பு:
- ஆணாதிக்கக் கருத்தமைவுகளை உடைத்தெறியக் கல்விதான் ஒரே வலிமையுள்ள ஆயுதமாகத் தோன்றுகிறது, குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குத் தன்னைப் போலப் பிறரையும் கருதும் கரிசனை, மரியாதை, புரிதல் ஆகியவற்றைக் கற்றுத்தர வேண்டும். பரஸ்பர ஒப்புதல், உணர்வுசார் நுண்ணறிவு, பாலினம் சார்ந்த கூருணர்வு பற்றிய அறிவு ஆகியவை பாடத்திட்டத்தில் மேலோட்டமாக அல்லாமல் அடிப்படைக் கூறுகளாக இருக்க வேண்டும்.
- பெண்களை வழிபாட்டுக்குரியவர்களாக உயர்த்திவைப்பது நோக்கமில்லை. மாறாக, அவர்களது அடிப்படை மனித மாண்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம். அவர்கள் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இல்லை; அதேவேளை, ஆட்டுவிக்கப்பட வேண்டிய பொருள்களும் இல்லை. அவர்கள் மரியாதை செலுத்தப்பட, தன்னுரிமை பெறப்பட, வாய்ப்புகள் தரப்பட வேண்டிய சமமான மனிதர்கள்.
- சிமோன் தி புவா போன்ற சிந்தனையாளர்கள், ‘ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; மாறாக ஒரு பெண்ணாக ஆக்கப்படுகிறார்’ என்கிறார்கள்; எப்படி சமுதாயக் கட்டமைப்புகள் பாலின அனுபவங்களைத் திட்டமிட்டு உருவாக்குகின்றன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். உண்மையான விடுதலையைப் பெறுவதற்கு அமைப்பு சார்ந்த அடக்குமுறையை உடைக்க வேண்டும் என்று பெண்ணியச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
புரட்சிகரமான அணுகுமுறை:
- நமக்கு முன்னால் இருக்கும் பாதை கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கிறது. ஆண்கள் வெறும் பார்வையாளர்களாக அல்லாமல், செயல்படும் துணைவர்களாக இருக்க வேண்டும்; நச்சுத்தன்மை கொண்ட ஆண்மைக்கு எதிராக அறைகூவல் விடுக்கப்பட வேண்டும்; வேறுபடுத்திப் பார்க்கும் நடத்தை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்; அச்சமோ, சமரசமோ இல்லாமல் பெண்கள் நடமாடுவதற்கான வெளி உருவாக்கப்பட வேண்டும். உண்மையான பாலினம் சார்ந்த புரிதலுக்கான புரட்சிகரமான பாதையை இப்போது வளர்ந்துவரும் நரம்பியல் தருகிறது. ஆணின் அறிதிறன் சட்டகம் மாற முடியாத அளவுக்கு நிலைபெற்ற ஒன்றல்ல.
- அது நெகிழ்வுத்தன்மை உடையது என்பதை நரம்பியல் விளக்குகிறது. பெண்களின் அனுபவத்தைப் புரிந்துகொள்ள புரட்சிகரமான அணுகுமுறையை இது தருகிறது. இலக்கு சார்ந்த தலையீடுகள் மூலமாக ஆணின் மூளையை மாற்றி அமைக்க முடியும் என்று நரம்பு நெகிழ்வுத்தன்மை சார்ந்த ஆராய்ச்சி காட்டுகிறது. நரம்பணுக்களை மாற்றியமைப்பதற்கான ஆற்றலை மூளை பெற்றிருக்கிறது. எனில், ஆணாதிக்கப் பார்வைகள் மட்டுமே மாற்ற முடியாத விதி இல்லை. அவை நெகிழ்வடையக்கூடிய அமைப்புகளே, அவற்றை மாற்றிக் கட்டமைக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)