TNPSC Thervupettagam

ஆணையத்துக்கு அழகல்ல!

September 5 , 2024 132 days 97 0

ஆணையத்துக்கு அழகல்ல!

  • தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்னால், பல ஆய்வுகளைச் செய்து, அதிகாரிகள் மட்டத்தில் கலந்து பேசித்தான் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கிறது. பண்டிகை நாள்கள், பருவமழை, கோடை வெப்பம், பள்ளித் தேர்வுகள் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஆணையர்களால் கவனத்தில் கொள்ளப்பட்டு, உள்ளூர் சூழல், சட்ட ஒழுங்குப் பிரச்னை போன்றவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவெடுக்கப்படுவது வழக்கம்.
  • ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கான தேதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் முன்று கட்டங்களாகவும், ஹரியாணா சட்டப்பேரவையின் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படும் என்று ஆணையம் அறிவித்தது.
  • ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கான வாக்கு எண்ணிக்கை, வாக்குப்பதிவு நடந்த மூன்றாவது நாளான அக்டோபர் 4-ஆம் தேதி என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இப்போது ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்குப் பதிவு நாள் அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து 5-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதனால் இரண்டு பேரவைகளின் வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 8-ஆம் தேதிக்குத் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
  • வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கான நாள்கள் தள்ளிப்போடப்படுவதும், தேவை ஏற்பட்டால் ஒத்திவைக்கப்படுவதும் புதிதொன்றும் அல்ல. ஆனால், அதற்கு சரியான காரணங்கள் இருப்பது அவசியம். சட்டம்-ஒழுங்கு, இயற்கைப் பேரிடர் போன்ற பிரச்னைகளின்போது தேர்தல் நடத்துவது இயலாது. ஆனால், இப்போது தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் இந்த முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பதில் தவறு காண முடியவில்லை.
  • ஹரியாணாவின் வாக்குப்பதிவை ஒத்திவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பி இருப்பது எதிர்க்கட்சியான காங்கிரஸ் அல்ல; ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவும், மாநிலக் கட்சியான இந்திய தேசிய லோக்தளமும். வாக்குப்பதிவு நாளுக்கு முன்பும் பின்பும் தொடர் விடுமுறைகள் வருவதுதான் அந்தக் கட்சிகள், தேர்தல் தேதியை ஒத்திவைக்கக் கோருவதற்குக் காரணம்.
  • ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தானில் வசிக்கும் பிஷ்ணோய் சமூகத்தினரின் ஆன்மிக குருவான ஜம்பேஷ்வரின் நினைவு நாள் அக்டோபர் 2-ஆம் தேதி வருகிறது. அந்த நாளில், அதாவது "அசோஜ்' மாத அமாவாசை அன்று, அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜம்பேஷ்வர் ஜீவசமாதி இருக்கும் கிராமத்திற்கு செல்வது வழக்கம். மூன்று மாநிலங்களையும் சேர்ந்த பிஷ்ணோய் சமுதாயத்தினர் அந்த கிராமத்துக்கு ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள்.
  • ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று (அக்டோபர் 1) ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், அந்தப் புனிதப் பயணம் காரணமாக வாக்களிக்க இயலாது என்பதால்தான், வாக்குப் பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்பது சரி, ஆனால் இப்படியொரு குழப்பம் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையம் ஏன் முன்கூட்டியே உணரவில்லை என்பதுதான் கேள்வி.
  • இந்திய தேசிய லோக்தளம், ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை களத்தில் இருந்தாலும் போட்டி என்னவோ, ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸýக்கும் இடையேதான் காணப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் உள்ள 10 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது. காங்கிரஸின் வாக்கு விகிதம் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கிறது.
  • அரசியல் ரீதியாகக் கடந்த பத்தாண்டுகளாக ஹரியாணாவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு, வாக்குப்பதிவைத் தள்ளிப்போடுவதால் பிரசாரத்துக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்கிற முறையில் உதவக்கூடும். கூட்டணிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி விலகிவிட்ட சூழலும், ஆட்சிக்கு எதிரான மனநிலை காணப்படும் நிலையிலும் தேர்தல் ஆணையத்தின் முடிவை பாஜக வரவேற்பதில் வியப்பில்லை.
  • மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியைக் குறைக்க, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டர் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக முதல்வராக நாயப் சிங் சைனி அனைத்துத் தரப்பு வாக்காளர்களையும், பல்வேறு சமூகத்தினரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். ஆனாலும்கூட அக்னிவீர் திட்டத்துக்கான எதிர்ப்பும், விவசாயிகளின் பரவலான அதிருப்தியும் அகன்று விட்டதாகச் சொல்ல முடியாது.
  • இதுபோன்ற பண்டிகை நிகழ்வை முன்னிட்டு வாக்குப்பதிவு தினத்தை மாற்றுவதும், வேறு பல காரணங்களுக்காக ஒத்திப்போடுவதும் புதிது இல்லைதான். 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குரு ரவிதாஸ் ஜயந்தி காரணமாகத் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ராஜஸ்தானிலும் மணிப்பூரிலும் இதற்கு முன்னால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
  • எப்போதோ ஒரு முறை இதுபோன்ற கவனக் குறைவு ஏற்படுவதை, இந்தியா போன்ற பரந்த தேசத்தில் தவிர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து பல நாள்கள் விடுமுறை வரப்போவதும், முக்கியமான நிகழ்வுக்காக வாக்காளர்கள் வெளியூர் செல்வார்கள் என்பது தெரிந்தும் (அல்லது அதுகூடத் தெரியாமல்), தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவுக்கான தேதியை எப்படி முடிவெடுத்தது என்பதுதான் புரியவில்லை.

நன்றி: தினமணி (05 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்