TNPSC Thervupettagam

ஆண் செய்தால் வேலை, பெண் செய்தால் கடமையா?

January 20 , 2021 1463 days 753 0
  • நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, பெண்கள் தங்களது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவர்களுக்கு ஊதியம் கொடுப்போம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
  • நம் நீதிமன்றங்களும் வீட்டு வேலைகளை அங்கீகரிக்கும் தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. சமீபத்தில் விபத்துச் சாவுக்கான இழப்பீடு பற்றிய ஒரு வழக்கில், வீட்டைப் பார்த்துக்கொள்ளும் மனைவியுடைய உழைப்பின் மதிப்பு, கணவனின் அலுவலக வேலை மதிப்பை விடக் குறைந்ததல்ல என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டது.
  • ‘பெண்கள் வேலை’ என்று கருதப்படும் வீட்டு வேலை பற்றிய சமூகப் பார்வையைச் சற்று ஆழமாகப் புரிந்துகொள்ள, வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப்பார்ப்பது சரியாக இருக்கும்.
  • 1960-களிலும் 70-களிலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்கள் வெடித்தன.
  •  இந்த இரண்டாம் கட்டப் பெண்கள் இயக்கத்தின்போது, இதுவரை பொதுவெளியில் பெரிதாகப் பேசப்படாத விஷயங்களைப் பெண்கள் பேசினார்கள். குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலைகளை விடுமுறையின்றிச் செய்வது போன்ற தங்களது ‘தனிப்பட்ட’ வாழ்க்கை அனுபவங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொண்டனர்.
  • ‘இல்லத்தரசி’ (ஹவுஸ் வைஃப்) என்று அழைக்கப்படும் பெண்ணின் உழைப்பு எவ்வாறு இருட்டடிக்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

வரலாற்றில் பெண் உழைப்பு

  • 18-ம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டதன் விளைவாக, பெரும் தொழிற்சாலைகளில் நவீன இயந்திரங்களைக் கொண்ட உற்பத்தி முறை உருவானது.
  • இந்தக் காலகட்டத்துக்கு முன்பு, குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் குடிசைத் தொழில்கள் மூலம் வீட்டிலும், வீட்டைச் சுற்றியுமே உற்பத்தியின் பெரும் பகுதி அமைந்தது. பெண்கள், குழந்தைகள், ஆண்கள் அனைவரும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டனர்.
  • தொழிற்புரட்சிக்குப் பிறகு, ஆண்களே அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலை வேலைகளுக்குச் சென்றனர். குழந்தைப் பராமரிப்பின் காரணமாக, தூரத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தியில் பெண்களால் பங்கெடுக்க முடியவில்லை.
  • மாறிவந்த சமூகச் சூழலில், வேலை அல்லது உற்பத்தி என்பது தொழிற்சாலைகளில் நடைபெறும் ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது. வீடு என்பது உல்லாசமாக இருக்கும் இடமாகவும், நுகர்வுக்கான தளமாகவும் கருதப்பட்டது.
  • வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ‘இல்லத்தரசி’யாக கட்டுரைகளிலும், நாவல்களிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஆனால், வீட்டில் ஒருவர் உழைத்தால்தான் மற்றவர்கள் உண்டு, உறங்கி, உல்லாசமாக இருக்க முடியும் என்னும் சமூக எதார்த்தத்தை 1970-களின் பெண்ணியச் சிந்தனையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.
  • மேலும், வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகள்தான் தொழிற்சாலைக்குச் செல்லும் உழைப்பாளியின் உழைப்புச் சக்திக்கு அடிப்படையாகவும் உதவியாகவும் இருக்கின்றன என்பதை உணர்த்தினார்கள்.
  • தொழிற்சாலையில் பல மணி நேரம் சக்கையாகப் பிழியப்படும் தொழிலாளி, களைப்புடன் வீட்டுக்குத் திரும்பும்போது, சமையல் செய்திருக்க வேண்டும், வீடு சுத்தமாகியிருக்க வேண்டும், அவன் துணிகள் துவைக்கப்பட்டிருக்க வேண்டும், மறு நாள் காலை அவன் வேலைக்குக் கிளம்பும் முன், மதிய உணவு டப்பாவும் தயாராக இருக்க வேண்டும்.

மாறாத எதார்த்தங்கள்

  • பெண்ணின் இவ்வாறான இலவசச் சேவையினால்தான், மிகக் குறைவான கூலியைப் பெற்றபோதும், உழைப்பாளியின் குடும்பத்தால் பிழைக்க முடிந்தது.
  • ஆகவே, உற்பத்தித் துறை சம்பாதித்த லாபத்துக்கும், அடைந்த வளர்ச்சிக்கும் பெண்ணின் வீட்டு வேலை அஸ்திவாரமாக அமைந்தது. இருப்பினும், வீட்டு வேலை ஒருபோதும் உழைப்பாகப் பார்க்கப்படவில்லை.
  • மாறாக, ஊதியம் ஏதுமின்றி இதனை அயராமல் செய்வதே பெண்ணின் இயல்பு, இயற்கையின் நியதி, மனைவியின் கடமை, அன்பு, அரவணைப்பு, தன்னலத் தியாகம், தார்மீகப் பொறுப்பேற்பு என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டது.
  • இந்தப் புகழாரங்கள் மூலம், பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்ணின் உழைப்பு செலுத்திய பங்கீடு பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டது.
  • எனவேதான், 1970-களில் மேற்கத்திய நாடுகளின் பெண்ணுரிமை இயக்கத்தின்போது, சுய வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு அரசு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
  • ஆனால், ஊதியம் கோருவதை அனைத்துப் பெண்ணியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதியம் கேட்பதன் மூலமாக, பெண்கள்தான் எப்போதும் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்னும் சமூகப் புரிதல் இன்னும் வலுவடையும் என்றனர் சிலர்.
  • வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படும் பெண்களை வீட்டுச் சிறையிலிருந்து விடுவித்துப் பொது வாழ்க்கையில் ஈடுபடுத்துவதே நமது நோக்கமாக இருக்க முடியும் என்று வாதிட்டார்கள். வீட்டு வேலைக்கு ஊதியம் என்ற வாதம் எழும்போதெல்லாம், 1970-களில் பெண்ணியர்கள் முன்வைத்த கேள்விகளையும் நாம் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும்.
  • பெண்கள் இயக்கங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு மாற்றங்களில் ஒன்றாக ‘ஹவுஸ்வைஃப்’ என்பதற்குப் பதிலாக ‘ஹோம் மேக்கர்’ என்னும் பாலினச் சார்பற்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
  • அதாவது, ‘குடும்பத்தைப் பராமரிப்பவர்’ ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது. தமிழிலோ ‘இல்லத்தரசி’ என்னும் சொல் இன்னும் கைவிடப்படவில்லை. வார்த்தைகள் மாறினாலும் மாறாவிட்டாலும், சமூக எதார்த்தங்கள் மாறவில்லை.
  • ஐநா சபையின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு 2018-ல் வெளியிட்ட அறிக்கை சொல்வது: உலகளவில், ஊதியமற்ற வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யப்படும் மொத்த நேரத்தில், 76.2% நேர வேலையைப் பெண்கள் செய்கின்றனர்.
  • இது ஆண்கள் செய்வதைவிட மூன்று மடங்குக்கும் மேலானது. ஆண்கள் மிகக் குறைவாக வீட்டு வேலைகள் செய்யும் நாடுகளில், இந்தியா இடம்பெறுகிறது.
  • உலகளவில், வீட்டுப் பராமரிப்புப் பொறுப்புகளினால், 61 கோடிப் பெண்களால் வேலைவாய்ப்புகளில் ஈடுபட முடியவில்லை, அல்லது தங்களது வேலையில் முன்னேற முடியவில்லை.

மதிப்பீடும், வேலை பகிர்தலும்

  • இந்த நிலையை மாற்றுவது எப்படி? முதற்படியாக, பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்குச் சமூக அளவில் ஒரு பண மதிப்பீடாவது செய்ய வேண்டும். ஊதியமற்ற பெண் உழைப்பை அங்கீகரிக்கும் குறைந்தபட்ச முயற்சியாக இதனைப் பலரும் கருதுகின்றனர்.
  • ஐநா சபை உட்பட பல அமைப்புகள் சில மதிப்பீடு முறைகளைப் பரிந்துரைக்கிறார்கள். ஊதியமற்ற பராமரிப்பு உழைப்பினால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்னும் புள்ளிவிவரத் தகவலைக் கண்டறிவதும், அதனை மக்களுக்கு எடுத்துச்செல்வதும் அவசியமாகும்.
  • மேலும், ஊதியமற்ற பராமரிப்பு வேலைகளின் சுமையை மூன்று சமூக அமைப்புகள் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
  • இவை, அரசு, தனியார் துறை, குடும்பம். பெண்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வேலையிடங்களிலும் குழந்தைக் காப்பகங்கள், தாராளமான பிரசவ கால விடுப்பு, குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்புப் பொறுப்புகளைச் சமாளிக்க உதவும் வேலை நேர மற்றும் விடுப்புத் திட்டங்கள், அனைத்து வீடுகளிலும் தண்ணீர் வசதி மற்றும் சமையல் எரிவாயு, வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்பை ஊக்குவிக்கும் ஊடகப் பிரச்சாரங்கள் போன்ற முன்முயற்சிகள் அவசியம்.

இல்லையென்றால், வீட்டு வேலை ‘இல்லத்தரசிகளின்’ பொறுப்பாகவே நின்றுவிடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்