TNPSC Thervupettagam

ஆதார், ஆர்டிஐ, ஆர்டிஇ, 100 நாள் வேலை திட்டம்: மன்மோகன் சிங்கின் மகத்தான சாதனைகள்

December 28 , 2024 13 days 40 0

ஆதார், ஆர்டிஐ, ஆர்டிஇ, 100 நாள் வேலை திட்டம்: மன்மோகன் சிங்கின் மகத்தான சாதனைகள்

  • கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ஒன்றிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் (பாகிஸ்தான்) , காஹ் பகுதியில் மன்மோகன் சிங் பிறந்தார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது மன்மோகன் சிங்கின் குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. முதலில் உத்தராகண்டின் ஹல்துவானில் வசித்த அவர்கள் பின்னர் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.
  • பாகிஸ்தானில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த மன்மோகன் சிங், இந்தியாவில் உயர் கல்வியை தொடர்ந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழங்களிலும் பயின்றார்.
  • கடந்த 1966 முதல் 1969 வரை ஐ.நா. சபையில் மன்மோகன் சிங் பணியாற்றினார். பின்னர் டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போதைய வெளிநாட்டு வணிக துறை அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா தனது அமைச்சரவையின் ஆலோசகராக மன்மோகன் சிங்கை நியமித்தார். ஒரு காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து மீண்டும் பேராசிரியர் பணிக்கு திரும்ப மன்மோகன் முடிவு செய்தார்.
  • இந்த விவகாரம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் செயலாளர் பி.என்.ஹஸ்கரின் கவனத்துக்கு சென்றது. மன்மோகனின் பொருளாதார அறிவை அறிந்திருந்த ஹஸ்கர், அவரை நிதித் துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்தார்.
  • இதன்பிறகு கடந்த 1982-85-ம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1985-87 வரை திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் மன்மோகன் பதவி வகித்தார்.கடந்த 1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் மத்திய நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். அப்போதுதான் பொருளாதார தாரளமயமாக்கலை அவர் அமல்படுத்தினார்.
  • இதன்மூலம் கூன் விழுந்திருந்திருந்த இந்திய பொருளாதாரம் நிமிர்ந்து எழுந்தது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை பிரதமராக பதவி வகித்தார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஆதார் அடையாள அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் ஆணி வேராக ஆதார் இருக்கிறது. அவரது ஆட்சிக் காலத்தில் நேரடி மானிய உதவி திட்டமும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் திட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.
  • நகரங்களுக்கு இணையாக கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் மன்மோகன் சிங் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) அமல் செய்யப்பட்டது. பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தியதில் ஆர்டிஐ முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை தவிர நிலம் கையகப்படுத்துதல் சட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என பல்வேறு மகத்தான சாதனைகளை மன்மோகன் சிங் சப்தமில்லாமல் சாதித்துள்ளார்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம்:

  • கடந்த 1974-ம் ஆண்டு இந்தியாவில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. இதன்காரணமாக இந்தியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் உடன் கடந்த 2005-ம் ஆண்டில் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அரசுக்கு அளித்த ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றன. அப்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே ஒப்பந்தத்தை கைவிட அறிவுறுத்தினார். ஆனால் மன்மோகன் சிங் தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். பல்வேறு தடைகளை தாண்டி அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்