TNPSC Thervupettagam

ஆதிக்க மனப்பான்மையே வன்முறைக்கு அடிப்படை

August 17 , 2023 513 days 348 0
  • சாதி ஆணவம் எனும் கொடிய நோய், பள்ளி மாணவர்களை எவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளத் தூண்டுகிறது என்பதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த +2 மாணவரான சின்னத்துரைக்கு நேர்ந்த சாதியக் கொடுமை. இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினரான கோ.ரகுபதி, நேரில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார். ‘தலித்துகளும் தண்ணீரும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரான ரகுபதி, ஏற்கெனவே தென் மாவட்ட வன்முறைகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதியவர்.

நாங்குநேரி சம்பவத்தின் பின்னணி என்ன?

  • தென் மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் கூட்டுசேர்வதும், பிற சாதியினரைத் தாக்குவதும் நெடுங்காலக் கதை. அதிலும் நாங்குநேரியில் சாதியக் கொலை போன்ற கொடிய சம்பவங்கள் 1970களிலேயே நிகழ்ந்துள்ளன. நாங்குநேரிக்கு உள்ளேயே அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.
  • மொத்தம் 114 மாணவர்களைக் கொண்ட இந்த பள்ளியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் (டிஎன்சி) பிரிவு மாணவர்களுக்கு (94 பேர்) இடையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மட்டுமே படித்துவரும் அளவுக்குக் கடும் சாதிய மேலாதிக்க அச்சம் நிலவும் நிலம் அது. இந்தக் காரணத்தினால்தான் மாணவர் சின்னத்துரையும் அவரது தங்கை செல்வியும் வீட்டருகிலுள்ள இந்தப் பள்ளியைவிட்டு விலகி 13 கி.மீ. தொலைவில் வள்ளியூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள்.
  • நாங்குநேரி பட்டியல் சாதி மக்களின் குடியிருப்புப் பகுதியில் உள்ள வழித்தடத்தில் பேருந்து நிறுத்தமே இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஊருக்குள் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வசிப்பிடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அன்றாடம் நடந்தே சென்று பேருந்து ஏறி வள்ளியூருக்குச் சென்றுள்ளனர்.
  • தன்னைத் தாக்கியுள்ள ஆதிக்க சாதி மாணவர்களோடு சேர்ந்துதான் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பேருந்தில் பயணம் செய்து பள்ளி சென்று படித்திருக்கிறார் சின்னத்துரை. ஒன்றாகச் சென்றுவந்தாலும் சின்னத்துரையை அவர்கள் அடிமைபோல நடத்தியுள்ளனர். சீண்டல் அத்துமீறவே சின்னத்துரை பள்ளிக்கு ஒரு வாரம் செல்லவில்லை. நல்லொழுக்கம் கொண்ட, படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய மாணவர் பள்ளிக்கு வராததால் தலைமையாசிரியர் நடந்ததை விசாரித்திருக்கிறார்.
  • கணவரால் கைவிடப்பட்டு சத்துணவுக் கூடத்தில் அன்றாடக் கூலிக்கு வேலை பார்க்கும் சின்னத்துரையின் தாய், தனது மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று நடந்ததை விவரித்திருக்கிறார். கைப்பட புகார் கடிதம் எழுதச் சொல்லி தலைமையாசிரியர் கேட்க, சின்னத்துரையும் கொடுத்திருக்கிறார்.
  • கடிதம் எழுதிய நாளன்று குற்றத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதி மாணவர்கள் எவரும் பள்ளிக்கு வரவில்லை. அன்று மாலை ஆதிக்க சாதி மாணவர்களில் ஒருவரின் பாட்டி, இன்னொருவரின் சித்தப்பா சின்னத்துரை வீட்டுக்கு வந்து புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டியிருக்கிறார்கள். பிறகு இரவு 10 மணிக்கு இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு வன்மமும் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கும் மனப்பான்மையும் மாணவர்களுக்கு எங்கிருந்து வந்தது?

  • இப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரில் பலர் கந்துவட்டி வசூல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றல், மணல் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து போன்ற முறைகேடான காரியங்களில் ஈடுபடுவதையே வாழ்க்கை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். தவிர, இங்குள்ள சுற்றுப்புற கிராமங்களில் கோலோச்சும் வெவ்வேறு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட சில பொறுப்புகளில் ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களே இருக்கின்றனர்.
  • இத்தகைய ஆண்ட பரம்பரை மமதையில் வாழ்பவர்களின் சந்ததியினரில் சிலரிடம் சட்டத்துக்கு எதிரான போக்கும் சாதி ஆதிக்க மனப்பான்மையும் இயல்பாக நிலைகொண்டுள்ளன. இதன் உச்சபட்சமாக உடன் பயிலும் மாணவரைத் தாக்கிய பிறகும் குற்றவுணர்வின்றி இருத்தல், சிறை சென்று திரும்புதலைப் பெருமிதமாகக் கருதுதல் என்பதாக மாறியுள்ளனர். இத்தகைய சமூகக் கட்டமைப்புக்குள் சிக்கித் தவிக்கும் பட்டியல் சாதி மக்கள் படிப்புக்காகவும் பிழைப்புக்காகவும் ஊரைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

சமூகநீதியை, சமூக நல்லிணக்கத்தைக் கட்டமைப்பதில் அரசின் பங்கு இதில் எப்படி இருக்க வேண்டும்?  

  • தொண்ணூறுகளில் தமிழகத்தை உலுக்கிய கொடியங்குளம் கலவரத்துக்குப் பிந்தைய ஆய்வறிக்கை, ராமமூர்த்தி ஆணையத்தின் பரிந்துரை ஆகியவற்றில் தென் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் இருப்பதற்கு அங்கெல்லாம் தொழில் துறை வளர்ச்சியின்மையே முக்கியக் காரணியாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
  • இன்றும் அதே காரணம் நீடிக்கவே செய்கிறது. ஒருபுறம் வேலையின்மை மறுபுறம் அறவழியில் பொருளீட்டுதல் மீதும், உழைப்பின் மீதும் நம்பிக்கையின்மை ஆகியவை இங்குள்ள ஆதிக்க சாதியினரிடம் நங்கூரமிட்டுள்ளன.
  • இத்தகைய சூழலில் குற்றத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தண்டனையோடு சேர்த்து கல்வியும் கற்பிக்க சீர்த்திருத்தச் சிறைப் பள்ளிகள் அதிகம் ஏற்படுத்தப்பட வேண்டும். தண்டனை மட்டும் கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து சமூகக் குற்றவாளிகளாகவே நீடிப்பர். மறுமுனையில் ஆதிக்க சாதியினரின் கந்துவட்டிக் கடன் வலையில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் பட்டியல் சாதி மக்களுக்குப் பொருளாதாரத் தற்சார்பு நிலை ஏற்பட தாட்கோ போன்று மேலும் பல திறன் பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வன்முறைகள் நிகழ்வதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் வேண்டும்?  

  • சாதி, இன உணர்வால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கும் வழிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்த அரசு முன்வரும் என நினைக்கிறேன். சமூகப் பூசல்கள் மிகுந்துள்ள பகுதிகளிலும் பள்ளிகளிலும் காவல் துறை, வருவாய்த் துறை, பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். நல்லிணக்கச் சந்திப்புகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  • தங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறுளைக் கையில் கட்டியிருப்பது, பயன்படுத்தும் பொருள்களில் சாதியக் குறியீடுகளை உணர்த்தும் வண்ணங்களையும் குறியீடுகளையும் பொறித்திருப்பது என இயங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு உரிய ஆலோசனை வழங்கும்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஆணையையும், ஏற்கெனவே தமிழகத்தில் 1980களிலும் 1990களிலும் நிகழ்ந்த வன்முறைகளை ஒட்டி நியமிக்கப்பட்ட ஆணையங்கள் முன்வைத்த பரிந்துரைகளில் தேவையானவற்றையும் செயல் படுத்தினால் வருங்காலத்தில் வன்முறைகள் உருவாவதைத் தடுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்