TNPSC Thervupettagam

ஆந்திர ரயில் விபத்து அசம்பாவிதங்கள் தொடரக் கூடாது

November 2 , 2023 389 days 268 0
  • ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலை யத்தில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
  • அக்டோபர் 29 அன்று, விசாகப்பட்டினத்திலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே, சிக்னல் இல்லாததால் விசாகப்பட்டினம் - பலாஸா ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
  • அப்போது அதே தடத்தில் வந்துகொண்டிருந்த விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயில் அதன் பின்பகுதியில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயிலானது, சிவப்பு சிக்னல் போடப்பட்ட பின்னரும், ரயிலை நிற்காமல் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
  • சமீப காலமாக ரயில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. அக்டோபர் 11இல் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தில் ஆனந்த் விஹார் - காமாக்யா வடகிழக்கு ரயில் தடம்புரண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் அக்டோபர் 31 அன்று இரவு சுஹைல்தேவ் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகளும் இன்ஜினும் தடம்புரண்டு விபத்து நிகழ்ந்திருக்கிறது. சிறிய அளவிலான விபத்துகள் பெரும்பாலும் ஊடகக் கவனம் பெறுவதில்லை.
  • கட்டமைப்பில் கோளாறுகள், தொழில்நுட்பப் பிரச்சினைகள், மனிதத் தவறுகள் எனப் பல்வேறு காரணிகள், ரயில் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. சமீபகாலமாக, வந்தே பாரத், நமோ பாரத் போன்ற அதிவேக ரயில்களை இயக்குவதில் ரயில்வே துறை அதிகக் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. தேச வளர்ச்சிக்குப் புதிய ரயில்கள் தேவை. அதே நேரம், அதற்கேற்ற மேம்பட்ட உள்கட்டமைப்பையும் தொழில்நுட்ப வசதிகளையும் உறுதிப்படுத்தாமல் வெற்றி சாத்தியமாகாது.
  • ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக, அணு விஞ்ஞானியும் இயந்திரவியல் பொறியாளருமான அனில் காகோத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 2012இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்குழுவின் பரிந்துரைகளில் மிகச் சில மட்டுமே அமல்படுத்தப்பட்டன. பெரும்பாலானவற்றை அமல்படுத்த முடியாததற்கு, நிதிப் பற்றாக்குறை முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. விவேக் தேவராய் குழு, வினோத் ராய் குழு எனப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை.
  • ஆந்திர விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும், விபத்தைத் தடுக்கும் ‘கவச்’ அமைப்பு பொருத்தப்பட்டிருக்கவில்லை. ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயில்களிலும் இந்த அமைப்பு இல்லை. இந்தியாவில் 1.2 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ரயில் தண்டவாளங்கள் இருந்தாலும், இதுவரை 1,465 கிலோமீட்டர் நீளத்துக்குத்தான் (1%) கவச் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், 121 ரயில் இன்ஜின்களில்தான் இந்த அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது.
  • தவிர, ரயில் பாதுகாப்புப் பணிகளுக்கான நிதி குறைக்கப்படுவதாகத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு தொடர்பான பணிகளில், 53,180 பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது. இவ்வளவு குறைபாடுகளுடன் இந்திய ரயில்வே இயங்குவது விமர்சனத்துக்குரியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்