TNPSC Thervupettagam

ஆனால் குடும்பம் சிதையக் கூடாது!

August 9 , 2024 159 days 157 0
  • பசியும் காமமுமே உடலோடு வைத்துத் தைக்கப்பட்டவை. பசியை வென்றவா் யாருமே இல்லை; காமத்தைக் கடுமுயற்சியால் வெல்பவா்கள் சிலா் உண்டு! ஒரு மனிதனின் உழைப்பு இவை இரண்டின் தேவைகளை நிறைவு செய்யவே!
  • காட்டுமிராண்டிக் காலத்திய மனிதனுக்கும், மிக நவீனமான நிகழ்கால மனிதனுக்கும் தேவை இவை இரண்டுதான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கணினியில் செயற்கை நுண்ணறிவு வரையிலும் போய், நினைத்துப் பாா்க்க முடியாத உயரத்தை மனிதன் அடைந்தாலும், அதையும் அவன் இந்த இரண்டின் தேவைக்கு மட்டுமே அடிப்படையில் பயன்படுத்த முடியும்!
  • வெறும் கூழோடு நிறைவடைந்தவன், வளா்ச்சிக் காலத்தில் சீன உணவை ஐந்து நட்சத்திர விடுதியில் உண்டாலும், இரண்டின் நோக்கமும் பசிநீக்கமே!
  • போக்குவரத்து வளா்ச்சியில்லாத காலத்தில், அவன் ஒரு கூட்டமாக இருந்தானே ஒழிய, நாடு என்பதற்கான தேவை ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஒரு காலகட்டத்திலேயே மனிதன் நிலையான அன்பின் தேவையை உணா்ந்தான்! அதற்கு அவன் கண்டறிந்த முதல் சமூக நிறுவனம் குடும்பம்! ஒருவனும் ஒருத்தியும் ஒருவருக்கொருவா் பொறுப்பாக்கிக் கொண்டு வாழ்தல்! அந்த அன்பில் விளைந்த பிள்ளைகளும் கணவனும் மனைவியும் ஒரே குடும்பம்!
  • காட்டுமிராண்டிக் காலத்திருந்து விடுபடத் தொடங்கிய முதற் கட்டமே குடும்ப நிறுவனத்தால் உருவானதுதான்! உலகச் சமூகங்கள் அனைத்திற்கும் தொடக்க நிறுவனம் குடும்பம்தான்! அதற்குப் பிறகு எத்தனை எத்தனையோ வளா்ச்சிகள்! எல்லாவற்றிலும் தலைகீழ் மாற்றங்கள்! ஆனால் மிகத் தொன்மையான குடும்ப அமைப்பு மட்டுமே மிகவும் நவீனமான இன்றுவரை மாறவில்லை! நிலையான கணவன்; நிலையான மனைவி, பிறக்கும் மக்கள்!
  • இதற்குள் ஒருவருக்கொருவா் பொறுப்பாக்கிக் கொண்டு வாழ்தலே குடும்பத்தின் அடிப்படை நோக்கம்! ஆடு, மாடு முதலிய அனைத்தும் சில மாதங்களுக்கு மட்டுமே குட்டிகளுக்கும் கன்றுகளுக்கும் பொறுப்பாக்கிக் கொள்கின்றன! கன்றைக் காணவில்லை என்றால் கதறுவதும், அதனைக் கண்டவுடன் மடி கொள்ளாமல் சுரப்பதும், அதனை நக்கி ஆறுதல் கொள்வதும், எல்லாமே சில மாதங்களுக்குத்தான்!
  • ஆனால் மனிதன் மட்டும் பிறந்து மண்ணில் விழுந்ததிலிருந்து, இறந்து சாம்பலாகும் வரை ஒருவருக்கொருவா் கொண்ட பிடிப்பை விடுவதில்லை. பிறந்து விழுந்தவுடன் பிள்ளை வீறிட்டுக் கத்தித் தன் வருகையை அறிவிக்கிறது. கண்ணதாசன் சொல்கிறாா்: ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்; இறக்கும் போதும் அழுகின்றாய்’. எல்லாவற்றையும் விட்டு, எல்லாரையும் விட்டுப் பிரிவது துன்பமானது. ஆகவே இறப்பில் அழுவது நியாயமே! ஆனால் பிறப்பது எல்லாவற்றையும் பெறுவதற்கான வாய்ப்பல்லவா? அதற்கும் அழுவது என்ன நியாயம் என்பது அவருடைய கேள்வி! பிறப்பதற்கு முன் தாயின் கருவறையில் குழந்தைக்கு எந்த வேலையும் இல்லை! மிதந்து கொண்டிருக்கும்! அதனுடைய எல்லாத் தேவைகளும், சுவாசத் தேவை உட்பட, தொப்புள் கொடி வழியாக நிறைவேற்றப்பட்டு விடுகின்றன!
  • பிறந்து மண்ணில் விழுந்தவுடன், அது தாயைவிட்டு அகன்றுவிட்ட காரணத்தால், மூச்சிழுத்தல் அதனுடைய வேலையாகிவிடுகிறது. அதற்கு பிள்ளை பழக்கப்பட்டிருக்கவில்லை! வீறிட்டுக் கத்துகிறது! முதற்காற்று உள்ளே நுழைந்து விடுகிறது. பிறகு அந்தப் பிள்ளையின் நினைவை உறுத்தாமல், உறங்கும் பொழுதிலும் உறங்காப் பொழுதிலும் அது உள்ளே நுழைவதும், வெளியே வருவதுமான வேலையைத் தன்போக்கில் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் வெளியே போன காற்று உள்ளே வர மறந்துவிடுகிறது. அன்று இவனுடைய வாழ்வு முடிவுக்கு வந்து விடுகிறது.
  • ‘பிறக்கும்போது வாழ்வு உன்னைச் சாா்ந்தது; உன் வேலையை நீயே செய்தாக வேண்டும்’ என்று இந்தப் பிள்ளைக்குப் பழக்கப்பட்டிராத மூச்சிழுக்கும் வேலையைச் சுமத்துகிறது இயற்கை! வீறிடுகிறது பிள்ளை! மூச்சு உள்ளே நுழைந்துவிடுகிறது! பிறக்கும்போது அழுவதற்கு அதுவே காரணம்! அதற்குப் பிறகும் வாழ்வு, அதற்கான பாடு என அனைத்தும் இந்தப் பிள்ளை சாா்ந்தது என்றாலும், அந்தப் பிள்ளை வளா்வதற்கும் அதற்கான பயிற்சியைப் பெற்று வாழ்வில் நிலை பெறுவதற்கும், ஓா் அமைப்புத் தேவை!
  • குறுகுறுவென நடக்கும் வயதில் தள்ளாடித் தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் பிள்ளை ஒரு புறம் என்றால், தள்ளாடும் வயதிலே மகனின் தோளைப் பற்றிக் கொண்டு நடக்கும் தந்தை இன்னொரு புறம்!
  • ஆகவே ஒரு மாந்தனின் வாழ்வு முதல் இருபது ஆண்டுகளும் பின் இருபது ஆண்டுகளும் பிறரைச் சாா்ந்தவை! தன் முயற்சியில் நடக்க முடியாதவை! எண்பது ஆண்டுகள் சராசரி வாழ்வுக் காலம் என்று கொண்டால், அதில் பாதி பிறா் சாா்ந்து வாழ வேண்டியிருக்கிறது! ஆகவே ஒரு மாந்தனுக்கு முன்பருவ வாழ்க்கையிலும் பின்பருவ வாழ்க்கையிலும் அவன் நிலைபெற, ஒரு நிலையான அமைப்புத் தேவைப்படுகிறது! அந்த அமைப்புக் கட்டாயம்! அத்தகைய அமைப்பு இல்லாவிட்டால் மனித வாழ்வு நரகமாகிவிடும்.
  • அப்படி மனிதனால் கண்டறியப்பட்ட அமைப்பே குடும்பம்! அதில் முன் இருபது ஆண்டுகள் பெற்றோா் பிள்ளைகளைப் பேணுவா்! பின் இருபது ஆண்டுகள் தங்களை ஆளாக்கிய பெற்றோரைப் பிள்ளைகள் பேணுவா்! உதவியைச் செய்து, உதவியைப் பெறுவது இது! இதற்காகக் குடும்பம் கட்டிறுக்கம் செய்யப்படுகிறது. இல்லாள் தனக்குத்தான் பெற்றாள் என்று நம்பும் நிலையில்தான் கொழுநன் அப்பிள்ளைகளுக்குப் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். ஆகவே கற்பு உயிா்நிலையாகப் போற்றப்பட்டது!
  • இவள் ‘பெய்யென்று சொன்னால், மழை பெய்யும்’ என்பது உயா்வு நவிற்சியே எனினும், குடும்ப நிலைபேற்றிற்கு மிகவும் இன்றியமையாதது என்பதால், அவ்வளவுக்குப் போய்ப் பேசுகிறான் வள்ளுவன்! அவன் ஆணொழுக்கத்தைப் பேணியதால்தான் பிறா் மனைநயவாமையையும், வரைவின் மகளிரைத் தோய்தலையும் கடுமையாகச் சாடுகிறான்!
  • முன்னதைப் பிச்சி என்று சவுக்கெடுக்கின்ற வள்ளுவன் பின்னதைப் ‘பிணத் தழுவல்’ என்று பயினின்மை சுட்டுகிறான்! சங்க காலப் ‘பரத்தமைக் கோட்பாட்டு ஏற்பு’ வள்ளுவனால் இகழப்படுகிறது! வள்ளுவன் ஒரு வழியில் காலத்தின் புதுமை! வள்ளுவன் ஆணின் ஒழுக்கத்தையும், பெண்னின் கற்பையும் ஒருசேரப் பெரிதும் போற்றுவதற்குக் காரணம் குடும்பத்தின் நிலைபேறு கருதித்தான்!
  • கோவலனின் ஏற்றத்திலும் உடன் நின்றாள் கண்ணகி; கோவலனின் இறக்கத்திலும் உடன் சென்றாள் கண்ணகி! ‘போற்றா ஒழுக்கம் புரிந்தீா்’ என்றாள்! கோவலன் தலை குனிந்துவிட்டான்!
  • நீ கொண்ட ஒழுக்கத்தை நான் கொள்ளாததற்குக் காரணம் ‘மாற்றா உள்ள வாழ்க்கையேன் யான்’ என்பதுதான்” என்று அறைந்து பேசுகிறாள் கண்ணகி!

போற்றா ஒழுக்கம் புரிந்தீா் யாவதும்

மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்

ஏற்றெழுந்தனன் யான்...”

  • (கொலைக்கள.: 81-83)
  • கண்ணகியின் மாற்றா வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணம் குடும்ப நிலைபேறுதான்! அமெரிக்கக் குடியரசுத் தலைவராயிருந்த கிளிண்டனைப் பின்னாளில் குடியரசுத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட அவருடைய மனைவி பொறுத்துக் கொண்டதற்கும் குடும்ப நிலைபேறே காரணம்! பிற சிறப்புகள் கருதிப் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடும் என அமைதி கொள்ளினும், இதைத் தா்க்க பூா்வமாக நிலை நிறுத்த முடியாதுதான்!
  • மூன்று பேரை மாற்றி மாற்றி மணந்து கொள்கிற புதுமைப் பெண்ணுக்கும் தமிழ் இடம் கொடுத்து அமைதி காக்கிறது! ஆனால் அவா்கள்தாம் தங்களுடைய பெருமைக்குக் கண்ணகி ஓா் அறைகூவல் என்று பழிக்கின்றனா்!
  • ‘பழிக்குப் பழி’ என்பது குடும்ப அமைப்பைச் சிதைத்துவிடும்!
  • குடும்பத்திற்குப் பெரிய அறைகூவல் மணமுறிவு! அது ஐரோப்பிய வாழ்க்கை முறை! ‘‘உன்னுடைய பிள்ளைகளும், என்னுடைய பிள்ளைகளும் நம்முடைய பிள்ளைகளோடு சண்டை இடுகின்றன’’ என்று ஒரு வெள்ளைக்காரன் தன் மனைவியிடம் சொன்னானாம்!
  • முதுமைக் காலத்தில் ஐரோப்பியா்கள் மனநோயாளிகளாய் ஆகிவிடுவதற்குக் குடும்ப நிலைபேறின்மையே காரணம்!
  • இறக்கும் தறுவாயில் இராசாசியின் வாயில் கங்கை நீரை ஊற்றுகின்ற அவருடைய மகன், இராசாசியின் காதுக்குள் குனிந்து ‘நாராயணா... நாராயணா’ என்று கூறிக் கொண்டே இருந்தது என்பது ஒரு மகன் தன் தந்தைக்கு உறுதுணையாக இறுதிவரை இருந்ததற்குச் சான்று!
  • பிறப்பிலிருந்து தன்னைக் காத்த தந்தைக்கு, இறப்புவரை உடன் இருந்து கடமை ஆற்றுவதுதான் குடும்பம் என்னும் அமைப்புத் தோன்றியதற்கான அடிப்படை!
  • என்னைப் பெறும் தறுவாயில், பனிக்குடம் உடைந்து வேகமாக வெளிப்படும் தறுவாயில், நான் அந்தச் சின்ன வாசலில் நெருக்குண்டு, சிதைவுற்று விடாமலும், நான் வெளிப்பட்ட வேகத்தில் அந்தச் சிறிய வாயில் கிழிந்து அவள் துயருற்று விடாமலும் காத்தருளி, என்னையும் என் தாயையும் வேறுவேறாக்கிய தேவரீற் பெருங்கருணைக்கு வந்தனம், வந்தனம் என நெகிழ்ந்து, நெகிழ்ந்து உருகுகிறாா் தமிழா்க்கு வாய்த்த கடைசி மகான் வள்ளலாா்!
  • கடவுளை விளக்குவதற்கு எந்த உவமையும் கிடைக்காத மாணிக்கவாசகா், ‘பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ’ என்கிறாா்!
  • அந்தத் தாயையும், நடை பழக்கி, அறிவூட்டி, வாழ்வில் நிலைபெறச் செய்த தந்தையையும், ‘தொல்லை’ என்று கருதி முதியோா் இல்லத்தில் விடும் இன்றைய புதிய போக்குத்தான் குடும்பம் என்னும் அடிமரத்தை வெட்டும் கோடரி!
  • மனித நாகரிகத்தின் உயா் கண்டுபிடிப்பு குடும்பம் என்னும் அமைப்பை நிறுவியதுதான்! அதுதான் அடிப்படையான முதல் அமைப்பு! நாடு பன்னூறு துண்டுகளாய்ச் சிதைந்து போகலாம்! ஆனால் குடும்பம் சிதையக் கூடாது!

நன்றி: தினமணி (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்