TNPSC Thervupettagam

ஆபத்பாந்தவர் எல்.ஐ.சி.

September 1 , 2021 1066 days 581 0
  • பாலிசிதாரர்களின் பணத்துக்கு முழு உத்தரவாதம், ஆயுள் காப்பீட்டை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கொண்டுசெல்வது, தவணையாகத் திரட்டப்படும் மக்களின் சேமிப்புகளை நாட்டு நலப் பணிகளில் முதலீடுசெய்வது என்ற இலக்குகளோடு செப்டம்பர் 1,1956-ல், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாக அன்றைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான முடிவு இது.
  • கடந்த 65 ஆண்டுகளாக இந்த இலக்குகளை நோக்கி சீரிய முறையில் எல்.ஐ.சி. நடை போட்டு வருகிறது.
  • இன்று எல்.ஐ.சி.யில் தனிநபர் காப்பீடு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 28.62 கோடி. குழுக் காப்பீடு பெற்றிருப்பவர்கள் 12 கோடி என மொத்தம் 40.62 கோடி பாலிசிகளை விற்பனை செய்து, உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி. அபாரமான வளர்ச்சி கண்டிருக்கிறது.
  • 32 கோடிக் குடும்பங்கள் உடைய நாட்டில் 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனம் என்பது அதன் கரங்கள் எப்படி எல்லாத் தட்டு மக்களையும் அரவணைத்து, காப்பீடு என்கிற பாதுகாப்பு வளையத்துக்குள் ஈர்த்திருக்கிறது என்பதற்குச் சாட்சியம்.
  • தேசியமயத்துக்கு முன்பாக 245 தனியார் நிறுவனங்கள் இருந்தும், எட்டப்படாத ஒரு சாதனையை ஒரே நிறுவனமாக எல்.ஐ.சி. நிகழ்த்தியுள்ளது என்பதே அதன் வெற்றி.

மக்கள் அனைவரின் விருப்பம்

  • காப்பீட்டு வணிகத்தில் சிறப்பான நிறுவனம் என்பதன் பொருள், அந்த நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது.
  • வாக்குறுதியே இத்தொழிலில் சரக்கு. ஆகவேதான் குறைவான முதலீட்டில் அபரிமிதமான வருமானத்தை அது ஈட்டுகிறது. ஆகவே, காப்பீட்டு வணிகத்தின் அடித்தளமே அதன் நம்பகத் தன்மைதான்.
  • 2020-21-ம் நிதியாண்டில் கரோனோ காலத்தில்கூட இறப்பு உரிமம் 98.62%-ம், முதிர்வுத் தொகை 89.78 சதவீதமும் வழங்கி சாதனை படைத்திருக்கிறது எல்.ஐ.சி.
  • கரோனா மரணங்களில்கூடக் காப்பீடு எடுத்திருந்தவர்களில் எல்.ஐ.சி. பாலிசிகள் வைத்திருந்தவர்களே அறுதிப் பெரும்பான்மையினர். நெருக்கடி மிக்க காலங்களிலும் எல்.ஐ.சி. தனது வாக்கில் தவறவில்லை.
  • எல்.ஐ.சி.க்கு நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்கள், 1,08,987 ஊழியர்கள், 13,53,808 முகவர்கள் என விரிந்த, பரந்த கட்டமைப்பைக் கொண்டு பாலிசிதாரர்களுக்குச் சேவை புரிந்து வருகிறது.
  • ரத்த நாளங்கள்போலச் சிற்றூர்கள், கிராமங்கள் வரை அதன் வலைப் பின்னல் விரிந்திருப்பது காப்பீடு பரவல் என்ற இலக்குக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
  • 1956-ல் ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. கடந்த 2020-21 நிதியாண்டில் மட்டும் மொத்த வருமானமாக ரூ.6,82,205 கோடியை ஈட்டியுள்ளது. இதில் பிரிமியம் வருவாயாக ரூ.4,02,844.81 கோடியைப் பெற்றுள்ளது.
  • எல்.ஐ.சி.யின் இன்றைய மொத்த சொத்து ரூ.38,04,610 கோடி. இதன் காரணமாகத்தான் இந்திய நிதிச் சந்தையில் எல்.ஐ.சி. விசுவரூபம் எடுத்திருக்கிறது.
  • பல தனியார் நிறுவனங்களின் போட்டி மிகுந்த சூழலிலும் ஆயுள் காப்பீட்டுச் சந்தை வணிகத்தில், புது வணிக பாலிசி விற்பதில் 78.58% சந்தைப் பங்கையும், முதல் பிரிமிய வருவாயில் 66.18% சந்தைப் பங்கையும் பெற்று முன்னணி நிறுவனமாக எல்.ஐ.சி. திகழ்கிறது.
  • போட்டிக்கான கதவுகள் திறந்துவிடப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகும் ஒரு நிறுவனம் இவ்வளவு சந்தைப் பங்கைக் கைவசம் வைத்திருப்பது உலகப் பொருளாதாரத்தில் ஓர் அதிசயம்தான். பிரீமிய வருவாயில் சந்தைப் பங்கு மூன்றில் ஒரு பங்கு என்பதே சாதாரணமானதல்ல.
  • பாலிசிகளில் நான்கில் மூன்று பங்கு சந்தைப் பங்கு என்பது இன்னும் பெரியது. இது வெறும் கணக்கு அல்ல. பாலிசியில் சந்தைப் பங்கு இன்னும் கூடுதலாக இருப்பது சாதாரண மக்களின் கதவுகளை எல்.ஐ.சி. தட்டியிருக்கிறது என்பதன் நிரூபணம்.
  • ஒவ்வொரு ஆண்டும் வரும் உபரி நிதியில் 5% மத்திய அரசுக்கு லாப ஈவுத் தொகையாகவும், 95% பாலிசிதாரர்களுக்கு போனஸாகவும் எல்.ஐ.சி. வழங்கிவருகிறது. கடந்த நிதியாண்டில் கிடைத்த உபரியில் ரூ.2,698 கோடியை லாப ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
  • மக்களின் பணம் மக்களுக்கே என்ற நோக்கத்தில் செயல்படும் எல்.ஐ.சி. மக்களிடமிருந்து திரட்டும் சேமிப்புகளை மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் பல்வேறு நலப்பணித் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது.
  • மத்திய அரசுப் பத்திரங்களில் ரூ.13,87,821 கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.9,87,544 கோடி, வீட்டு வசதிக்காக ரூ.54,406 கோடி, மின் உற்பத்திக்கு ரூ.1,11,082 கோடி, நீர்ப்பாசனம், குடிநீர், சாக்கடை வசதிக்காக ரூ.1,163 கோடி, சாலை, துறைமுகம், பாலம், ரயில்வே வசதிக்காக ரூ.90,948 கோடி, தொலைத்தொடர்பு உட்பட இதர திட்டங்களில் ரூ.41,114 கோடி என மொத்தம் ரூ.26,86,527 கோடிகளை மக்கள் நலனுக்கு முதலீடு செய்துள்ளது எல்.ஐ.சி.
  • இதுதவிர, பங்குச் சந்தை சரியும்போதெல்லாம் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து சரிவைத் தடுத்து நிறுத்தும் ஆபத்பாந்தவனாக எல்.ஐ.சி. இருக்கிறது.
  • முதலீடுகள் தேவைப்படுகின்றன என்று அந்நியர்களுக்கு மத்திய அரசு கதவுகளைத் திறந்துவிட முனையும் வேளையில், உள்நாட்டுச் சேமிப்பே ஜீவ ஊற்று என்பதை எல்.ஐ.சி. நிரூபித்திருக்கிறது.
  • எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனங்களின் தாய்போல விளங்குகிறது. பல பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளின் பங்குகள் எல்.ஐ.சி.யின் கரங்களில் உள்ளன. பொதுத் துறை நிறுவனப் பங்கு விற்பனையில் தொய்வு ஏற்பட்டு, அரசின் வருமானம் வீழும் போதெல்லாம் அரசு அபயக் குரலை எழுப்பினால், எல்.ஐ.சி. ஓடிப்போய்த் தாங்கிப் பிடித்துக் கொள்ளும்.
  • இப்படியொரு வலிமையான ஆயுதம் 100% அரசின் கைவசமே இருக்க வேண்டுமென்பது இந்தத் தேசத்தின் அனுபவம்.
  • ஆனால், மத்திய அரசோ விதை நெல்லை விற்கத் துடிக்கிறது. என்ன காரணம் சொல்ல முடியுமா? நட்டக் கதை இங்கு செல்லுபடியாகாது. திறமையின்மை என்கிற வழக்கமான அவதூறுகளை மீறி எல்.ஐ.சி. உயர்ந்து நிற்கிறது.
  • மத்திய அரசு பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகளின் பங்குகளை விற்பது என அரசு முடிவெடுத்துள்ளது.
  • மிகச் சிறப்பாக லாபத்தில் செயல்பட்டுவரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பதற்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கான பணிகளில் வேகமாக மத்திய அரசு இறங்கியுள்ளது. எல்.ஐ.சி. பங்குகளை விற்கக் கூடாது என ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் போராடிவருகின்றனர்.
  • தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும், சுயசார்பு பொருளாதாரச் செயல்பாட்டுக்கும் சான்றாகத் திகழ்கிற எல்.ஐ.சி. என்ற தேசத்தின் காமதேனுவைப் பாதுகாத்திட வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 09 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்