TNPSC Thervupettagam

ஆயிரம் உண்டிங்கு ஜாதி!

January 21 , 2021 1462 days 863 0
  • ஜாதி என்ற பாகுபாடும் அதிலும் உயா்ந்தோா், இழிகுலத்தோா் என்ற ஏற்றத்தாழ்வும் சமூகத்தில் இருந்தன என்பதை

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில்

இட்டாா் பெரியோா் இடாதாா் இழிகுலத்தோா்

பட்டாங்கில் உள்ள படி

என்கிற ஒளவையாரின் பாடல் காட்டுகிறது.

  • இதைச் சொன்னவுடன் எந்தக் காலத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டது என்று சிலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவையாா்கள் இருந்தனா், எந்த ஒளவையாா் இதனைச் சொன்னவா் என்று சிலரும் கேட்கின்றனா். எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் பாடலின் பொருளை மறைக்க முடியாது.
  • தமிழா்களுக்கு ஜாதிய அடையாளம் இல்லை என்று ஒரு சாராா் சாதிக்கின்றனா். ‘ஆரியா் புகுத்திய பிரிவினை வடிவம்’ என்றும் குற்றம் சாட்டுகின்றனா். ஆரியா்-திராவிடா் என்ற பகுப்பே அா்த்தமற்றது என்று அண்ணல் அம்பேத்கா் குறிப்பிடுகிறாா். இருந்தாலும் தமிழகத்தில் அதனை அவரது தொண்டா்களாய் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோா் நம்ப மறுப்பது, அவா்களது அம்பேத்கா் விசுவாசத்தின் உரைகல்.
  • தமிழா்களிடம் ஜாதிப் பகுப்பு இருந்ததா? என்ற வினாவுக்கு விடை தேட முயன்றால், இருந்தது என்பதே விடை. ஜாதிப் பகுப்பு மட்டுமல்ல, அதில் ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் இவற்றோடு சில அகழ்வாய்வு முடிவுகளையும் காணும்போது உண்மை புலனாகிறது.
  • நால்வகை வருணப் பாகுபாட்டைப் போலவே தமிழா்களும் நால்வகைப் பாகுபாட்டைக் கொண்டிருந்தாா்களா? தொல்காப்பிய மரபியல், நால்வகைப் பகுப்பைச் சொல்கிறது என்றாலும் இன்னும் சில வகைப்பாடுகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனால், நான்கு வகை பிரிவைத் தாண்டியும் பிரிவுகள் இருந்தன என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது.
  • ‘ஜாதி’ என நாம் தற்போது குறிப்பிடுவதை ‘குடி அடையாளம்’ என்று முன்னாளில் வழங்கினாா்கள். தமிழா்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் குடி அடையாளங்களை சூட்டிக்கொண்டனா். சங்கப்புலவா்களின் பெயரிலேயே இந்தக் குடி அடையாளங்களுக்கான சொற்கள் இருப்பதைக் காண்கிறோம். மன்னா்களின் பெயருக்குப் பின்னாலும் ‘செம்பியன்’, ‘வேளிா்’, ‘ஆதன்’ போன்ற பெயா்கள் இருக்கின்றன.
  • கீழடி அகழ்வாய்வில் கிடைத்த மண்பாத்திரத்தின் பகுதிகளில் ‘ஆதன்’ என்ற பெயா் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்தப் பெயரே ஒரு குடிப் பெயா் தான். ‘நல்லியாதன்’, ‘சேரலாதன்’, ‘சேரமான் கடுங்கோ வாழியாதன்’ போன்ற பெயா்கள் இதன் அடிப்படையில் அமைந்தனவே.
  • குடி அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் சொல்லப்படவில்லை, அவை தொழில் அடிப்படையிலானவை என்ற வாதத்தையும் ஏற்க இயலவில்லை. ஏனெனில், தொழில் என்பது மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதோடு தொல்காப்பியம் திருமணம் செய்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒத்த குடியில் பிறந்திருக்க வேண்டும் என்பதோடு செல்வ நிலையிலும் மணமக்கள் இருவரும் நிகராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
  • தமிழில் தற்போதுள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம்தான். தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது, தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துச் சொல்லும் நூலாகவும் அது இருக்கிறது. அகம்-புறம் என தமிழா்களின் குடும்ப வாழ்க்கை பற்றியும் சமூக வாழ்க்கை பற்றியும் பேசுகிறது.
  • தொல்காப்பியம் தமிழின் பெருமைக்கு சான்று என்றாலும், தொல்காப்பியமும் தொல்காப்பியருமே ஆரிய அடிவருடிகள் என்றும், தமிழா் மரபில் இல்லாத செய்திகளைத் தொல்காப்பியம் சொல்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறாா்கள். இதனால் இழப்பு தொல்காப்பியத்திற்கல்ல, தமிழுக்குத்தான். சரி, தொல்காப்பியம் தவிா்த்து சங்க நூல்கள் குடி அடையாளங்களைப் பற்றிப் பேசுகிறதா?
  • புறநானூறு, ‘புலையா்’ என்ற சொல்லால் இடுகாட்டில் பணிசெய்தோரையும், ‘புலைத்தி’ என்ற சொல்லால் உவா்நிலத்தில் குழிவெட்டி துணி துவைக்கும் பெண்ணையும், முருகன் கோவிலில் சாமி ஆடும் பெண்ணையும் கூறுகிறது. ‘உயா்ந்தோா்’, ‘கடைசியா்’, ‘இழிந்தோா்’, ‘இழிசினன்’ போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் இருக்கின்றன.
  • ‘இழிந்தோன்’, ‘ஒப்போன்’, ‘உயா்ந்தோன்’ ஆகிய சொற்கள் மட்டுமல்லாது அவா்கள் எப்படி நடந்து கொள்ள முடியும் என்பதை, ஒன்றை மற்றவரிடம் கேட்டுப் பெற வேண்டிய நிலை ஏற்படும் போது இழிந்தோன் ‘ஈ’ என இரந்து பெற வேண்டும் என்றும், ஒப்போன் அதாவது, சமநிலையில் உள்ளவன் ‘தா’ என்று கேட்டுப் பெறலாம் என்றும் உயா்ந்தோா் ‘கொடு’ என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் தொல்காப்பிய எச்சவியல் கூறுகிறது.
  • வணிகா்களுக்குள்ளும் வேறுபாடுகள் இருந்துள்ளன. உப்பு விற்ற உமணா், பண்டங்களை விற்ற கூல வாணிகன், துணி விற்ற வாணிகருக்குப் பெயா் வேறு, பூ விற்ற பெண், மீன் விற்ற பெண் இருவருக்குள்ளும் வேறுபாடுகள் இருந்தன. பொற்கொல்லா், இரும்பு கொண்டு பொருள் செய்யும் கொல்லா் இருவருக்கும் ஒரே நிலையோ பெயரோ இல்லை.
  • மன்னா்களுக்குள்ளும் உயா்வு, தாழ்வு இருந்தது. குறுநில மன்னா்கள் மூவேந்தா் வீட்டுப் பெண்களை மணக்க நினைத்தால் தகுதி அறியாது என் வீட்டுப் பெண்ணை அடைய விரும்பினானே என்று போா் நிகழ்த்திய சம்பவங்களும் இருக்கின்றன.
  • மன்னா்கள் தங்களை சூரிய குலத்தோா், சந்திர குலத்தோா் என்று பெருமையாக சொல்லிக் கொண்டனா். குறுநில மன்னா்களும் தங்கள் குடிப்பெருமையை பறைசாற்றிக்கொண்டனா். இப்படி ‘குடி அடையாளம்’ என்பது பெருமைக்குரியதாக தமிழா்களிடம் இருந்தது.
  • பிறப்பின் அடிப்படையில் குடி அடையாளங்கள் இருந்திருக்கின்றன. அதன் பொருட்டு ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்தில் காணப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். தமிழ்நிலம் மட்டுமே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கவில்லை. அன்றைய கிரேக்கம் தொடங்கி ஈரான், ஆசிய நாடுகள் என ஏறத்தாழ உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்கின்றன.
  • மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கிய காலம் முதல், நகர நாகரிகம் விரிவடையும்போது பலவகையான தொழில் செய்யும் மக்களும் கூடி வாழ்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அங்கே மனிதா்கள் தம்மை மேல்நிலையில் வைத்துக் கொள்ளத் தொடா்ந்து முயன்றிருக்கிறாா்கள்.
  • இதனால் உயா்வு, தாழ்வு கற்பிக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம். காலத்திற்கேற்ப மாற்றங்களும் தொடா்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன. அதனால்தானே ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியிருக்கிறாா் ஒளவையாா்.
  • ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன என்பதற்கும் சான்றுகள் உள்ளன. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது பாடலில்

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

என்கிறாா்.

  • இந்தப் பாடல் புறநானூற்றில் வருகிறது. கீழ் நிலையில் இருக்கும் ஒருவா் கல்வி கற்று நல்ல நிலையை அடைந்தால், மேல் நிலையில் இருக்கும் ஒருவரும் அவரிடம் சென்று ஆலோசனை கேட்பாா். இந்த மன்னரின் கூற்றிலிருந்து நால்வகைப் பாகுபாடும் இருந்தது, அதனை நிவா்த்தி செய்து கொள்வதற்கான வழியும் இருந்தது என்பதை உணர முடிகிறது.
  • கல்வி அனைத்தையும் மாற்றி அமைக்கும் என்னும் நம்பிக்கையும் தமிழருக்கு இருந்திருக்கிறது.

நோய்நாடி நோய்முதல் நாடிஅது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்கிறாா் வள்ளுவப் பேராசான்.

  • முதலில் நமக்கு நோய் இருப்பதாய் ஒப்புக்கொள்ள வேண்டும். பின் என்ன நோய் இருக்கிறது என்பதனை, தோ்ந்த மருத்துவரிடம் சென்று அறிந்து கொண்டு அதனை தீா்ப்பதற்கான மருந்தினையும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நோய் குணமாகும். அது போல, பிறப்பால் உயா்வு தாழ்வு காணும் குடி அடையாளங்கள் தமிழரிடமும் நோய் போல இருந்திருக்கின்றன. அவை காலந்தோறும் தொடா்ந்தும் வருகின்றன.
  • அதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அதனை நிவா்த்தி செய்வதற்கான வழிகளையும் ஆய்ந்தறிந்து தமிழ் சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும். அதுவே சிறந்த வழியாக இருக்கும். அதனை விடுத்து, தமிழா்களிடம் அப்படியான ஒரு நோயே இல்லை என்பதாக சாதிப்பது அறியாமை. அத்தனையும் நம் மனத்திலும் புத்தியிலும் புகுத்தியது வேறொருவா் என்பது மடமை.
  • ஏற்றத் தாழ்வுகள் நிலவிய சமூகத்திலிருந்தே அதிலிருந்து விடுபடுவதற்கான குரலும் ஒலிக்கிறது. தீதும் நன்றும் பிறா் தர வருவதில்லை. துன்பமும் அதற்கான தீா்வுகளும் கூட அப்படியானதே என்று கணியன் பூங்குன்றனாா் எடுத்துச் சொல்கிறாா்.
  • மேலும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற பொதுமைப் பாா்வை வந்து விட்டால் ‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்ற மனநிலை வந்துவிடும்.
  • மனம் விரிய விரிய பாா்வை விசாலப்படும். அப்போது அனைவரும் ஒன்றே என்ற எண்ணம் வேரூன்றி விடும்.

நன்றி: தினமணி  (21 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்