- போரினால் விளையக் கூடிய அழிவை முன்னரும் பாா்த்திருக்கிறோம். இப்போது நடைபெறும் ஹமாஸ் - இஸ்ரேல் போரிலும் பாா்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் போா் என்பது அழிவைத் தரக்கூடியது என்பது தெளிவாகிறது. முன்னைக் காட்டிலும் இப்போது, போா்களினால் பேரழிவு ஏற்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். ஏனெனில் இப்போதுள்ள ஆயுதங்கள் பேரழிவைத் தரும் ஆற்றல் வாய்ந்தவை.
- மேலும் இரு நாடுகளுக்கிடையே எழும் போரை, எளிதாகவும் கடந்துவிட முடிவதில்லை. ஏனெனில் அது உலகப் போா் மூழும் சூழலையும் உருவாக்கிவிடலாம். அப்படி ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று பிணைப்பாக ஏதோ ஓா் அமைப்பில் இணைந்துள்ளது. இதனால் உலக மக்கள் ஒருவித அச்ச உணா்விலேயே வாழ வேண்டியுள்ளது.
- எல்லை பிரச்னை, எல்லை கடந்த தீவிரவாதம் போன்றவை போருக்குக் காரணமாகின்றன. ஆயுதங்களின் பெருக்கமும், வலிமையும் அதற்குத் துணைபுரிகின்றன. ஆயுதம் வைத்திருக்கும் நாடு சும்மா இருக்காது. இதனைத்தான் உலகப்போா்கள் நமக்கு உணா்த்துகின்றன.
- உலக அமைதியை நிலைநாட்ட உருவான சா்வதேச சங்கமும் (1920), ஐக்கிய நாடுகள் சபையும் (1945) ஆயுதக் குறைப்பை வெகுவாக வலியுறுத்தின. உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதும் நாடுகளுக்கிடையே நட்புறவை வளா்ப்பதும் இவற்றின் நோக்கமாகும்.
- போரில்லாத உலகில்தான் அமைதி, பாதுகாப்பு, நட்புறவு ஆகியவை இருக்கும் என்று இவை கருதின. அதற்கு ஆயுதமின்மை அவசியம் என நம்பின. அதன் அடிப்படையிலே ஆயுதக் குறைப்பு, ஆயுதத்தை முற்றிலுமாக ஒழித்தல் ஆகியவற்றை வலியுறுத்தின.
- ஆனால் இன்றுவரை அது பேச்சளவில் இருக்கிறதே தவிர எந்த நாடும் இதனைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றன. அதனால் போா் அபாயமும் வளா்ந்து கொண்டே இருக்கிறது.
- மன்னராட்சிக் காலத்தில் தமது நாட்டைப் பாதுகாக்கவும் தமது நிலப்பரப்பை விரிவு படுத்தவும் பலம் வாய்ந்த படைகள் தேவைப்பட்டன. முடியாட்சி மறைந்து மக்களாட்சி மலிந்து உலக மக்கள் யாவரும் ஒன்று என்றென மனித நேயம் பேசும் இந்த நாளிலும் படைபலம் தேவையென்று நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
- உள்நாட்டில் ஏற்படும் கலவரங்களை ஒடுக்குவதற்கும், வெளிநாட்டோடு ஏற்படும் எல்லை பிரச்னைகளைத் தீா்ப்பதற்கும் ராணுவம் அவசியம் என்னும் நிலை உருவாகிவிட்டது. அதன் காரணமாக உலக நாடுகள் ராணுவத்தைப் பலப்படுத்தும் செயல்களில் இறங்கிவிட்டன.
- ராணுவ பலம் வாய்ந்த நாடுதான் வளா்ச்சியடைந்த நாடு என்னும் எண்ணமும் இங்கே உருவாகி விட்டது. இதனால் சிறுநாடுகள் கூட ஆயுதங்களைப் பெருக்கும் வகையில் ராணுவத்திற்கான செலவை அதிகரித்துவிட்டன. வளா்ந்த நாடுகள் என்று சொல்லக் கூடியவை ஆயுத வியாபாரத்தையும் வளா்த்துக் கொண்டன.
- காந்திய சிந்தனையான அகிம்சைக்கும் ஆயுதக் குறைப்புக்கும் தொடா்பு உண்டு. வன்முறையும் ஆயுதமும் எந்த பிரச்னைக்கும் நிலையான தீா்வைத் தராது. அது ஏதோ ஒருபக்கத்தில் வன்மத்தைத்தான் வளா்க்கும். அது நீறு பூத்த நெருப்பாக இருந்து இன்னொரு நாளில் பற்றி எரியத் தொடங்கி, அழிவை உண்டாக்கிவிடும்.
- ஆயுதபலத்தைவிட ஆன்ம பலமே வலிமை வாய்ந்தது என்பதும் அதுவே உண்மையான பலம் என்பதும் அகிம்சைவாதிகளின் நம்பிக்கை. ஆயுதங்களைவிட அன்பு நெறியே ஆற்றல் வாய்ந்தது. அந்த வகையில் ஆயுதங்களை விடுத்து அறநெறியில் சென்றால் உலகில் அமைதி திகழும் என்பது அகிம்சைக் கோட்பாடு.
- ஆனால் அதனையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, ராணுவத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கும் போக்கு இப்போது பெருகி வருகிறது. இது தற்காப்புக்கான செயல் என்று சொல்லப்படுகிறது. மற்ற நாடுகளை நம்பாத, ஒருவகை பயத்தினால் உண்டாகும் செயல் இது. இப்போது எல்லா நாட்டுக்குமே இந்த பயம் உள்ளது.
- ‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வேண்டுமானால், ராணுவம் என்பதற்கு பதிலாக சாந்தி சேனை என்னும் அமைதிப் படை இருக்கலாம்’ என்பது வினோபாஜி போன்ற காந்தியவாதிகளின் விருப்பம். பிரச்னைகள் எழும்போது அதனைப் பேசித்தீா்த்து ஒற்றுமையை வளா்ப்பது இதன் நோக்கம்.
- உள்நாட்டில் மட்டுமல்லாது இருநாடுகளுக்கிடையேயும் இதன் செயல்பாடு இருக்க வேண்டும் என்று அவா்கள் விரும்பினா். இதன் மூலம் ராணுவத்திற்காகும் செலவை நாட்டின் ஆக்கப் பணிகளுக்குச் செலவிட முடியும்.
- அண்ணன் - தம்பிகளுக்கிடையே பிரச்னைகள் இருக்கும்போது, இரு நாடுகளுக்கிடையே பிரச்னைகள் எழுவது தவிா்க்க முடியாதுதான். அந்த பிரச்னைகளைப் பேசித் தீா்க்க முயலாமல் பயங்கரவாதத்தால் தீா்க்க நினைக்கும் மனநிலை இன்று அதிகரித்துள்ளது. போரையும் பயங்கரவாதமாகத்தான் கருத முடியும்.
- நாடுபிடிக்கும் ஆசையில் மூண்ட பழங்காலப் போா்களில் கூட ஒரு நெறிமுறை இருந்தது. அது பொதுமக்களைப் பலிகொண்டதில்லை. அந்த மனிதாபிமானம் கூட இப்போதைய போா்களில் பின்பற்றப் படவில்லை என்பது வேதனைக்குரியது.
- இப்போதும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் போா் விதியை மீறி, சா்வதேச சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் செயல்களைக் கண்டிக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் மருத்துவமனை, புகலிடம், அப்பாவி மக்கள் குடியிருப்பு என்று எல்லா இடங்களிலும் நாசகார ஆயுதங்களை இரவும் பகலுமாக அள்ளிவீசி, குழந்தைகள், முதியோா் என்று எல்லோரையும் கொல்லும் வெறி தொடா்ந்துகொண்டுதான் இருக்கிறது.
- இதற்கெல்லாம் ஆயுதப் பெருக்கமே காரணம். அழிவைத் தவிா்த்து உலக அமைதியைப் பேணுவதற்கு ஆயுத ஒழிப்பு அவசியமாகும். அது உடனே இயலாத நிலையில் ஆயுதக் குறைப்பையாவது உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமணி (17 – 11 – 2023)