TNPSC Thervupettagam

ஆயுளைக் குறைக்கும் காற்று மாசு!

August 5 , 2019 1985 days 946 0
  • காற்று மாசு காரணமாக 2017-ல் மட்டும் உலக அளவில்  சுமார் 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் மக்களின் இறப்புக்கு மூன்றாவது முக்கியக் காரணமாக காற்று மாசுதான் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
  • இந்த நிலைமையில் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் காற்று மாசு இந்தியரின் ஆயுட்காலத்தை சராசரியாக 2 ஆண்டு 6 மாதங்கள் வரை குறைத்துள்ளது என்று தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • கடந்த நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மகத்தான மருத்துவ முன்னேற்றங்களால் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்ற கருத்துக்கு முற்றிலும் மாறாக இந்த ஆய்வு பதிவுசெய்துள்ள புள்ளிவிவரம் இந்திய மக்களை மட்டுமல்ல, மருத்துவத் துறையையே அச்சப்படுத்தியுள்ளது.
  • உலக அளவில் வெளிப்புறக் காற்றில் அதிகரித்துவரும் நுண்துகள்கள் இந்தப் பிரச்சினைக்கு வித்திடுகின்றன என்றால், இந்தியாவில் வீட்டுக்குள் உருவாகும் காற்று மாசும் சேர்ந்துகொள்கிறது.
  • இந்தியாவில் இப்போதும் சமைக்கவும், குளிர்காலங்களில் தங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் சுமார் 85 கோடிப் பேர் எரிபொருட்களைப் பயன்படுத்துவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

என்னென்ன பாதிப்புகள்?

  • காற்று மாசால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ததில் இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், நாள்பட்ட சுவாசத்தடை நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, கல்லீரல் நோய்கள், குறைப்பிரசவம் எனப் பலதரப்பட்ட பாதிப்புகள் வரக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
  • காற்று மாசால் ஏற்படும் குறைப்பிரசவத்தால் மட்டும் உலகில் சுமார் மூன்றரைக் கோடி குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
  • இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
  • இனி மேல் இங்கு பிறக்கும் குழந்தைகள் வெளிப்புறக் காற்று மாசால் 18 மாதங்களும், உட்புறக் காற்று மாசால் 14 மாதங்களும், ஆக மொத்தம் 32 மாதங்களைத் தங்கள் வாழும் காலத்தில் இழக்க நேரிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் காற்று மாசைக் கட்டுப்படுத்தப் போதிய சுகாதார அமைப்புகளோ நவீன தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்பது இதற்கு அடிப்படைக் காரணம் என்கிறது அந்த ஆய்வு.
  • மாசுபட்ட காற்றால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள்தான் வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
  • ஆனால், காற்று மாசுபாட்டால், உடலில் எல்லா உறுப்புகளும் பாதிப்படைய சாத்தியக்கூறுகள் அதிகம். குறிப்பாக, மூளை தொடர்பான பிரச்சினைகளும், மனம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படலாம்.
  • அதிலும் குறிப்பாக, குழந்தைகளே இந்தப் பாதிப்புகளுக்கு அதிகம் உள்ளாவதாக மருத்துவப் புள்ளிவிவரம் சொல்கிறது.
  • உதாரணத்துக்கு, மூளையில் ‘மையோ ஐனோசிட்டால்’ எனும் புரதம் இருக்கிறது.
  • இந்தப் புரதம் அதிகம் சுரந்தால் மூளையில் அழற்சி ஏற்படும். ‘காற்று மாசிலுள்ள சில நச்சுப்பொருட்களால் மூளையின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, மையோ ஐனோசிட்டால் அதிகம் சுரக்கிறது.
  • இதனால், மூளையில் அழற்சி ஏற்படுகிறது. அதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன’ என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • எனவே, எதிர்கால இந்தியாவில் மனநலம் குறைந்தவர்களை அதிகம் காண முடியும் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

புதிய கண்டுபிடிப்பின் அவசியம்

  • பொதுமக்கள் எரிபொருட்கள், வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதும், சைக்கிள் மற்றும் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதும், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவதும் அவசியம்.
  • காற்று மாசைக் குறைப்பதற்குத் தற்போதுள்ள தொழில்நுட்ப உத்திகளால் பணமும் நேரமும் வீணாவதுதான் மிச்சம். அவற்றுக்குப் போதிய செயல்திறன் இல்லை என்பது உலக அளவில் விஞ்ஞானிகளை யோசிக்க வைத்திருக்கிறது.
  • மேலும், வெளிப்புறக் காற்று மாசின் அளவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரும்பாலும் வீட்டிலும் அலுவலகங்களிலும்தான் முடங்கிக்கிடக்கின்றனர்.
  • எனவே, முதலில் உட்புறக் காற்று மாசை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
  • இந்தச் சூழலில் காற்று மாசை 99% கட்டுப்படுத்தும் புதிய கருவி ஒன்றை இங்கிலாந்தில் உள்ள நோட்டிங்காம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
  • உட்புறக் காற்றில் கலந்துள்ள மாசுப் பொருட்களை உறைய வைப்பதன் மூலம் இது சாத்தியம் என்கின்றனர். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய கருவிக்கு ‘கிரையோஜெனிக் கன்டென்சர்’ (Cryogenic condenser) என்று பெயர்.
  • இந்தக் கருவி தனக்கு அருகில் வரும் மாசுப் பொருட்களை உறைய வைத்துக் காற்றில் பறப்பதைத் தடுத்துவிடும் என்பதால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காற்றில் கலந்திருக்கும் நுண்துகள்களைச் சிறைபிடித்துவிடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

காலத்தின் கட்டாயம்

  • ஒரு நீண்ட குழல் விளக்கு வடிவத்தில் இருக்கும் இந்தக் கருவி, தற்போது தனித்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் வடிவத்தில் சில மாற்றங்களைச் செய்து, குளிர்சாதன இயந்திரங்களில் பொருத்திவிட்டால், காற்று மாசுக்களை உறைய வைத்து, எளிதில் வடிகட்டி அகற்றிவிடலாம்; அதன் மூலம் உட்புறக் காற்றையும் சுத்தப்படுத்திவிடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தக் கருவிக்குப் பலத்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இதை இறக்குமதி செய்யும்போது விலை ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடும்.
  • ஏழை, எளியவர்களுக்கு இது எட்டாமல் போய்விடும். எனவே, நம் விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி – இந்து தமிழ்திசை (05-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்