ஆயுள்காலத்தைக் குறைக்கும் காற்று மாசு
- காற்று மாசு மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருகிறது. காற்று மாசுவால் மனிதரின் சராசரி ஆயுள்காலம் 2 ஆண்டுகள் குறையும் எனச் சமீபத்தியத் தரவுகள் தெரிவிக்கின்றன. ‘Air Quality Life Index ’ 2024 என்கிற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். அதில், ‘புகைபிடித்தல், மதுபானம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பைவிடக் காற்று மாசு மனித ஆரோக்கியத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
- காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், மாசில்லா வசிப்பிடத்தில் வசிக்கின்ற மக்களைவிட 6 மடங்கு மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கிறார்கள். இதனால் அவர்களின் ஆயுள்காலம் 2.7 ஆண்டுகள் குறைகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்த உலக நாடுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றைச் செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா முன்னுதாரணம்:
- அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. குறிப்பாக சீனாவில் காற்று மாசைக் குறைக்க கொள்கைகள் வகுக்கப்பட்டு அவை வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் காற்று மாசு 41% குறைந்துள்ளது. இதன் மூலம் காற்று மாசைக் குறைப்பதில் உலக நாடுகளுக்கு சீனா முன்னுதாரணமாக மாறியுள்ளது.
- தெற்காசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தில் 2022க்குப் பிறகு காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகின் மிகவும் மாசடைந்த பகுதிகளாகவே இவை நீடிக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 08 – 2024)