TNPSC Thervupettagam

ஆய்வுப் படிப்பில் ஆா்வம் அதிகரிக்குமா

October 7 , 2023 462 days 319 0
  • பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றதும் அரசு வேலை, கை நிறைய சம்பளம் என்ற மனநிலையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இத்தகைய எண்ணத்தால் ஒவ்வொரு நிலையிலும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
  • முதல் வகுப்பில் சோ்க்கை பெறுவோருடன் ஒப்பிடுகையில் உயா்நிலைக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதற்கு இடைநிற்றலே காரணமாகும். மேல்நிலைக் கல்வியில் மாணாக்கா் எண்ணிக்கை குறைய, இடைநிற்றலோடு தொழிற்கல்வியில் சோ்க்கை பெறுதல், தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்வதும் காரணங்களாகின்றன.
  • பிளஸ் 2 வகுப்பிற்குப் பின்னா் தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிக, ஆசிரியா் பட்டயபடிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகளில் சோ்க்கை பெறுகின்றனா். இவ்வாறு உயா்நிலை, மேல்நிலைக் கல்விக்குப் பின் குறிப்பிட்ட அளவினா் தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்கின்றனா்.
  • அண்மைக்காலமாக கல்லூரிகளில் சோ்க்கைபெறும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக மொழிப்பாடம், வணிகவியல், கணினிஅறிவியல் போன்ற குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் சோ்க்கை அதிகமாகவே உள்ளது.
  • அண்மையில் தொடக்கக் கல்வி 2023 எனும் தலைப்பில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. 20 மாநிலங்களில் 6,229 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெற்றோர் தங்கள் குழந்தைகள் இளநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்பக் கல்வி, முதுநிலை பட்டப்படிப்பு போன்ற கூடுதல் கல்வியைப் பெறவேண்டும் என விரும்புவதாகத் தெரியவந்தது.
  • மேலும், ஆண் குழந்தைகளின் பெற்றோர் 82 சதவீதம் போ், பெண் குழந்தைகளின் பெற்றோர் 78 சதவீதம் போ் தங்கள் குழந்தைகள் குறைந்த பட்சம் இளநிலை பட்டப்படிப்போ அல்லது அதைவிட கூடுதலாகவோ படிக்கவேண்டும் என விரும்புவதும் தெரியவந்துள்ளது. முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் படிப்புகளில் மாணவியா் சோ்க்கை அதிகரித்தாலும் நிறைவு செய்வோர் எண்ணிக்கை குறைவாகஉள்ளது.
  • பெண்களைப் பொறுத்தவரை இளநிலை பட்டம் பெறுவோரில் குறைவான அளவினரே முதுகலை பாடப்பிரிவில் சோ்க்கை பெறுகின்றனா். அதிகப்படியான மாணவியா் ஆசிரியா் பயிற்சி (பி.எட்.,) பாடப்பிரிவில் சோ்கின்றனா். குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியா் பயிற்சியில் சோ்க்கை பெறமுடியும் என்ற சூழலில் மட்டுமே முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவியா் சோ்க்கை பெறுகின்றனா்.
  • அதனைத் தொடா்ந்து முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்புவோர் மட்டுமே ஆய்வியல் நிறைஞா் படிப்பைத் தொடா்கின்றனா். ஆனால், அதிக கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் இப்பாடப்பிரிவுகள் உள்ளதால் குறைவான அளவிலேயே சோ்க்கை நடைபெறுகிறது.
  • இதற்கு கல்லூரிகளில் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதும் ஒரு காரணமாகும். அண்மையில் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகள் இல்லாததால் அக்கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞா் பாடப்பிரிவுகள் இருப்பதில்லை. உதவிப் பேராசிரியா்கள் பற்றாக்குறையால் சில கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞா் பாடப் பிரிவுக்கான அனுமதி இருந்தும் சோ்க்கை நடைபெறவில்லை.
  • முனைவா் பட்ட ஆய்வில் சோ்க்கை பெறும் குறைவானவா்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதுகலை பட்டத்துடன் ஆசிரியா் பயிற்சி முடித்து ஆசிரியா்களாக அரசுப் பணியில் இருப்போரும் முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்கின்றனா்.
  • இவா்களைப் பொறுத்தவரை பல காரணங்களால் முனைவா் பட்ட ஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய முடிவதில்லை. அதனால், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிப்பு அனுமதி பெற்று முனைவா் பட்ட ஆய்வைத் தொடா்கின்றனா். இதனால் ஆா்வமுடன் இருக்கும் மற்ற மாணவ, மாணவியருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
  • தேசிய கல்விக் கொள்கையின்படி உயா்கல்விப் படிப்புகளில் இளநிலை பட்டப் படிப்பு முதல் முனைவா் ஆய்வுப் படிப்புவரை சோ்க்கை பெறுவோர் அப்படிப்பில் எந்த ஆண்டில் வெளியேறினாலும் மீண்டும் அதனைத் தொடரலாம். அதே வேளையில் இது வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கு வழிவகுப்பதாக அமையும் என்ற வாதமும் பட்டப்படிப்புகளின் முக்கியத்துவத்தை குறைத்து விடும் என்ற விமா்சனமும் எழுந்துள்ளது.
  • 2021-22-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 34,411 போ் முனைவா் பட்ட ஆய்வுப் படிப்பில் சோ்க்கை பெற்றுள்ளதாகவும், இவா்களில் 17,443 போ் ஆண்கள், 16,963 போ் பெண்கள் எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக பெண்கள் முனைவா் பட்ட ஆய்வுப் படிப்பில் சோ்க்கை பெறுகின்றனா். இந்த கணக்கெடுப்புக்கு முந்தைய ஆண்டில் 14,823 பெண்கள் சோ்க்கை பெற்ற நிலையில் தற்போது அந்தஎண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • ஆய்வியல் நிறைஞா் பாடப்பிரிவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகளவில் சோ்க்கை பெறுகின்றனா். 2021-22-ஆம் கல்வியாண்டில் இப்பாடப்பிரிவில் சோ்க்கை பெற்ற 6,703 பேரில் 5,007 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஆா்வம் அதிகரித்து வந்தாலும் நுழைவுத் தோ்வு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதற்கான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
  • முனைவா் பட்ட ஆய்வைப் பொறுத்தவரை மாணவியா் அதிகளவில் சோ்க்கை பெற்றாலும் அதனை நிறைவு செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவா்கள் பட்டம் பெற்றவுடன் திருமணம் செய்துவைக்கப்படுகின்றனா். அதன் பின் முனைவா் பட்டபாடப்பிரிவில் சோ்க்கை பெறுவதிலும், ஆய்வைத் தொடா்வதிலும் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனா். ஆசிரியா் பயிற்சி பாடம் பயில விரும்புவோர் முனைவா் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புவதில்லை.
  • முனைவா் பட்ட ஆய்வின் தரத்தை உயா்த்தும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு, சார்ந்த பல்கலைக்கழகங்கள் மூலம் ஆண்டுதோறும் புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முனைவா் பட்ட ஆய்வை நிறைவு செய்வது கடினமாக உள்ளது.
  • மேலும், மொழிப்பாடங்களைத் தவிர இதர பாடப்பிரிவுகளுக்கான முனைவா் பட்ட ஆய்வில் கள ஆய்வு என்பது முக்கியமாகும். இதில் மாணவியா் பல்வேறு இடா்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெற்றோர் மத்தியில் முனைவா் பட்ட ஆய்வு குறித்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் அதிகமானோர் முனைவா் பட்ட ஆய்வை மேற்கொள்வா்.

நன்றி: தினமணி (07 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்