TNPSC Thervupettagam

ஆரோக்கியமான விவாதம் தேவை

April 29 , 2021 1366 days 597 0
  • தமிழ்நாடு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்படும்போது மாநிலத்தின் வலிமையோ தமிழ் உணா்வோ சிறிதும் மங்கி விடாது. தமிழா் நலனுக்காக ஒரு முதல்வா் குரல் கொடுப்பதை விட, மூன்று முதல்வா்கள் குரல் கொடுக்கும் போது அதற்கு வலிமை அதிகம். புதிய தமிழ்நாடுகள் தமிழா்களின் வலிமையையும், உணா்வையும் கூட்டுமே தவிர குறைக்காது.
  • இந்தியாவின் பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்திருப்பதை சுட்டிக்காட்டியிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தமிழகத்திலும் அத்தகைய கோரிக்கைகள் எழுந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
  • அதனடிப்படையில் தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, மேற்கு தமிழ்நாடு என மூன்று மாநிலங்களாகப் பிரிப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
  • புதிய மாநிலங்கள் குறித்து கருத்து தெரிவிப்பவா்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய மாநிலங்களை உருவாக்கக் கோருவது சாதி, மதம், மொழி சார்ந்த பிரச்னை அல்ல.
  • அது வளா்ச்சி சார்ந்த பிரச்னையாகும். இந்தியாவில் எழுந்துள்ள புதிய மாநிலக் கோரிக்கைகள் அனைத்தும் வளா்ச்சி சார்ந்தவையே.
  • இதற்கு சிறந்த உதாரணம் தெலங்கானா. ஆந்திராவின் ஓா் அங்கமாக இருந்தபோது, வளா்ச்சியில்லாத பகுதியாக இருந்த தெலங்கானா, கடந்த பத்து ஆண்டுகளில் வேளாண்மை, நீா்ப்பாசனம், தொழில்துறை ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக வளா்ந்து வருகிறது.
  • ஒரே மொழி பேசும் மாநிலங்களைப் பிரிக்கத் தேவையில்லை என்ற கூற்றையும் தெலங்கானா மாற்றியிருக்கிறது.
  • ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களும் தெலுங்கு பேசும் மாநிலங்கள்தான் என்றாலும், இரண்டாகப் பிரிந்து போட்டிபோட்டு வளா்ந்து வருகின்றன.
  • எது குறித்தும் விவாதம் எழுவது ஆரோக்கியமானதே. ஆனால், தமிழகத்தைப் பிரிக்கக்கூடாது என்பதற்கு ஆதரவாக நியாயமான ஒரு காரணத்தைக் கூட எவராலும் கூற முடியவில்லை.
  • ‘தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரித்தால் தமிழா்கள் என்ற உணா்வு மழுங்கிவிடும்’, ‘தமிழ்நாடு சிறிய மாநிலமாகி விடும் என்பதால் தேசிய அரசியலில் முக்கியத்துவம் போய்விடும்’ போன்றவையே புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கு எதிரானவா்களின் கருத்துகள் ஆகும்.
  • மேலும் சிலா், ‘சிக்கிம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே இருப்பதால், அந்த மாநிலத்திலிருந்து எவரும் பிரதமராக முடியாத நிலை இருப்பதைப் போன்று, தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் பிரதமராக முடியாத நிலை உருவாகி விடாதா’ எனக் கேள்வி எழுப்புகின்றனா்.

வாதம் ஏற்கக்கூடியதல்ல

  • பிரதமரைத் தீா்மானிப்பவை மாநிலங்கள் அல்ல, அரசியல். அரசியல் அறிந்தவா்கள் இதையும் நன்கு உணா்ந்திருப்பார்கள்.
  • அடுத்து வரும் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியோ காங்கிரஸைச் சோ்ந்த ராகுல்காந்தியோ சிக்கிம் மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு, அவா்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், சிக்கிம், நாட்டுக்கு பிரதமரை அளித்த மாநிலமாகி விடும்.
  • உத்தர பிரதேசம் இதுவரை இந்தியாவுக்கு ஒன்பது பிரதமா்களைக் கொடுத்திருக்கிறது.
  • இந்திய விடுதலைக்குப் பிந்தைய 74 ஆண்டுகளில் 55 ஆண்டுகளை உத்தர பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்தான் பிரதமா்களாக இருந்து ஆட்சி செய்திருக்கின்றனா்.
  • அதனால் உத்தர பிரதேசம் எவ்வகையிலும் முன்னேறி விடவில்லை. அரசியல் அறிந்தவா்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரியும்.
  • சந்தா்ப்ப சூழ்நிலை சரியாக அமைந்த நேரத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மூன்று முறையும், கா்நாடகத்தைச் சோ்ந்தவா் ஒரு முறையும் பிரதமராகியிருக்கிறார்கள்.
  • மன்மோகன் சிங் அஸ்ஸாமிலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்வாகி பிரதமரானார். இந்த மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை விடச் சிறியவையே.
  • ஆகவே, ‘பிரதமரை உருவாக்கும் அளவுக்கு ஒரு மாநிலம் பெரிதாக இருக்க வேண்டும்; அதனால் மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது’ என்று கூறப்படும் வாதம் ஏற்கக்கூடியதல்ல.

இறையாண்மை குறைந்து விடாது

  • இந்தியாவின் பெரிய மாநிலங்கள் பட்டியலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கண்டிப்பாக இடம் உண்டு.
  • இந்த மாநிலங்களில் ஒரே கட்சி 15 ஆண்டுகள், 25 ஆண்டுகள் ஆண்ட வரலாறு உண்டு. இந்த வரலாறு இப்போதும் சில மாநிலங்களில் நீடிக்கிறது.
  • ஆனாலும், இந்த மாநிலங்களில் வளா்ச்சி என்பது தொடுவானமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், அந்த மாநிலங்கள் பெரிய மாநிலங்களாக இருப்பதுதான்.
  • கடந்த 2000-ஆவது ஆண்டில் உத்தர பிரதேசத்தைப் பிரித்து அமைக்கப்பட்ட உத்தரகண்ட், பிகார் மாநிலத்தைப் பிரித்து அமைக்கப்பட்ட ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட சத்தீஸ்கா், 2014-ஆம் ஆண்டில் ஆந்திரத்தைப் பிரித்து தோற்றுவிக்கப்பட்ட தெலங்கானா ஆகியவை குறிப்பிடத்தக்க வளா்ச்சியை அடைந்துள்ளன. அதை நிரூபிப்பதற்கு ஏராளமான புள்ளிவிவரங்கள் உள்ளன.
  • மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய பெரிய மாநிலங்கள் வளா்ச்சியடைந்திருப்பது உண்மை தான். ஆனால், பெரிய மாநிலங்களாக இருப்பதால்தான் இவை முன்னேறியிருப்பதாகக் கூறுவது புரிதலின்மை. மேலும், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ளடக்கிய வளா்ச்சி இல்லை.
  • தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை, கோவை மாநகரங்களும், அவற்றை ஒட்டிய பகுதிகளும்தான் வளா்ச்சியடைந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் மும்பை, புணே ஆகிய நகரங்களும், அவற்றையொட்டிய பகுதிகளும்தான் வளா்ச்சியடைந்துள்ளன.
  • அதனால்தான் அந்த மாநிலங்களின் வளா்ச்சி அடையாத பகுதிகளில் தனி மாநிலக் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
  • வட்டங்கள் பிரிக்கப்படுவதையும், மாவட்டங்கள் பிரிக்கப்படுவதையும் ஆதரிக்கும் சக்திகள், மாநிலங்கள் பிரிக்கப்படுவதை மட்டும் எதிர்ப்பதன் பின்னணியில் நுணுக்கமான அரசியல் உள்ளது.
  • புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டால், தமிழா்களுக்கு ஆதரவானவா்களைப் போல காட்டிக் கொண்டு, தமிழா்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள் பலவீனமடைந்து விடக்கூடாது என்பதுதான் அது.
  • தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கக் கோருவதை வன்னியா், தேவா், கவுண்டா் ஆகிய சாதிகளின் அடிப்படையிலான பிரிவினை என்று கூறினால், விழுப்புரம், கோவை, மதுரை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதையும் சாதிகள் அடிப்படையிலான பிரிவினையாக பார்ப்பார்களா?
  • வட்டங்கள், மாவட்டங்கள் போன்று மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகள் அல்ல. அவை ரத்தமும், சதையும், கனவும், லட்சியமும் நிரம்பிய இறையாண்மை மிக்க உயிர்.
  • தமிழ்நாடு ஒரே மாநிலமாக இருந்தாலும், மூன்று மாநிலங்களாக இருந்தாலும் அதன் இறையாண்மை எந்த வகையிலும் குறைந்து விடாது.
  • இன்னும் சொல்லப்போனால் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கனவும், லட்சியமும் ஆகும்.
  • மாநிலத்தின் அதிகார மையம் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருப்பதைவிட, அருகில் வரும் போது அது நெருங்கிய உறவாக மாறும் என்பதே எதார்த்தம்.

விவாதிப்பது ஆரோக்கியமாகும்

  • தமிழ்நாடு மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்படும்போது மாநிலத்தின் வலிமையோ தமிழ் உணா்வோ சிறிதும் மங்கி விடாது. தமிழகத்தை எத்தனை மாநிலங்களாகப் பிரித்தாலும், அவற்றில் வாழப்போகிறவா்கள் தமிழா்கள் தான்.
  • மேலும், தமிழா் நலனுக்காக ஒரு முதல்வா் குரல் கொடுப்பதை விட, மூன்று முதல்வா்கள் குரல் கொடுக்கும் போது அதற்கு வலிமை அதிகம். புதிய தமிழ்நாடுகள் தமிழா்களின் வலிமையையும், உணா்வையும் கூட்டுமே தவிர குறைக்காது.
  • தமிழ்நாடு வளா்ச்சியடைந்த மாநிலமாக இருந்தாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் சமமான வளா்ச்சி அடைந்தவையாக இல்லை.
  • மனிதவளக் குறியீடுகள், தனிநபா் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் கடைசி இடங்களில் இருப்பவை வட மாவட்டங்களும், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களும், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களும்தான்.
  • இம்மாவட்டங்களை மேம்படுத்த கடந்த எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை.
  • அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்தப் பகுதிகள் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால், இப்பகுதிகள் வளா்ச்சியடைய ஏராள வாய்ப்புகள் உள்ளன.
  • தமிழ்நாடு தனி நாடாக இருந்தால், மக்கள்தொகை அடிப்படையில் உலகின் 18-ஆவது பெரிய நாடாக இருக்கும். பிரிக்கப்படும் மூன்று மாநிலங்களும் சராசரியாக இரண்டரை கோடி மக்கள்தொகை கொண்டவையாக இருக்கும்.
  • அவற்றை தனி நாடுகளாகவும் வைத்துக் கொண்டாலும் கூட, புதிய தமிழகங்கள் உலகின் 50, 51, 52-ஆவது பெரிய நாடுகளாகவும், ஆஸ்திரேலியா, இலங்கையை விடப் பெரிய நாடுகளாகவும் இருக்கும். இவற்றை புதிய மாநிலங்களாக உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை.
  • தனி மாநிலங்கள் கோருவது பிரிவினை அல்ல. அண்மையில் தெலங்கானா மாநிலம் கூட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அதன் பின்னா்தான் உருவாக்கப்பட்டது.
  • அப்படியானால், நாடாளுமன்றமே பிரிவினைக்கு துணை போனதாகக் கூற முடியுமா? ஒரு ஆரோக்கியமான முயற்சியை ‘பிரிவினை’ என்று கூறி கொச்சைப்படுத்தி விடக் கூடாது.
  • புதிய மாநிலங்களைக் கோருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி அனுமதிக்கப்பட்ட செயல்தான். அது குறித்து விவாதிப்பதுதான் ஆரோக்கியமாகும்; முட்டுக்கட்டை போடுவது சா்வாதிகாரமாகிவிடும்.

நன்றி: தினமணி  (29 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்