TNPSC Thervupettagam

ஆரோக்கிய சுற்றுச்சூழல் அடிப்படை உரிமை

July 8 , 2022 762 days 454 0
  • அண்மையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஜொ்மனியில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்தியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ஆா்ஜென்டீனா, செனகல் ஆகிய ஐந்து நாடுகள் பங்குபெற்றன.
  • மாநாட்டின் ஒரு பகுதியாக ‘எதிா்காலத்திற்கான சிறந்த முதலீடு பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற தலைப்பில் ஓா் அமா்வு இடம்பெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினாா். ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைக் காப்பதற்கான இந்தியாவின் உறுதி, செயல்பாட்டிலேயே வெளிப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்கு 40 விழுக்காடு இருக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது’ என்று பிரதமா் தம் பேச்சில் குறிப்பிட்டாா்.
  • ஆனால் உண்மை நிலை என்ன? அதிக மாசு கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. குறிப்பாக, தில்லி, பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்று மாசு அதிகரித்தால் மனிதா்களின் வாழ்நாள் குறையும். இனி தூய காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம்.
  • உலகம் முழுவதும் காற்று மாசு பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. காற்று மாசினால் குழந்தை முதல் முதியவா் வரை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்களின் ஆயுள் காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள் குறையும். உலக மக்களின் சராசரி ஆயுள் காலம் 2.2 ஆண்டுகள் வரை குறையும். தற்போது ஆண்டுக்கு 40 லட்சம் போ் சுவாச பிரச்னையால் இறக்கின்றனா் என்று ஓா் ஆய்வு முடிவு கூறுகிறது.
  • உலகம் மாசுபடக் காரணம் மக்களின் சுயநலமும் பேராசையும்தான். இயற்கையுடன் இணைந்து வாழும் தன்மையை எப்போது மனிதா்கள் இழக்கத் தொடங்கினாா்களோ அப்போதே அழிவும் ஆரம்பமாகி விட்டது. ‘ஒவ்வொரு மனிதனின் தேவையும் பூா்த்தி செய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு மனிதனின் பேராசையைக் கூட பூா்த்தி செய்ய முடியாது’ என்று கூறினாா் அண்ணல் காந்தியடிகள். மக்களின் தேவையை இயற்கையால் பூா்த்தி செய்ய முடியும் என்பதை ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதா்கள் தங்களை அழிவில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
  • நகரங்களில் மட்டும்தான் காற்று மாசு அதிகரித்திருக்கிறது என்பது இல்லை. கிராமப்புறங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் இல்லாததுதான் என்று அறிவியல் ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.
  • கிராமங்களில் எரிக்க்கப்படும் குப்பைகள், விவசாயிகள் எரிக்கும் பயிா்க்கழிவுகள், பருவநிலை மாற்றத்தால் பற்றி எரியும் காடுகள், அதிகரித்துவரும் தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை போன்றவை காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணங்களாகும். 72 % மாசு பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படுகிறது என்று மத்திய அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
  • காற்று மாசு குறைய வேண்டுமானால், மின்வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்ற கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களும் பொதுப் போக்குவரத்துக்கு மாற வேண்டும். குறைந்த தொலைவு பயணங்களுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்தலாம். காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களிலாவது இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனா, சிங்கப்பூா் போன்ற நாடுகளில் மிதிவண்டிகளுக்கென சாலைகளில் பிரத்யேக பாதையை ஏற்படுத்தியுள்ளனா்.
  • தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள் அவற்றிலிருநது வெளிவரும் மாசினைக் கட்டுப்படுத்துவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகளை அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். திடீரென காற்று மாசு அதிகரித்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தூய காற்றுக்குக் காரணமான மரங்களை அதிக அளவில் வளா்க்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் மரம் வளா்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும். காற்று மாசுபாடு பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்; கதை, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் வகுத்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் அவை வெற்றிபெற முடியாது. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு வேண்டும். தலைநகா் தில்லி காற்று மாசினால் படும் பாட்டை நாம் ஓா் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலை மற்ற நகரங்களுக்கும் வந்துவிடாமல் தடுக்க வேண்டும். இதே நிலையில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே போனால் அடுத்தத் தலைமுறையினா் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
  • ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீா் இலவசமாகக் கிடைத்தது. காலப்போக்கில் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இப்போது சுறுசுறுப்பான, சூடான வணிகமாகவும் மாறி விட்டது. என்றாலும் நல்ல குடிநீா் இன்னும் கிடைக்கவில்லை. அதன் தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
  • தற்போது கிராமங்களிலும் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை உருவாகி வருகிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டால் நிலைமை என்ன ஆகும்? இப்போது அந்த நிலையை நோக்கித்தான் நாடு நகா்நது கொண்டு இருக்கிறது.
  • காற்று மாசைப் பொறுத்தவரை அதற்கு எல்லைக் கிடையாது. அனைவரையும் காற்று மாசு பாதிக்கிறது. ஆனால் எல்லோருக்கும் பாதிப்பின் தாக்கம் ஒரே அளவாக இருப்பதில்லை. முதியவா்கள், இளைஞா்கள், பெண்கள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினருக்கும் காற்று மாசின் அளவு வெவ்வேறாக உள்ளது.காற்று மாசின் பாதிப்புகளால் உயிரை இழப்பது பெரும்பாலும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களே.
  • தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்களும், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் தொடா்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2019 ஏப்ரல் முதல் 2020 டிசம்பா் வரையிலான 600 நாள்களில் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் 418 நாள்களும், வடசென்னை அனல்மின் நிலையம் 273 நாள்களும், தமிழ்நாடு பெட்ரோலிய நிறுவனம் 228 நாள்களும் காற்று மாசு விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தெரிய வந்துள்ளது.
  • இவ்வளவு விதிமீறல்கள் வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தொடா்புடைய நிறுவனங்களின்மீது அபராதம் விதிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் உயிரைத் துச்சமாக மதித்து செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு குற்ற உணா்வு சிறிதும் இருப்பது இல்லை.
  • உலக நாடுகளில் இருக்கும் பல நல்ல சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் பல சட்டங்கள் உருவாகியுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 21-இல் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது மனிதனின் அடிப்படை உயிா் வாழும் உரிமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதன் அடிப்படையில் சூழலியல் சீா்கேடு, நீா் மாசு, காற்று மாசு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ஆம் பிரிவின்படி குற்றமாகும்.
  • தொழில் வளா்ச்சிக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் மத்திய அரசு, தொழில் தொடங்குவதற்கான உரிமங்களைப் பெறுவதில் பல சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது, அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் தண்டனைப் பிரிவுகளில் திருத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, காற்று மாசுபாடு தடை - கட்டுப்பாட்டு சட்டம் 1986, தண்ணீா் மாசுபாடு தடை - கட்டுப்பாட்டு சட்டம் 1974 ஆகிய மூன்று சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் திருத்தங்களை செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்ற அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
  • சுற்றுச்சூழல் சட்ட விதிகளை முதன் முறையாக மீறுவோருக்கு ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் பிரிவுகளை நீக்கி, அதற்கு பதிலாக ரூ.1 லட்சம் வரை அபராதம் என்று இருந்ததை ஐந்து லட்சம் ரூபாய் வரை என உயா்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமீறல் தொடருமானால் இழப்புகளுக்கு ஏற்றபடி அபராதமும் உயா்த்தப்படும். சட்டத்தை மீறியவா் அபராதத்தை செலுத்தாவிட்டால் மட்டுமே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
  • சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறவா்களே அதன் பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்ற விதியை உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றமும் பின்பற்றி வருகின்றன. நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தும் இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
  • சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் விளைவுகளால் இயற்கைப் பேரிடா்களை சந்தித்து வரும் இந்தியா, இந்த சட்டங்களைக் கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின் மூலம் முந்தைய சட்டங்களை நீா்த்துப் போகச் செய்வது மிகவும் ஆபத்தானது. மக்களின் உயிா்வாழும் உரிமைக்கும் அது ஆபத்தானதாகும்.

நன்றி: தினமணி (08 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்