TNPSC Thervupettagam

"ஆர்சிஇபி' - சீனாதான் தடை!

November 18 , 2020 1348 days 489 0
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிடப்பட்ட, சர்வதேச அளவில் சீனா உள்ளிட்ட 15 ஆசிய - பசிபிக் நாடுகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் "ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்', ஒரு மிகப் பெரிய திருப்பம். அந்த 15 நாடுகளும் வற்புறுத்தியும் கூட, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 16-ஆவது நாடாக இணைய வில்லை.
  • இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைவதற்கான வழியை அந்த நாடுகள் அடைத்து விடவில்லை என்பதிலிருந்து இந்தியாவின் இன்றியமையாமையை உணரலாம்.
  • "ஆர்சிஇபி ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் "ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்' 2012 முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.
  • "ஆசியான்' என்கிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளும் சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
  • கடந்த ஆண்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டபோதே  பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். 
  • ஆசிய - பசிபிக் நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்பதில் சந்தேகம் இல்லை.
  • இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் நாடுகளின் பங்களிப்பு உலகப் பொருளாதாரத்தில் 30%. ஏறத்தாழ உலகின் 220 கோடி மக்கள்தொகை கொண்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைகின்றன.
  • "ஆர்சிஇபி' ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், தளர்ந்து போயிருக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறும் என்று இந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. 
  • "ஆர்சிஇபி' நாடுகளுக்கு இடையே உதிரி பாகங்கள், மூலப் பொருள்களை இறக்குமதி செய்வதும், உற்பத்திப் பொருள்களைத் தங்குதடையின்றி சந்தைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமாவதால், பொருளாதார ரீதியாக பயனளிக்கும்.
  • அதனால்தான் சீனாவுடன் கடுமையான கருத்துவேறுபாடுகள் இருந்தும்கூட, ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் "ஆர்சிஇபி'யில் இணைந்திருக்கின்றன. வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் "ஆர்சிஇபி'யில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.
  • எட்டு ஆண்டுகளாக "ஆர்சிஇபி' பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இந்தியா, இந்த ஒப்பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதது சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • இந்திய உற்பத்தியாளர்களையும் பொருளாதாரத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இப்படியொரு கடுமையான முடிவை எடுக்க அரசுக்குப் பல காரணங்களும், சில நிர்பந்தங்களும் இருக்கின்றன. 
  • மருந்து உற்பத்திக்கு அடிப்படையான ஜெனரிக் (அடிப்படை மூலக்கூறு) மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைய வேண்டும் என்று விரும்பின.
  • ஆனால், ஜவுளி, வேளாண் பொருள்கள், தோட்டப் பொருள்கள், பால் வளப் பொருள்கள் உற்பத்தித் துறையினரின் கடுமையான எதிர்ப்பு அரசை ஒப்பந்தத்தில் இணையாமல் தடுத்திருக்கிறது. 
  • வர்த்தகப் பற்றாக்குறை என்பது நமது ஏற்றுமதிக்கும், பிற நாடுகளிலிருந்தான இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி. அரசு எடுத்த முடிவுக்கு சீனா உள்ளிட்ட சில நாடுகளுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணம்.
  • "ஆர்சிஇபி'யில் இணைந்திருக்கும் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ஏற்கெனவே 105 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7.81 லட்சம் கோடி). அதில் 2019-20-இல் சீனாவுடனான பற்றாக்குறை மட்டுமே ஏறத்தாழ சரிபாதி (49 பில்லியன்  டாலர்). 
  • இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களால் பெரிய அளவில் பயனிருப்பதாகத் தெரியவில்லை. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், பெரிய அளவிலான ஏற்றுமதி அதிகரிப்பு காணப்படவில்லை என்பதுதான் முன் அனுபவம்.
  • தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பிறகு ஆசியான், கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான உறவால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததுதான் மிச்சம்.
  • அதனால்தான் இந்தியா கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் புதிய வர்த்தக ஒப்பந்தத்திலும் கையொப்பமிடவில்லை. 
  • சீனாவிலிருந்து இறக்குமதியை மேலும் அதிகரிக்கும் எந்தவித ஒப்பந்தத்திலும் கையொப்பமிடுவதில்லை என்பது இந்தியாவின் எழுதப்படாத வர்த்தகக் கொள்கையாக இருப்பதில் தவறென்ன இருக்க முடியும்?
  • இந்தியாவுக்கு ஏற்கெனவே மூன்று நாடுகள் தவிர, ஏனைய "ஆர்சிஇபி'யின் உறுப்பு நாடுகளுடன்  தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கான அவசியம் இல்லை என்று முடிவெடுத்ததில் தவறில்லை. 
  • இந்த நாடுகளுடன் நமக்கு ஏற்றுமதி வாய்ப்பு குறைவு. நமது பெரும்பாலான ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கும், ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கும்தான் என்கிற நிலையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை நாம் செய்துகொண்டால், அதனால் பயனிருக்கும். ரஷியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவதும் லாபகரமாக இருக்கும். 
  • ஒரேயடியாக எல்லைகளை மூடிவிட முடியாதுதான். "ஆர்சிஇபி'யில் இணைவதால் இந்தியா அடையும் லாபத்தைவிட, இந்தியாவில் தனது பொருள்களைத் தங்குதடையின்றிக் குவிப்பதற்கு, அது சீனாவுக்கு வாய்ப்பாக அமையும்.
  • கண்ணை விற்று சித்திரம் வாங்கக் கூடாது என்பதுபோல, உள்நாட்டு உற்பத்தியை அழித்துக் குறைந்த விலை இறக்குமதிகளை அனுமதிக்கக் கூடாது.

நன்றி: தினமணி (18-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்