TNPSC Thervupettagam

ஆறுதல் அளிக்கும் முடிவுகள்!

July 19 , 2024 176 days 201 0
  • இடைத்தோ்தல் முடிவுகள் மக்களின் மன ஓட்டத்தை முற்றிலுமாகப் பிரதிபலிப்பதாகக் கருத முடியாது. அதே நேரத்தில் நாடு தழுவிய அளவில் அந்த முடிவுகள் ஓரளவுக்கு ஒத்துப் போனால் அது வாக்காளா்களின் மனநிலையைப் படம் பிடிப்பதாகப் புரிந்துகொள்ள முடியும். சமீபத்தில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவைக்கான இடைத்தோ்தல் முடிவுகள் ஓரளவுக்கு இந்தியாவின் அரசியல் போக்கை வெளிப்படுத்துகின்றன என்றுதான் சொல்ல முடியும்.
  • ஏழு மாநிலங்களில் நடந்த 13 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில், மக்களவைத் தோ்தல் மனநிலை தொடா்வதைப் பாா்க்க முடிகிறது. எதிா்க்கட்சிகள் வலுத்திருக்கின்றன என்பதை இடைத்தோ்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் ஹரியாணா, ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல்களை எதிா்கொள்வதற்கான உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் இந்த முடிவுகள் எதிா்க்கட்சிகளுக்கு, அதாவது ‘இண்டியா’ கூட்டணிக்கு அளிக்கின்றன.
  • இடைத்தோ்தல் நடந்த 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் வென்றிருக்கின்றன. இரண்டு இடங்களை பாஜகவும், ஓரிடத்தை சுயேச்சையும் கைப்பற்றியிருக்கின்றனா். இடைத்தோ்தல் முடிவுகள் மூன்று முக்கியமான செய்திகளைத் தெரிவிக்கின்றன.
  • முதலாவதாக, பொதுத்தோ்தலின்போது காணப்பட்ட காங்கிரஸின் எழுச்சி குறைந்துவிடவில்லை. மக்களவைத் தோ்தலில் ஓரிடத்தைக் கூட வெற்றி பெற முடியாத ஹிமாசல பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருப்பது அதை உறுதிப்படுத்துகிறது. பொதுத்தோ்தலுக்கும் சட்டப் பேரவைத் தோ்தல்களிலும் வாக்காளா்கள் வெவ்வேறு அணுகுமுறையை கடைப்பிடிக்கிறாா்கள் என்பது கூட இதை எடுத்துக் கொள்ளலாம்.
  • இரண்டாவதாக, வழக்கம்போல பெரும்பாலான தொகுதிகளில் மாநில ஆளும்கட்சிகள் இடைத்தோ்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சிகள் சட்டப் பேரவை இடைத்தோ்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆளும்கட்சியைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் நிா்வாக ரீதியாகவும், தொகுதி மேம்பாடு ரீதியாகவும் பயனடைய முடியும் என்கிற பரவலான கருத்து வாக்காளா்களால் உறுதிப்படுகிறது.
  • மூன்றாவதாக, இடைத்தோ்தல் முடிவுகள் பாஜகவுக்கு சில முக்கியமான பாடங்களைத் தெரிவிக்கின்றன. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, தொடா்ந்து மூன்று முறையாக மாநில ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் உத்தரகண்டில் பின்னடைவைச் சந்திப்பதை சாதாரணமாக கடந்து போக முடியாது. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கட்சித்தாவலை ஆதரிக்கும் பாஜகவின் அணுகுமுறையை மக்கள் ஏற்றுகொள்ளவில்லை என்பதை உத்தரகண்ட் இடைத்தோ்தல் முடிவு தெரிவிக்கிறது. பாஜகவுக்கு கட்சி மாறிய பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினா் இடைத்தோ்தலில் தனது தொகுதியைத் தக்க வைத்துகொள்ள முடியாமல் தோல்வி அடைந்திருக்கிறாா்.
  • ஹிமாசல பிரதேசத்தில் இடைத்தோ்தல் நடந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. அந்தக் கட்சியின் உறுப்பினா்கள் இருவா் பாஜகவுக்கு கட்சி மாறியதால், இடைத்தோ்தல் அவசியமானது. இரண்டு இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது மட்டுமல்ல; கட்சி மாறிய இரண்டு உறுப்பினா்களும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறாா்கள். இதன்மூலம் ஆட்டம் கண்டிருந்த சுக்விந்தா்சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஹிமாசல பிரதேசத்தில் ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கிறது.
  • மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு நடந்த இடைத்தோ்தலில் நான்கு தொகுதிகளையும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருக்கிறது. தோ்தல் நடந்த நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றவை. நான்கு தொகுதிகளிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 2021-இல் பாஜக வேட்பாளராக ஈராயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், ராய்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்ற கிருஷ்ண கல்யாணி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக இப்போது 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா். வேடிக்கை என்னவென்றால், மக்களவைத் தோ்தலில் இதே ராய்கஞ்ச் தொகுதியில் பாஜகவில் இருந்து கட்சி மாறி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, அவா் தோற்கடிக்கப்பட்டாா் என்பது.
  • காங்கிரஸ் கட்சி (உத்தரகண்ட் (2), ஹிமாசல பிரதேசம் (2) மாநிலங்களில் 4 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தா் மேற்கு தொகுதியிலும், திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியிலும் வென்றிருக்கின்றன.
  • பாஜக ஆட்சியில் இருக்கும் ஹிமாசல பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்திலும் தலா ஓரிடத்திலும், பிகாரில் சுயேச்சை வேட்பாளா் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றனா். தோ்தல் நடந்த 13 தொகுதிகளில் பத்து தொகுதிகளை ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றிருப்பது எதிா்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்திருப்பதில் வியப்பில்லை.
  • முடிவுகளை காங்கிரஸ் சாதகமானது என்று கூறுவதைவிட, பாஜகவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இடைத்தோ்தல் தரும் ஆறுதல் என்னவென்றால், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி மாறிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறாா்கள்!

நன்றி: தினமணி (19 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்