TNPSC Thervupettagam

ஆளுநர் இல.கணேசன்: தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு மரியாதை

August 24 , 2021 1074 days 471 0
  • தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கு பாஜக அளித்திருக்கும் மேலும் ஒரு மரியாதை.
  • தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்ட இல.கணேசன், தனது இளமைக் காலத்திலிருந்தே தனித்தமிழை வாழ்வியல் கொள்கையாக வரித்துக்கொண்டவர். நெருக்கடிநிலையை எதிர்த்து தலைமறைவு அரசியலில் ஈடுபட்டவர். தமிழ்நாடு அளவிலும் தேசிய அளவிலும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
  • அனைத்துக்கும் மேலாக, இந்துத்துவ அரசியல் பெரிதும் விரும்பப்படாத தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றவர்.
  • தற்போது அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்திருக்கிறது என்பதிலிருந்தே கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட இல.கணேசனின் அரசியல் நட்புணர்வைப் புரிந்து கொள்ள முடியும்.
  • பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 செப்டம்பரிலிருந்து தெலங்கானாவின் ஆளுநராகப் பொறுப்பில் இருக்கிறார்.
  • இல.கணேசனுக்கு அப்படியொரு வாய்ப்பு தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது என்றாலும், அவரது அரசியல் பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாஜக உரிய வகையில் கௌரவித்திருக்கிறது என்பது மறுக்க முடியாதது.
  • மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, அவர் வெற்றிவாய்ப்பை இழந்தாலும்கூட, மாநிலங்களவை உறுப்பினராக அவரை அக்கட்சி தேர்வுசெய்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இத்தகைய வாய்ப்புகளை உருவாக்கி வழங்குவதில், மாநிலக் கட்சிகளைக் காட்டிலும் தேசியக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
  • ஆனால், தேர்தல் களத்தில் கணிசமான வெற்றியைப் பெற முடியாத நிலையிலும் தமிழ்நாடு தொடர்பில் பாஜக இத்தகைய வாய்ப்புகளை அளிப்பதிலிருந்து தவறவில்லை.
  • வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய இல.கணேசன், நிரந்தர மாத வருமானத்தைத் துறந்து, முழுநேர அரசியலில் அடியெடுத்துவைத்தார். இன்று அவர் ஆளுநராகியிருக்கிறார்.
  • காவல் பணித் துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அரசியலில் இணைந்த பிறகு அவருக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்கியிருக்கிறது பாஜக. மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகியிருக்கிறார்.
  • முழுநேர அரசியல் பணி என்பது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத பயணம். எனினும் ஒரு அரசியல் கட்சி, தனது முழுநேரத் தொண்டர்களை எவ்வாறு கௌரவிக்கிறது என்பதுதான் அக்கட்சியின் வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது.
  • பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் தேசிய, மாநிலக் கட்சிகளின் முழுநேர ஊழியர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் உருவாகுமா என்ற கேள்வியும் முன்னால் நிற்கிறது.
  • அரசியலுக்கு எதிர்பார்ப்புகளுடன் வரக் கூடாது என்பது பொது விருப்பமாக இருக்கலாம். ஜனநாயக அரசியல் களத்தில் ஒருவர் தனது வாழ்க்கையைப் பணயம்வைத்து விளையாட வேண்டியிருக்கிறது.
  • எந்தக் கட்சிக்காக அவர் உழைக்கிறாரோ அவரை அந்தக் கட்சி எவ்விதம் நடத்துகிறது என்பது முக்கியம். தமிழ்நாட்டில் இயங்கும் தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் பாஜக ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. தம்மோடு இணைந்தவர்கள் எந்த நிலையிலும் கைவிடப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்