TNPSC Thervupettagam

ஆளுநர் உரை தெலங்கானா வழி

January 10 , 2023 579 days 352 0
  • மாநிலத்தின் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதலில் பேரவையில் ஆளுநர் உரையாற்றுவதையே தவிர்த்திருக்கிறார்கள் தெலங்கானாவும்  அதன் முதல்வர் சந்திரசேகர ராவும்!
  • நாட்டில் பாஜக ஆட்சி செய்யாத பெரும்பாலான மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. தில்லி, மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுடன் தமிழ்நாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆளுநர் ஆர்.என். ரவி பதவியேற்றதில் இருந்தே திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட நாள்களாகக் காத்திருக்கின்றன.
  • பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதும் மசோதாவுக்கு எதிராகப் பேசி வருவதும் அவ்வப்போது  சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
  • சமீபத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் மசோதா காலாவதியாகிவிட்டதும் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.
  • அவ்வப்போது திமுக அரசை விமர்சித்தும் தமிழ்நாடு மக்களின் செயல்பாட்டுக்கு எதிராகவும் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில், ஆளுநர் மாளிகையின் நிகழ்வொன்றில், 'தமிழ்நாடு என அழைப்பதைவிட தமிழகம் என அழைப்பதுதான் சரியாக இருக்கும்' என்று கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஆளுநரும் ஆளுநரும் 'தமிழ்நாடு' என்றே உச்சரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
  • இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் தொடக்க உரை கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
  • அரசு தயாரித்து அளித்த உரையில் உள்ள 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை உச்சரிப்பதைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மக்கள் போற்றும் முக்கிய தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் அவர் குறிப்பிடவில்லை. திராவிட மாடல் என்ற வார்த்தையையும் அவர் உரையில் தவிர்த்துவிட்டார்.
  • உடனே, சட்டப்பேரவையிலேயே இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் பாதியிலேயே சட்டப்பேரவையை விட்டு வெளியேறியுள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா வழி!

  • மேற்குறிப்பிட்டபடி, தமிழ்நாட்டில் மட்டுமின்றி பாஜக அல்லாத பெரும்பாலான மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே இதே நிலையே நீடித்து வரும் நிலையில் தெலங்கானா முதல்வரோ அதிரடியாக ஆளுநர் உரையையே தவிர்த்தார்.
  • தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை தவிர்த்து கூட்டத்தை நடத்தியிருக்கிறார் முதல்வர் கேசிஆர், நாட்டில் ஆளுநர் உரை அல்லாத முதல் கூட்டம் இதுதான் எனலாம். தொடர்ந்து அரசின் பல்வேறு நிகழ்வுகளில்  தொடர்ந்து ஆளுநரைத் தவிர்த்து வருகிறார் கேசிஆர்.
  • கடந்த ஆண்டு அந்த மாநில முக்கிய விழாவொன்றில் ஆளுநருக்கு மாநில அரசு மரியாதை அளிக்கவில்லை என்பது பேசுபொருளானது. அதுபோல, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தெலங்கானா அமைச்சர்கள் கலந்துகொள்ளாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய அரசுக்கும் எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

கேரளத்திலும்?

  • கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பொறுப்பேற்றத்தில் இருந்தே முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுடன் கடும் மோதல் இருந்து வருகிறது.
  • பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதலின் எதிரொலியாக, சட்டப்பேரவை கூட்டத்தில், கேரள பல்கலைக் கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் உரையைப் புறக்கணிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • பாஜக அல்லாத மாநிலங்களில் தங்கள் வரம்புக்கு மீறி ஆளுநர்கள்  செயல்பட்டு வருவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதற்கேற்பவே இதுபோன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுவது அந்த மாநில மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவே கருதப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் மக்களிடையேயும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.

நன்றி: தினமணி (10 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்