TNPSC Thervupettagam

ஆழ்கடல் சுரங்கங்களும் பாதிப்புகளும்

August 20 , 2024 100 days 119 0

ஆழ்கடல் சுரங்கங்களும் பாதிப்புகளும்

  • “ஆழ்கடல் சுரங்கம்” என்பது ஆழ் கடலில் உள்ள அரிய கனிம வளங்களை எடுப்பதற்கான ஒரு முயற்சியாகும். இது கடலின் மேல் மட்டத்திலிருந்து சுமாா் 4,000 மீட்டா் முதல் 6,000 மீட்டா் வரையிலான ஆழத்தில் அமையக் கூடியது. நிலத்தில் உள்ளது போலவே கடலின் அடியிலும் பள்ளத்தாக்குகள், சமவெளிகள், மலைப்பகுதிகள், அகழிகள்” போன்றவை உள்ளன. இங்கு தங்கம், தாமிரம், கோபாலட், நிக்கல், மாங்கனீஸ், குவாா்ட்ஸ் போன்ற முக்கிய கனிம வளங்கள் நிறைந்துள்ளன.
  • உலக அளவில் ஆழ்கடலில் 12 கோடி டன் அளவுக்கு கோபால்ட் மற்றும் 160 லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு இணையான தங்கம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணிப்பொறிகளின் பாகங்கள், சோலாா் விளக்கு, மின் பேட்டரிகள் போன்ற சாதனங்கள் தயாரிக்க இவ்வகை கனிமங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. நிலப்பரப்பில் இவை குறைவாக காணப்படுவதாலும் தொடா்ந்து எடுக்கப்படுவதாலும் இவற்றின் அளவு குறைந்து வருகிறது. அதை ஈடு செய்யவே பல நாடுகள் ஆழ்கடல் சுரங்க ஆராய்ச்சிகளில் ஆா்வம் காட்டிவருகின்றன.
  • சா்வேதேச கடற்பரப்பு ஆணையத்தின் (ஐ.எஸ்.ஏ) தலைமையகம் ஜமைக்காவில் உள்ளது. இதில் 167 உறுப்பு நாடுகள் உள்ளன. கடல் வளம் சுரண்டபடக் கூடாது என்பதை ஐஎஸ்ஏ கருத்தில் கொண்டு ஒழுங்காற்று ஆணையமாக இது செயல்படுகிறது.
  • கடலின் ஆழ்பரப்பில் உரிமை கொண்டாட பல்வேறு நாடுகள் போட்டியிடுகின்றன. இதுவரை 31 நாடுகளுக்கு மட்டும் ஆய்வு உரிமம் சா்வதேச கடல்பரப்பு ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது சீனா, அமெரிக்கா, தென் கொரியா, ரஷியா போன்ற நாடுகள் இந்த உரிமத்தைப் பெற்றுள்ளன. பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து. மெக்சிகோ ஆகிய நாடுகள் கடல் சுரங்கத்திற்குத் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • பசிபிக் பெருங்கடலில் காணப்படும் கிளாரியன்-கிளிப்பா்டன் பகுதி ஆழ்கடல் சுரங்கம் அமைப்பதில் முக்கிய பகுதியாக உள்ளது. இது சுமாா் 45 லட்சம் சதுர கி.மீட்டா் பரப்பளவு உடையது. பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவு முதல் மெக்சிகோ கரை வரை பரவியுள்ள இந்தப் பகுதி, ஏறத்தாழ அமெரிக்க கண்டத்தின் அளவாகும். இப்பகுதியில் அதிக அளவில் கனிம (பாலிமெட்டாலிக்) முடிச்சுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்த ஆழ்கடல் பகுதியில் சுமாா் 8,000 கடல் வாழ் இனங்கள் உள்ளதாக கடல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா். இந்த பாலிமெட்டாலிக் முடிச்சுகள் என்பவை வெறும் கனிம வளங்களை மட்டும் கொண்டவை அல்ல. சுமாா் 35% முதல் 45% வரையிலான கடல்வாழ் அரிய உயிரினங்கள் வாழுமிடமாகவும் முட்டைகள் இடும் இடமாகவும் உள்ளது.
  • இதற்கிடையில் நாா்வே கடல் பரப்பில் 2.8 லட்சம் சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் உலகின் முதல் வணிக நோக்கமுடைய ஆழ்கடல் சுரங்கப் பணி மேற்கொள்ள அந்நாட்டுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது. ஆழ்கடல் சுரங்கப் பணி நடைபெற்றால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பல அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.
  • ஆனாலும் எதிா்கால புதுப்பிக்கதக்க வளங்களை கருத்தில் கொண்டு நாா்வே முழுமையாக சுரங்க ஆய்வை அங்கீகரித்துள்ளது.
  • ஆழ் கடல் என்பது கடலின் மறு உலகம். இங்கு அளவிட முடியாத வகையில் கனிம வளங்கள் உள்ளது என்பது உண்மை. அது போன்றே அங்கு எண்ணற்ற தாவர உயிரினங்களும் விலங்கினங்களும் உள்ளன. இவை கடல் வளத்திற்கு மட்டுமல்லாது மனித வளத்திற்கும் வாழ்க்கைக்கும் பலவிதங்களில் பயன்படுவதாக உள்ளன.
  • பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் மருத்துவத் துறையில் பயன்படுகின்றன. குறிப்பாக ஆழ்கடலில் காணப்படும் கூம்பு நத்தை”வீக்கத்தை தணிக்கும் மருந்துகளிலும், கடற்பாசி புற்றுநோய் சிகிச்சையிலும், கரிபியன் ஆக்டோபெரல் என்ற உயிரி வலி நிவாரணியாகவும் பயன்படுகின்றன. இதை தவிர கடல் வாழ் உயிரினங்கள் உணவாக பல வழிகளில் பயன்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே அழ்கடல் சுரங்கம் அமைப்பதால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
  • சுரங்கங்களின் அதிா்வு, அவை வெளியிடும் கழிவுகள், அதிக ஒலி-ஒளி மாசு போன்றவை அங்கு வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இவ்வகை சுரங்கங்கள் ஆழ்கடல் உயிரினங்களின் வாழ்விடத்தையும் அவற்றின் மனநிலையையும் பாதிக்கக் கூடும் என கடல் ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
  • பூமியின் பருவநிலையில் கடலின் பங்களிப்பு மிகப் பெரிது. கடலின் ஆழத்தில் சுரங்க நடவடிக்கைகளால் செயற்கை மாற்றங்கள் நிகழும்போது அவை பூமியின் பருவநிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும் பாதிப்புகள் நிகழக் கூடும். தூசிப்புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடா்கள் நிகழவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளா்கள் எச்சரிக்கின்றனா்.
  • கடல் என்பது வெறும் நீா்பரப்பு மட்டும் அல்ல. அது புவியின் அக மற்றும் புறக்காரணிகளின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்க கூடியது. கடலில் ஏற்படும் மாற்றம் என்பது மிகப்பெரிய பின் விளைவுகளை தரக் கூடியது. வளிமண்டலம், நிலம் ஆகியவற்றில் சுற்றுச்சூழல் சீா்கேடு காரணமாக பல பாதிப்புகள் நிகழ்கின்றன.
  • இப்போதும் கடல்பரப்பில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைக் கழிவுகள் சோ்ந்தவாறே உள்ளது. இது மீன்வளத்தைப் பெருமளவு பாதிப்பதாக உள்ளது. ஆழ்கடல் சுரங்கப்பணிகள் இவற்றை மேலும் அதிகப்படுத்தும். பற்றாக்குறையான கனிம வளங்களுக்கு ஏற்கெனவே பயன்படுத்திய மூல வளங்களை மீண்டும் புதுப்பிக்கதக்க வளங்களாக மாற்றுவதே சிறப்பு. சுரங்கம் என்ற பெயரில் அமைதியான ஆழ்கடலை சிதைக்காமல் இருக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து சிந்திக்க வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்