TNPSC Thervupettagam

ஆழ்கடல் திட்டம்

August 30 , 2019 1917 days 4565 0
இதுவரை
  • இந்தியாவின் இலட்சியத் திட்டமான “ஆழ்கடல் திட்டம்” இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.
  • ஆழ்கடல் தாதுக்களை ஆராய்வதற்கான 8000 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டமானது வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ஜூலை 27 அன்று அறிவித்தார்.
  • இறுதியாக, இந்தப் பணியை முன்னெடுப்பதற்கான கொள்கையளவிலான ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இப்போது அதற்கான செலவினத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அமைச்சகத்துடன் இணைந்த பல்வேறு நிறுவனங்களுக்கு அவை விநியோகிக்கப்பட்டு அக்டோபர் 31க்குள் இது தொடங்கப்படும்.
ஆழ்கடல் அகழ்வின் மூலம் பெறப்படும் பொருட்கள்
  • பல்வேறு தாதுக்களை உள்ளடக்கிய பாலிமெட்டாலிக் திரள்களை (polymetallic nodules) ஆய்வு செய்து பிரித்தெடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
  • இவை மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் இரும்பு ஹைட்ராக்சைடு போன்ற தாதுக்களால் ஆன சிறிய உருளைக் கிழங்கு போன்ற வட்டமான திரட்டல்கள் ஆகும்.

 

  • இவை இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியில் சுமார் 6,000 மீ ஆழத்தில் சிதறிக் கிடக்கின்றன. மேலும் இவற்றின் அளவு சில மில்லி மீட்டர் முதல் சென்டி மீட்டர் வரை மாறுபடும்.
  • இந்த உலோகங்களைப் பிரித்தெடுத்து மின்னணு சாதனங்கள், திறன் பேசிகள், மின்கலன்கள் மற்றும் சூரிய ஒளி தகடுகளில் கூட அவற்றைப் பயன்படுத்தலாம்.
அகழ்விற்கான இடங்கள்
  • 1982 ஆம் ஆண்டின் கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற சர்வதேச அமைப்பான சர்வதேச கடற்படுகை ஆணையமானது (International Seabed Authority-ISA) ஆழ்கடல் அகழ்விற்கான பகுதியை ஒதுக்குகிறது.
  • 1987 ஆம் ஆண்டில் “முன்னோடி முதலீட்டாளர்” என்ற தகுதிநிலையைப் பெற்ற முதலாவது நாடு இந்தியா ஆகும். மேலும் மத்திய இந்தியப் பெருங்கடல் கடற்படுகையில் சுமார் 1.5 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு இந்த திரள்களுக்கான ஆய்விற்காக இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில் இந்தியா ISA உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. மேலும் கடற்பரப்பின் முழுமையான வள பகுப்பாய்விற்குப் பின்னர் 50% பகுதிகளைத் திரும்ப அளித்து மீதமுள்ள 75,000 சதுர கி.மீ. பரப்பளவை மட்டுமே இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

 

  • புவி அறிவியல் அமைச்சகத்தின் வெளியீட்டின் படி இந்தப் பகுதியில் 4.7 மில்லியன் டன் நிக்கல், 4.29 மில்லியன் டன் தாமிரம், 0.55 மில்லியன் டன் கோபால்ட் மற்றும் 92.59 மில்லியன் டன் மாங்கனீசு உட்பட மொத்தமாக மதிப்பிடப்பட்ட பாலிமெட்டாலிக் திரள்களின் வளமானது 380 மில்லியன் டன் ஆகும்.
  • மேலதிக ஆய்வுகளானது அகழ்வுப் பகுதியை 18,000 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு குறைக்க உதவியுள்ளன. இவை முதல் தலைமுறை அகழ்வுத் தளமாக இருக்கும்.
போட்டியில் உள்ள இதர நாடுகள்
  • மத்திய இந்தியப் பெருங்கடல் கடற்படுகையைத் தவிர மத்திய பசிபிக் பெருங்கடலில் இருந்தும் பாலிமெட்டாலிக் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இது கிளாரியன் – கிளிப்பர்டன் மண்டலம் என்றழைக்கப்படுகிறது.

 

  • ISAவின் வலை தளத்தில் உள்ள தகவலின்படி, ஆழமான கடற்படுகைகளில் பாலிமெட்டாலிக் திரள்கள், பாலிமெட்டாலிக் சல்பைடுகள் மற்றும் கோபால்ட் நிறைந்த ஃபெரோ மாங்கனீசின் மேலோடுகளை ஆய்வு செய்வதற்காக 29 ஒப்பந்த தாரர்களுடன் 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • பின்னர் இது மேலும் 5 ஆண்டுகளுக்கு 2022 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளும் குக் தீவுகள் மற்றும் கிருபாட்டி போன்ற சில தீவுகளும் இந்த ஆழ்கடல் அகழ்விற்கான போட்டியில் இணைந்துள்ளன.
  • பெரும்பாலான நாடுகள் தங்கள் தொழில்நுட்பங்களை ஆழமற்ற நீர்ப் பகுதியில் மட்டுமே பரிசோதித்துள்ளன. இன்னும் ஆழ்கடல் பகுதியில் பிரித்தெடுப்பைத் தொடங்கவில்லை.
அகழ்வில் இந்தியாவின் நிலை
  • இந்தியாவின் அகழ்வுத் தளமானது சுமார் 5500 மீட்டர் ஆழத்தில் உள்ளது. அங்கு அதிக அளவு அழுத்தமும் மிகக் குறைந்த வெப்பநிலையும் உள்ளது.
  • சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தின் ஆழ்கடல் தொழில்நுட்பக் குழுவின் தலைவரின் கூற்றுப்படி, அவர்கள் 500 மீட்டர் ஆழத்தில் செயற்கைத் திரள்களுடன் கூடிய அகழ்வுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி நிரூபித்துள்ளனர்.
  • மேலும் 6000 மீ ஆழத்தில் தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் வாகனம் மற்றும் கள மண் சோதனை கருவிகளையும் அவர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். மேலும் மத்திய இந்தியப் பெருங்கடல் கடற்படுகையில் அகழ்வுப் பகுதிகள் குறித்து முழுமையான புரிதல்களையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

 

  • மேலும் 6,000 மீட்டர் ஆழத்திற்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட அகழ்வு இயந்திரமானது 900 மீட்டர் தூரம் வரை செல்ல முடிந்தது. எனவே விரைவில் அது 5,500 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பப்படும்.
  • இதனை இவர்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சோதனை செய்வர். இதில் வானிலை நிலைமைகளும் கப்பல்கள் கிடைக்கும் நிலையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • உலோக திரள்களை எவ்வாறு மேற்பரப்பிற்கு கொண்டு வருவது என்பதை மேலும் புரிந்து கொள்ள கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • இணைப்பு கம்பி அல்லது மின் எந்திர கம்பி மற்றும் குழாய் ஆகியவற்றைக் கொண்ட ஒரு மேலே கொண்டு வரும் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
  • இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் கூற்றுப்படி, இந்த ஆழமான தொலைதூர இடங்களானது மிகக் குறைந்த உயிர்வளி, சூரிய ஒளி, உயர் அழுத்தம் மற்றும் மிகமிகக் குறைந்த வெப்பநிலை போன்ற சூழ்நிலைகளுக்குத் தங்களை தகவமைத்துக் கொண்ட தனித்துவம் வாய்ந்த உயிரினங்களுக்கு உறைவிடமாக இருக்கக் கூடும்.
  • இது போன்ற அகழ்வுப் பயணங்களானது அத்தகைய உயிரினங்கள் அறிவியல் உலகிற்கு தெரியும் முன்பே அழிந்து போக வழி வகுக்கும்.

 

  • ஆழ்கடலின் பல்லுயிர்த் தன்மை மற்றும் சூழலியல்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை. இதனால் சுற்றுச்சூழலில் இதன் தாக்கம் மற்றும் அதற்கு போதுமான வழிகாட்டுதல்களை உருவாக்குவது கடினமாக உள்ளது.
  • கடுமையான வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப் பட்டிருந்தாலும் அவையனைத்தும் ஆய்விற்கான வழிகாட்டுதலாக மட்டுமே உள்ளன.
  • ஒரு புதிய அகழ்விற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு ISA உடன் அவை விவாதிக்கப்பட்டு வருகின்றன.
  • கடலடியில் படிந்துள்ள துகள்கள் இடையில் விடப்பட்ட துகள்களாக மேற்பரப்பை அடையக் கூடும். அவை இடையில் மிதக்கும் பொருட்களை உண்ணும் கடலின் மேல் அடுக்குகளில் உள்ள உயிரிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.
  • அகழ்வு வாகனங்களிலிருந்து வரும் ஒலி-ஒளி மாசுபாடுகள் மற்றும் கப்பல்களின் இயக்கக்கத்தில் இருந்து வரும் எண்ணெய்க் கசிவுகள் குறித்தும் கூடுதல் கவலைகள் எழுப்பப் பட்டுள்ளன.
ஆழ்கடல் அகழ்வின் பொருளாதார ரீதியான லாபம்
  • ISAவின் சமீபத்திய மதிப்பீட்டின்படி ஆண்டுக்கு சுமார் மூன்று மில்லியன் டன் அகழ்வால் மட்டுமே வணிக ரீதியாக லாபம் கிடைப்பது சாத்தியமாகும் எனக் கூறப்படுகின்றது.
  • எனவே தொழில் நுட்பங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு திறனுடையவையாக பயன்படுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    

ó ó ó ó ó ó ó ó ó

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்