- ‘அரசுப் பணியில் பதவி உயர்விலும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கோருவதற்கு, அது அடிப்படை உரிமை அல்ல' என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதும் இல்லை.
- அரசு வேலைவாய்ப்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் படிப்படியாகப் பல தீர்ப்புகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிவந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் ஆகியோர் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முற்றிலும் உரிமையுள்ளவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இடஒதுக்கீடு
- இப்பிரிவினருக்குக் காலங்காலமாகக் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவந்ததாலும், அரசின் வேலைவாய்ப்புகளில் அவர்களுடைய மக்கள் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் இல்லை என்பதாலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் ஐயம் ஏதுமில்லை. மத்திய அரசு மட்டுமின்றி, அநேகமாக எல்லா மாநில அரசுகளுமே இப்போது இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றுகின்றன.
- சமூகநீதியில் அக்கறை கொண்டோரை அதிர வைக்கும்படியான மேற்சொன்ன தீர்ப்பு உத்தராகண்ட் மாநில வழக்கு தொடர்பானது.
- உத்தராகண்ட் மாநிலத்தில் முன்பு காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ‘பதவி உயர்வில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடிகளுக்கும் இடம் ஒதுக்குவதைக் கைவிட்டுவிடலாம்' என்று முடிவுசெய்தது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டபோது காங்கிரஸ் அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. அடுத்து வந்த பாஜக அரசும், அதன் அடியொற்றியே இந்த வழக்கில் வாதாடியது.
அரசு வேலைவாய்ப்பு
- இடஒதுக்கீடு தொடர்பாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 16(4), ‘‘பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்றால், அரசு அதற்கேற்ப இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும்” என்கிறது. அனைவருக்கும் சமத்துவ உரிமையை வழங்கும் நோக்கிலும், பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கக் கூடாது என்பதாலும் செய்தே தீர வேண்டியது என்பது இதிலிருந்து விளங்கும். எனவே, பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும்பட்சத்தில், இடஒதுக்கீடு கோர அவர்கள் உரிமை படைத்தவர்களாகிறார்கள்.
- சமூகப் புறக்கணிப்பும் சாதியக் கண்ணோட்டமும் இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பதால், இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா என்ற கேள்வி வலுக்கிறது.
சம வாய்ப்பு
- அனைவருக்கும் ‘சம வாய்ப்பு' என்ற கொள்கைக்கு இடஒதுக்கீடு ‘விதிவிலக்கு' என்று உச்ச நீதிமன்றம் இப்போது கருதுவதில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் மட்டுமல்ல; இன்னும் அரசு வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் பெறாத மற்றவர்களும்கூட அதைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத்தான் முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன.
- இடஒதுக்கீடு கொள்கையை முறையாகப் பின்பற்றாவிட்டாலோ, அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கு எவ்வளவு வேலைகள் கிடைத்திருக்கின்றன என்று தரவுகளைத் திரட்டாவிட்டாலோ பொதுச் சேவைகளில் எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிடும்.
- இடஒதுக்கீட்டைத் தேவையற்ற சலுகை என்று கருதாமல் சமூகம், கல்வி, வேலைவாய்ப்புகளில் காலம்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமை என்று அனைவரும் கருத வேண்டியது அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (18-02-2020)