TNPSC Thervupettagam

இடர்களுக்கு நடுவிலும்

October 26 , 2023 387 days 199 0
  • தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்களும், குழப்பங்களும் ஆட்சி மாற்றங்களும், இயற்கைச் சீற்றங்களும், அந்நிய ராணுவ ஆக்கிரமிப்புகளும் ஆப்கானிஸ்தானை ரத்தம் சிந்தும் கலவர பூமியாக மாற்றியிருக்கின்றன. நிலையான ஆட்சி இல்லை. தலிபான்களின் மத அடிப்படைவாத அடக்குமுறை ஆட்சியில் சிக்கித் தவிக்கிறது ஆப்கானிஸ்தான்.
  • இறுக்கம் நிறைந்த அச்சத்தின் பிடியிலும்கூட ஆப்கானிஸ்தான் மக்கள் அவ்வப்போது தங்களுடைய திறமையையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடைந்திருக்கும் இரண்டு சாதனை வெற்றிகளையும் பார்க்கும்போது, அந்த வீரர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தாலும் ஹஷ்மத்துல்லா ஷாஹித் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அடைந்திருக்கும் இந்த வெற்றிகள் சாதாரணமானவையல்ல.
  • நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை  69 ரன் வித்தியாசத்தில் ஆப்கன் அணி தோற்கடித்தபோது, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கன் அணி அடைந்த இரண்டாவது வெற்றி அது. அந்த வெற்றி, அந்த அணி குறித்த எல்லா அபிப்பிராயங்களையும் திருத்தி எழுதியது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் மட்டுமே சர்வதேச அணிகளாக இருந்த நிலைமை மாறிவிட்டது. போட்ஸ்வானா, மலேசியா, நெதர்லாந்து, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் என பல புதிய அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கித் தடம் பதிக்கத் தொடங்கியிருக்கின்றன.
  • ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றதுபோய், 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், அதைத் தொடர்ந்து 20 ஓவர் கொண்ட டி20 போட்டியும் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய பரிமாணங்களாக மாறியிருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடப்படும் நிலைமை ஏற்பட்டிருப்பதால்தான், 2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட்டும் சேர்க்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் புதிய வரவு. ஆப்கானிஸ்தான் அணி இப்போதைய வலிமையை அடைவதற்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது. அதை அந்த வீரர்களும், அந்த நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
  • ஆப்கன் கிரிக்கெட் வீரர்களின் ஆரம்பகால பயிற்சி பாகிஸ்தானில் தொடங்கியது என்பது என்னவோ உண்மை. பாகிஸ்தான் எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாம்களில் இருந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு தங்களது நாட்டுக்கு திரும்பியபோது, தூசு படிந்த மைதானங்களிலும், தற்காலிக இடங்களிலும் விளையாடத் தொடங்கினார்கள். தங்களது நாட்டின் சார்பில் என்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற வேண்டும் என்கிற கனவு மட்டும் அவர்களுக்கு இருந்தது.
  • அவர்களாகவே தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு ஓர் அணியை உருவாக்கினார்கள். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தங்களது முதலாவது முயற்சியை பாகிஸ்தானுடனான டி20 ஒருநாள் போட்டிகளுடன் தொடங்கினார்கள். அவர்களுக்கு விளையாட வாய்ப்பளித்த பாகிஸ்தான், பயிற்சி அளிக்கவோ, அந்த அணியை மேம்படுத்தவோ முன்வரவில்லை; அதற்குத் தயாராகவும் இல்லை.
  • அப்படிப்பட்ட சூழலில்தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாட்டின் அணிக்கு கைகொடுக்க முன்வந்தது. 2015-இல் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் தில்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கில் ஆப்கன் வீரர்களுக்குத் தங்குமிடமும், பயிற்சிக் களமும் அமைத்துத் தரப்பட்டன. அதில் தொடங்கிய ஆப்கன் அணியின் பயணம், இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தடம் பதிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
  • சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றியடைந்திருப்பது ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறது. பாகிஸ்தானின் 282 ரன் குவிப்பைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் களமிறங்கியபோது அந்த அணியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கவில்லை. தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியிலும் அந்தப் போட்டி குறித்த ஆர்வம் குறைவாகவே இருந்தது.
  • 50 ஓவர்களில் 1 ஓவர் மீதம் இருக்கும்போது பாகிஸ்தானின் 282 ரன்களைக் கடந்து வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் எட்டியது. அது மட்டுமல்ல, அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது என்பது அதைவிட வியப்பு. இப்ராஹிம் ஸட்ரன், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா மூவரும் அடித்த அரை சதங்கள் ஆப்கானிஸ்தானின் வெற்றியை உறுதிப்படுத்தும் காரணிகளாயின.
  • ஆப்கன் வீரர்கள் வித்தியாசமான பாணியில் தங்களது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் மட்டுமல்லாமல், அவர்களது மின்னல் வேக விளையாட்டிலும் எதிரணிகள் மிரண்டு போகின்றன. இப்போது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு வலிமை பெற்றிருக்கிறது ஆப்கன் அணி.
  • ஆப்கன் அணியின் வெற்றி ஒருவகையில் இந்தியாவின் வெற்றியும்கூட! 

நன்றி: தினமணி (26 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்