TNPSC Thervupettagam

இட ஒதுக்கீடு அரசியல்! | ஜாதிவாரி கணக்கெடுப்பு

December 9 , 2020 1327 days 650 0
  • வாக்களித்தது போலவே ஜாதிவாரியான விவரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஆணையத்தை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும், விரைவிலேயே அதன் பணியைத் தொடங்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
  •  அரசியல் செல்வாக்கு உள்ள ஜாதிகள், தங்களது எண்ணிக்கை பலத்துக்கு ஏற்ப கல்வியிலும், அரசுப் பணியிலும் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவது தமிழகத்துக்கு மட்டுமே உரித்தானதல்ல.
  • ராஜஸ்தானில் குஜ்ஜர்கள், ஹரியாணாவில் ஜாட்டுகள், குஜராத்தில் பட்டிதார்கள், மகாராஷ்டிரத்தில் மராத்தாக்கள் என்று தமிழகத்தில் வன்னியர்கள் போராடுவதுபோல அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுகிறார்கள்.
  •  எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, வன்னியர் போராட்டம் முதலில் மூண்டது. தங்களை "மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்' என்று பிரித்து 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மிகத் தீவிரமான போராட்டமாக டாக்டர் ராமதாஸின் தலைமையில் வன்னியர் சங்கம் சாலை மறியலிலும், சென்னையைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டது.
  • அந்தப் போராட்டத்தின் விளைவாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை இனம் கண்டு அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் வன்னியர்களும் இணைக்கப்பட்டிருப்பதால், 20% இட ஒதுக்கீட்டின் பயன் தங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதுதான் இப்போதைய பாமக போராட்டத்துக்குக் காரணம்.
  •  இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருக்கும் பல ஜாதியினர், ஒரு காலத்தில் முற்பட்ட வகுப்பினர் என்று கருதப்பட்டவர்கள். தங்களது அரசியல் செல்வாக்கால், கல்வி, அரசுப் பணிகளில் இடம் பெறுவதற்காக அவர்கள் தங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டுவிட்டனர்.
  • அதனால், உண்மையான பிற்படுத்தப்பட்டோர் பயனடையவில்லை என்பதால்தான், வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு கோரினர்.
  •  இந்தப் பிரச்னை, பட்டியல் இனத்தவர்கள் மத்தியிலும் இல்லாமல் இல்லை. பட்டியல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பயன், எண்ணிக்கை பலமும், அரசியல் செல்வாக்கும், கல்வியில் முன்னேற்றமும் உள்ள ஆதிதிராவிடர்களுக்குச் சென்று விடுகிறது என்கிற மனக்குறை தேவேந்திர குல வேளாளர், அருந்ததியினர் போன்ற பட்டியல் இனத்தவர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், அருந்ததியினருக்கும் இட ஒதுக்கீட்டில் தனி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
  •  1901 முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் ஜாதிவாரி புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டபோது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் "குற்றப்பரம்பரைச் சட்டம்' போல, பிற மாநிலங்களிலும் சில ஜாதிப் பிரிவினரை, பிரித்து அடையாளம் காண அந்தப் புள்ளிவிவரம் பயன்பட்டது.
  • அதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதிக் கட்டுமானத்தை நிலைநிறுத்துவதாக உள்ளது என்றுகூறி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தனர்.
  •  1931 வரை பின்பற்றப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு முறை, 1941 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து கைவிடப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கணக்கெடுப்பு ஆணையர் யீட்ஸ், அதற்காகக் கூடுதல் செலவாகிறது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
  • 1951-இல், சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது "பிற்பட்ட வகுப்பினர் ஆணையம்' கோரிய சில விவரங்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளிட்ட சில பிரிவினரின் புள்ளிவிவரங்களும் அப்போது சேகரிக்கப்பட்டன. ஆனால், அவை தொகுக்கப்படவோ, வெளியிடப்படவோ இல்லை.
  •  2011-இல் சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட பல விவரங்கள் அரசியல் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
  •  மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் உரிமை, அரசியல் சாசனப்படி, மத்திய அரசுக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் இணைத்து, நீதிபதி ஏ. குலசேகரன் ஆணையம் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களைக் கோரக்கூடும்.
  •  அனைவருக்கும் சம வாய்ப்பு என்கிற அரசியல் சாசன உரிமையை இட ஒதுக்கீடு பறிப்பதாக இருக்கிறது என்கிறது உச்சநீதிமன்றம். ஏற்கெனவே தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றத்தின் 50% வரம்பை மீறியதாக இருக்கிறது. அதனால் இதற்கு மேலும் அதை அதிகரிக்க வழியில்லை.
  •  பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்களை இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து அகற்றினால் மட்டுமே "சமூக நீதி' நிலைநிறுத்தப்படும் என்பது இவர்களுக்குத் தெரியாததல்ல. அந்தக் கோரிக்கையை முன்னெடுக்க வேண்டிய இடதுசாரிக் கட்சிகள் மெளனம் சாதிப்பதுதான் தமிழகத்தின் மிகப் பெரிய சோகம்.
  •  ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு நிலவும் வரை, ஜாதிகள் இருக்கும். ஜாதிகள் இருக்கும் வரைதான், ஜாதிகளை ஒழிப்பதாகக் கூறி அரசியல் நடக்கும். வாழ்க இவர்களின் சமூக நீதி!

நன்றி :தினமணி (09-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்