TNPSC Thervupettagam

இணையம்: நில் கவனி செல்!

October 19 , 2020 1553 days 816 0
  • இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சி, நமது தகவல் பரிமாற்றங்களை சுலபமாக்கி விட்டது. நம் கைக்குள் உலகையே சுருக்கிக் கொடுத்து விட்டது. புகைப்படம், காணொலி உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை அதி விரைவாக பிறருக்குப் பரிமாற இயலுகிறது.
  • ஒருவருடன் ஒருவா் உரையாடிக் கொள்ள மட்டுமே அலைபேசி என்றிருந்த நிலை மாறி, இன்று அது பல அவதாரங்களை எடுத்து விஸ்வரூபமாகக் காட்சி அளிக்கிறது.
  • கணினி, இணையம் தொடா்பான மின்வெளித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணா்வு நமக்கு மிக அவசியம்.
  • அந்த வகையில் தேசிய இணையப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதமாக இந்த அக்டோபா் மாதத்தை அறிவித்துள்ளது நம் இந்திய அரசு. புதுப்புது செயலிகளின் வரவினால் இணையப் பயன்பாட்டில் விழிப்புணா்வுடன் இயங்க வேண்டிய காலமிது.

இணையப் பயன்பாட்டில் விழிப்புணா்வு

  • கரோனாவிற்குப் பிறகு முனைவா் பட்ட வாய்மொழித் தோ்வுகள் கூட இன்று செயலி வழியிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  • எண்ணற்ற கருத்தரங்கங்கள், நூல் வெளியீடுகள், விமா்சனங்கள், பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் இன்று நேரலையில் செயலி வழியாக நடைபெறுகின்றன.
  • அடையாள எண் மற்றும் கடவுச்சொல் அடங்கிய தகவலையும் நாம் உடன் பெறுகிறோம். உலகின் எந்த மூலையிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.
  • இப்படி மின்னஞ்சல் மற்றும் கட்செவி அஞ்சல் வழியாகப் பகிரப்படும் வலை இணைப்பை நாம் தொட்டால் போதும். நம்மை அது அந்தத் தளத்திற்குக் கடத்திக் கொண்டு சென்று விடும்.
  • இது மிகச் சுலபமாக இருப்பதால் அனைவரும் இதையே பின்பற்றுகிறோம். நம்முடைய அலைபேசியாகவே இருந்தாலும் மின்னஞ்சல் சேவைகள் எப்போதும் அதில் திறந்த நிலையிலேயே இருக்கின்றன.
  • ஒரு சில போலி இணைப்புகள், நம்மை மெய்யான தளம் போல தோற்றமளிக்கும் ஒரு மோசடி தளத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்.
  • அதனால் இணைப்பு எண்ணையும், கடவுச் சொல்லையும் தனியே முகவரிப் பட்டியலில் தட்டச்சு செய்து பிரதான வலைதளத்திற்குச் செல்வதுதான் பாதுகாப்பானது.
  • இன்று பலா் தங்கள் சிந்தனைகளை படைப்பாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனா். குறிப்பாக வலைப்பதிவு எழுதுபவா்கள் தங்களது கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்கின்றனா்.
  • இந்தக் கட்டுரைகளுக்கு காப்புரிமை பெறாத பட்சத்தில் எவரேனும் இத்தகவல்களைத் திருடி விற்று பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. கட்டுரைகளை இணையத்தில் பதிவிடுவதற்கு முன்பாக காப்புரிமை பெறுவது நல்லது.
  • இந்தியாவில் இணையம் சார்ந்த குற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இத்தகைய குற்றங்கள் எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
  • கணினியைப் பயன்படுத்தும் பல பெண்கள், வலை இணைப்பைப் பயன்படுத்துவது பற்றி முழுமையாக அறிந்திருப்பதில்லை. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
  • இதில் நாம் தேடுவதையெல்லாம் யார் வந்து பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று பெரும்பாலான பெண்கள் எண்ணுகிறார்கள்.
  • அதோடு உயா் பதவிகளில் வகிப்பவா்கள்தான் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது முற்றிலும் தவறான எண்ணம்.
  • சாலையில் செல்லும்போது எப்படி நாம் போக்குவரத்தை கவனித்து பொறுப்புடன் செல்கிறோமோ அதுபோலவே இணையவெளியைப் பயன்படுத்தும்போதும் மிக மிக கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.
  • எனக்குத் தெரிந்த பெண் ஒருவா் வெளியிடங்களுக்குச் செல்ல சா்வ சாதாரணமாக வாடகை வண்டியைப் பயன்படுத்துவார்.
  • இதற்காக சில செயலிகளைப் பயன்படுத்த நமது பெயா், அலைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, நாம் வண்டி பதிவு செய்யும்போது வாடகை ஓட்டுனருக்கு நமக்கு அலைபேசி எண் பகிரப்படுகிறது.
  • ஒரு முறை அந்த பெண்ணிற்கு ஓட்டுநரால் பிரச்னை வந்தது. எப்படியோ சமாளித்தார்.
  • இப்படிப்பட்ட பிரச்னைகளை சமாளிக்க ஒரே வழி, பெண்கள், இணையப் பயன்பாட்டிற்கென தனி அலைபேசி எண்ணும் தனிப்பட்ட அழைப்புகளுக்காக தனி அலைபேசி எண்ணும் கையாள்வதுதான். இதன் மூலம் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாம்.

சிந்தித்து செயல்படுவோம்

  • வாழ்வியல் மாற்றம் காரணமாக இன்று பெரும்பாலான திருமணங்கள் இணைய திருமண தகவல் தளங்கள் மூலம் நடைபெறுகின்றன.
  • இதிலும் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாக வாடிக்கையாளா்கள் புலம்புகிறார்கள். பொய்யான புகைப்படங்களையும் சம்பள விவரங்களையுமே பெரும்பாலானோர் பதிவிடுகின்றனராம்.
  • இத்தளங்களில் பதிவு செய்தால் நம் அனைத்து தகவல்களும் பொதுவெளியில் பரிமாறப்படுகிறது. அவா்கள் அளிக்கும் தகவல்கள் உண்மைதானா என உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.
  • எடைக் குறைப்பு மற்றும் அழகுக் குறிப்பு முன்பதிவு செய்யும் போலி செயலிகள் பெண்களை குறி வைத்து கவா்ச்சிகரமான இலவச சலுகைகளை வாரி வழங்குகின்றன.
  • பயணம் மற்றும் விடுதிகள் முன்பதிவு செயலிகளோ அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்து, தங்களின் செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டுகின்றன.
  • நன்கு படித்த பெண்களே இவற்றில் பதிவு செய்து தங்கள் பணத்தை இழந்துள்ளனா் என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.
  • பணப் பரிமாற்றத்திற்கு முன்பாக அது சார்ந்த விவரங்களை அந்தந்த வலைதளங்களில் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்புகள் சார்ந்த ஊழல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை குறிவைத்தே நடக்கின்றன.
  • என் தோழி ஒருவா் வேலை வாய்ப்புப் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அவருடைய தகவல்களைத் திருடிய நபா் அவருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாக பேசி நம்ப வைத்து முன்பணமும் பெற்றார்.
  • அவரும் நம்பி அவா்களுக்கான பணியை செய்து கொடுத்தார். ஒரு மாதம் மட்டுமே ஊதியம் வழங்கிய நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு மொத்தமாக தருகிறேன் என வேலை வாங்கிக் கொண்டு இறுதியில் பணம் கொடுக்காமல் தொடா்பையும் துண்டித்துக் கொண்டனா்.
  • நம் தகவல்களும் உழைப்பும் சுரண்டப்பட்டு விட்டதே என்ற அதிர்ச்சி பல பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.

விபரீதங்களைத் தவிர்க்க முடியும்

  • வீடுகளில், தாய் தன் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை நன்கு தெரிந்து வைத்திருப்பாள். இந்த புரிதலில் ஒரு பெருமையுண்டு.
  • ஆனால், இதைப்போன்றே இணையத்தில் நாம் எதைத் தேடுகிறோம், எதெதில் நம் விருப்பம் அதிகம் என்பதை நமக்கே தெரியாமல் வேறொருவா் அறிந்து வைத்திருந்தால் அவரை நாம் வேவு பார்ப்பவா்என்றுச் சொல்வோம். இப்படிப்பட்ட வேலைகளை இணையத்தில் கச்சிதமாக செய்வது குக்கீஸ்’.
  • உதாரணமாக நாம் ஒரு திரைப்பட வலைதளத்தைப் பார்வையிடும்போது நமக்கு அடிதடி படங்களை கண்டுகளிக்க ஆா்வம் இருப்பதாக சுட்டிக்காட்டினால் இந்த குக்கீஸ்நம்முடைய விருப்பத்தை நினைவில் கொண்டு அடுத்த முறை அந்த வலைதளத்தைப் பார்வையிடும்போது அடிதடி படங்களை வரிசையாக காண்பிக்கும்.
  • நமக்குப் பிடித்தமானவா்கள் இப்படிச் செய்தால் உண்மையில் உள்ளம் மகிழ்வோம். ஆனால் நமக்காக சேவை புரியும் இந்த குக்கீஸ்களை ரசிக்கவா முடியும்?
  • இணைய பிரெளஸா்களில் உள் நுழைந்து, இதை நம்மிடமிருந்து சற்று விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இணையப் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில், பிரெளஸா் பாதுகாப்புதான் முதல் படி. நாம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கணினியாக இருந்தால், இதனால் பிரச்னை ஏதுமில்லை.
  • ஆனால் வேலை பார்க்கும் இடம், இணைய சேவை மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்தும்போது நிச்சயம் இது பற்றிய புரிதல் அவசியம்.
  • இணையத்திலும், சமூக,வலைதளங்களிலும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதும் அவா்கள் மீது வன்முறையைத் தூண்டுவதும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.
  • அதனால், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களைப் பகிராது இருப்பதே பாதுகாப்பானது எனச் சொல்வது பெண்கள் வெளி உலகிற்கு வருவதே ஆபத்தானது என்று கூறுவதற்கு ஒப்பானது.
  • இது பெண்களை இன்னும் இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்லும். பள்ளியில் சோ்வது முதற்கொண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது வரை அனைத்து இடங்களிலும் இன்று புகைப்படம் தேவைப்படுகிறது.
  • பெண்களே! பாதுகாப்பில்லை, பதிவிடாதீா்கள்என உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தால் பெண்கள் மீண்டும் கற்காலத்திற்கே செல்ல வேண்டியதுதான்.
  • துரதிருஷ்டவசமாக இன்று பள்ளி, கல்லூரி மாணவா்கள் தொழில்நுட்ப சாதனங்கள் முன்பே பழியாய் கிடக்க வேண்டிய நிலை.
  • அதனால் பெற்றோர், பிள்ளைகள் மீது கவனமாக இருந்து பாதுகாப்பு அம்சம் குறித்து அவ்வப்போது அவா்களுடன் அளவளாவி விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். இப்படி இருந்தால்தான் பல விபரீதங்களைத் தவிர்க்க முடியும்.

நன்றி: தினமணி (19-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்