- விவாகரத்து என வரும்போது பல பிரச்சினைகள் தலைதூக்குவதைப் பார்க்கலாம். ஒருவருடன் வாழத் தனக்கு விருப்பமில்லை என்று சாதாரணமாகப் பிரிவது நம் சமூகத்தில் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. ஏன் பிரிய விருப்பப்படுகிறார்கள் என்று வீட்டில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் சொல்லியே ஆக வேண்டும். அதனால் நிறைய பெண்கள் விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கணவன் தன்னை அடிக்கிறான், உதைக்கிறான், கொடுமைப்படுத்துகிறான் என்கிற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து கோருவதும் நடக்கிறது. இருவரும் ஒப்புக்கொண்டு விவாகரத்து கோரும்போது இந்தப் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
- இரண்டாவது பிரச்சினை ஜீவனாம்சம். இதுவும் இருவரும் ஒப்புக்கொள்ளும்படி இருந்து விட்டால் பிரச்சினை எழுவதில்லை. ஆனால், இங்கும் இரு தரப்பிலிருந்தும் பிரச்சினைகள் முளைக்கின்றன. இருவரும் பிரிவிற்குத் தயாராக இருந்தாலும் பணப் பிரச்சினை தீராதவரை விவாகரத்து விவகாரம் நீண்டுகொண்டே போகிறது. பிள்ளைகள் இருந்தால் முதலில் அதுவே பெரிய பிரச்சினையாக நிற்கிறது. பிள்ளைகள் யாருடன் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் ஓரளவுக்கு அவர்களே முடிவு செய்யலாம்.
- ஆனால் சிறு பிள்ளைகளாக இருந்தால் பொதுவாக அவர்கள் அம்மாவிடம்தான் ஒப்படைக்கப் படுகிறார்கள். ஆனால், அவ்வப்போதோ வாரத்தில் சில நாள்களோ பிள்ளைகளை அப்பா பார்த்து வரலாம் அல்லது உடன் அழைத்து வைத்துக்கொள்ளலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் தனக்கு வேண்டாத கணவனைப் பிள்ளைகளுக்கும் வேண்டாத அப்பாவாகவே ஆக்கிவிடுகிறார்கள்.
- இப்படியாகச் சிலர் இந்த மாதிரி பிரச்சினைகளை நினைத்தே, வாழப் பிடிக்கிறதோ இல்லையோ காலம் முழுவதும் இணையர்களாக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமாக நிறைய ஆண்கள் குழந்தைகளை விட்டுப் பிரிய வேண்டியிருக்குமே எனப் பயந்தே இணைந்து வாழ்கிறார்கள். சில பெண்களோ தனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும் மற்ற செளகரியங்கள் கிடைக்காமல் போய்விடும் என்றும் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்றும் பயந்து இணைந்து வாழ்கிறார்கள்.
நீடிக்கும் வழக்குகள்
- ஒருவர் விவாகரத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ அவர்கள் எதிர்பார்க்கும் ஜீவனாம்சத்தைக் கொடுக்க கணவன் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலோ விவாகரத்து வழக்குகள் பல வருடங்களாக நீண்டுகொண்டே போகும். இவர்கள் பிரிந்து வெளியில் வந்திருப்பார்கள். பிள்ளைகள் ஒருவரிடம் இருக்கும். பொதுவாக அம்மாக்களிடம். ஆண் தனியாக இருப்பான். இப்படியே அவர்கள் இளமை கடந்து முதுமைக்குள்ளும் அடியெடுத்து வைத்திருப்பார்கள்.
- ஆக, இருவரில் ஒருவர் வேறு ஒரு துணை தேடிக்கொள்ள நினைத்தாலும் விவாகரத்து வழக்கு முடியாததால் சட்டப்படி வேறு திருமணமும் செய்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். ஒருவரை நாம் வேண்டாம் என நினைக்கும்போதோ அல்லது அவர் நம்மை வேண்டாம் என நினைத்த பிறகோ நம் வாழ்வை நாம் அடுத்து எப்படி நகர்த்திச் செல்லலாம் என்று சிந்தித்துச் செயல்படுவதுதானே நமக்கு நல்லது. இன்னொருவரை வாழவிடாமல் செய்வதால் நாம் வாழ்ந்துவிடுகிறோமா என்ன?
தந்தைக்கும் உரிமை உண்டு
- எவ்வளவுதான் நெருக்கமான உறவென்றாலும், பொருள் இல்லாமல் வாழ முடியாத இவ்வுலகில், தொடக்கத்திலிருந்தே குடும்பச் செலவு போக மற்றதை அவரவர் தனக்கென எடுத்து வைப்பது நல்லது. விவாகரத்தின்போது நாம் சம்பாதித்து வாங்கிய அவ்வளவு சொத்தும் அவள்/அவன் பெயரில் இருக்கிறது. இப்பொழுது கேட்டால் எதுவும் தரமாட்டேன் என்று சொல்கிறாள்/சொல்கிறான் என்னும் புலம்பல் இருக்கத்தானே செய்கிறது? சொத்தாக இருந்தால் இருவர் பேரிலும் பணமாக இருந்தால் அவரவர் வங்கிக்கணக்கிலும் ஏன் வைத்துக்கொள்ளவதில்லை? கடைசிவரை இணைந்தே இருந்தாலும் அது நமக்கு உபயோகப்படத்தான் போகிறது. விவாகரத்து என்று வரும்போதும் அது நமக்கு உபயோகப்படும் தானே?
- அதேபோல் அம்மாக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவு என்பது தனக்கும் தன் கணவனுக்கும் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். மோசமான மனிதனாக இல்லாத ஒருவனுக்கு அப்பாவாகத் தன் பிள்ளைகள் மேல் உரிமை இருக்கிறது, அவர்களைப் பார்க்க, பேச, வெளியில் அழைத்துச் செல்ல என்று அவனுக்கும் ஆசை இருக்கும். குழந்தைகள் உறவு அவனுக்கும் அவன் உறவு குழந்தைகளுக்குமான உரிமை. கணவனைப் பற்றித் தவறாகப் பிள்ளைகளிடம் பேசி அவர்கள் அவனிடம் ஒட்டாமலே பிரித்துவிடுவதில் என்ன சுகம் காண்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
- ஆண்களிலும் சிலர் இப்படி உண்டு. தன் முன்னாள் மனைவி குறித்து குழந்தைகளிடம் மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் அப்பாக்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். இணைகிறோமோ பிரிகிறோமோ எதுவாக இருந்தாலும், அது யாரின் முடிவாக இருந்தாலும் அதை மனிதத்துடன், அறத்துடன், சுயமரியாதையுடன் அணுகுவதுதான் நமக்கும் நல்லது, பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் இருவர் மேலுமான அன்பும், மரியாதையும் குறையாமல் இருக்கும். குடும்ப வன்முறை, சகித்துக்கொள்ள முடியாத குடும்பச் சூழல் போன்ற காரணங்களால் பிரிந்த தம்பதி, நண்பர்களாகத் தொடர்வது சாத்தியமில்லை. ஆனால், விவாகரத்து பெற்ற பிறகும், தனித்தனியாக வாழ்ந்திருந்தாலும், பிள்ளைகளுக்குப் பெற்றோர்களாக, நண்பர்களாகத் தொடரும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 - 11 – 2023)