- பொது முடக்கக் காலத்தில் கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, பொது இடங்களில் கூடுதல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது தனியார் பள்ளிகள் விறுவிறுப்பாக "ஆன்லைன்' வகுப்புகளை நடத்தத் தொடங்கியிருக்கின்றன.
- எப்படி நடைபெறுகின்றன ஆன்லைன் வகுப்புகள்? கல்லூரி மாணவர்களுக்கு குறிப்பாக பொறியியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பல்வேறு வகையான செயலிகளைக் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டன. ஏதாவதொரு குறிப்பிட்ட நேரத்தில் செல்லிடப்பேசியோ, கணினி வழியாகவோ இந்த வகுப்பில் பங்கேற்கலாம்.
செல்லிடப்பேசி வகுப்புகள்
- பள்ளி மாணவர்களுக்கு பல பள்ளிகளில் செல்லிடப்பேசி செயலிகளைக் கொண்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் வீட்டிலிருந்தே பாடம் எடுப்பார்.
- மாணவர்கள் அந்த நேரத்தில் இணையம் மூலம் ஆன்லைன் வகுப்பில் இணைந்துகொள்ள வேண்டும். பாடம் முடிந்த பிறகு மாணவர்களின் கேள்வி நேரம் தொடங்கும். மற்ற நேரங்களில் மாணவர்களின் இணைப்புகளை ஓசையில்லாமல் செய்வதற்கும் செயலிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- இந்த முறையில் ஏற்கெனவே ஐ.டி. நிறுவனங்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதும், மேலை நாடுகளில் வகுப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
- இந்தப் பொது முடக்கத்தில் கலை, இலக்கிய அமைப்புகள் தங்களின் கூட்டங்களை முன்னிலும் வேகமாக - அதிகமாக இந்தச் செயலிகளைக் கொண்டு நடத்தி வருகின்றன.
- இன்னொரு எளிதான வகையாக, கட்செவி அஞ்சல் குழுக்களை உருவாக்கி மாணவர்களின் பெற்றோர் அதில் இணைக்கப்படுகிறார்கள்.
- அந்தக் குழுக்களில் தற்போது இதற்காகவே தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ள விடியோக்கள் பதிவிடப்படும். குழந்தைகள் (ஆம், பல பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் - ஜூன் மாதத்துக்கு முன்னரே!) கட்செவி அஞ்சல் குழுவில் பதிவிடப்படும் விடியோக்களைப் பார்த்து எழுத வேண்டும்.
- எழுதப்பட்ட பிரதியைப் படமாக எடுத்து அதே குழுவில் பதிவிட வேண்டும். இதற்காக புதிதாக தனி நோட்டு வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாடங்களை வாசிக்கச் செய்து அவற்றை ஒலிப்பதிவாகவும் குழுவில் பதிவிட வேண்டும். படிப்பதை விடியோவாகவும் எடுத்தும் குழுவில் பதிவிட வேண்டும்.
- அவற்றை ஆசிரியர் பார்த்து மதிப்பிடுவார். செல்லிடப்பேசிகளில் உள்ள பாராட்டுப் பூக்களும், பாராட்டு இனிப்புப் படங்களும் பின்னூட்டமாக வரும். இவையெல்லாம் "ஆன்லைன்' வகுப்புகளின் அம்சங்கள்.
பெரும் செலவுகள்
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஜூன் 15-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு வேண்டுமானால் இந்த முறை அவசியமானதாகப்படலாம். மற்றபடி ஏனைய வகுப்புகளுக்கு மே மாதமே என்ன அவசரம் என்ற கேள்வி முக்கியமானது.
- அத்துடன் சராசரியாக 40 பேரைக் கொண்ட வகுப்பு என்றால், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்களிடம் அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) இருக்கும். இயல்பாகவே சிலர், இன்னமும் சாதாரண செல்லிடப்பேசியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் புதிதாக அறிதிறன்பேசியை (ஸ்மார்ட் போன்) வாங்க வேண்டும்.
- ஆன்லைன் வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அறிதிறன்பேசி இல்லாதவர்கள், இதுவரை குழுவில் சேராதவர்களின் நிலை குறித்த எந்தத் தகவலும் இல்லை.
- ஏற்கெனவே அலுவலகப் பணிக்காக குறிப்பிட்ட அளவுள்ள இணைய வசதியை பெற்றோர் செய்திருப்பார்கள். இப்போது மாணவர்களுக்காக கூடுதல் அளவு (ஜிபி)இணைய வசதியைப் பெற வேண்டும். அதற்கான கூடுதல் கட்டணத்தையும் ஏற்க வேண்டும்.
- வசதியுள்ள குடும்பம் என்றால், மாணவர்களுக்காக தனியே ஓர் அறிதிறன்பேசியை இணைய வசதியுடன் வாங்கிக் கொடுத்தாக வேண்டும். ஆக, பொது முடக்கக் காலத்தில் "ஆன்லைன்' வகுப்பு கூடுதல் செலவையும் தந்திருக்கிறது.
- ஏற்கெனவே பல துறைகளில் ஊதிய வெட்டு, ஊதிய நிறுத்தம், வேலையிழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இவையெல்லாம் பெரும் செலவுகள்.
சரியான விதிமுறைகள் வேண்டும்
- வெறும் செலவுகளோடு நிற்பதில்லை. ஒரு நாளில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத மாணவர்களின் பெற்றோரை அடுத்த நாள் ஆசிரியர் அழைத்து விளக்கம் கேட்பார்.
- ஆன்லைன் கல்வியில் பார்வை கெட்டுப் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாணவர்களுக்கு அறிதிறன்பேசியைத் தரக் கூடாது என வழக்கமாக பள்ளிக் கூடங்களும் ஆசிரியர்களும் விதிகளை வகுப்பதன் ஒரு முக்கியக் கூறு, அதன் மூலம் ஏற்படும் பார்வைக் குறைபாடுதான்.
- அறிதிறன்பேசிகளின் தொடுதிரையில் இருந்து வெளியாகும் அதிக வண்ணமும் வேகமும் கொண்ட வெளிச்சத்தைத் தொடர்ந்து பார்ப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.
- மேலும், கூடுதலாக, ஒலி சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காக அறிதிறன்பேசிகளில் பிரத்யேக காதொலிக் கருவியையும் இணைக்க வேண்டும். எப்போதும் காதில் நேரடி இணைப்பைச் செய்து பாட்டு கேட்கும் பழக்கமும் காதுகளின் திறனைப் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தச் சிக்கல்கள் அனைத்தும் தற்போதைய "ஆன்லைன்' வகுப்பிலும் உள்ளன.
- பொது முடக்கக் காலத்திலும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்குவதன் பின்னணியில், முன்கூட்டியே கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை வசூலிக்கும் சூட்சுமம் இருப்பதும் அறியப்படுகிறது.
- ஆன்லைன் கல்விக்கான விடியோக்கள் தயாரிப்புச் செலவும் கண்டிப்பாக வழக்கமான கல்விக் கட்டணத்தில்தானே புகுந்து கொள்ளும்?
- எப்படி முறைப்படுத்தலாம்? கல்லூரிப் படிப்புகளில் குறிப்பாக பொறியியல் (கணினி சார்ந்த) படிப்புகளைப் படிப்போருக்கு ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம்.
- அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதேநேரத்தில், கலை - அறிவியல் படிப்புகளில் ஆன்லைன் வகுப்புகள் முற்றிலும் தேவையற்றதாகவே தெரிகின்றன.
- பள்ளிப் படிப்புகளில் உடனடியாக நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளுக்கான "ஆன்லைன்' சிறப்பு வகுப்புகளை மட்டும் அனுமதிக்கலாம்.
- மற்றபடி ஒன்றாம் வகுப்பில் இருந்து கட்செவி அஞ்சல் குழுக்களின் மூலம் பாடம் என்பது நிச்சயம் பெரும் துயரம்தான். தயவு தாட்சண்யமின்றி இவற்றைத் தடை செய்யலாம்.
- கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைத் தடுக்கிறேன் என்ற பெயரில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற செலவையும், சேதாரத்தையும் வலியப் போய் ஏற்க வேண்டியிருக்கும் நிலையை அரசு புரிந்துகொண்டு விதிமுறைகளை வெளியிட வேண்டும்.
நன்றி: தினமணி (09-06-2020)