TNPSC Thervupettagam
July 29 , 2024 123 days 160 0
  • பேருந்து, ரயில், விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவை இப்போது வீட்டிலிருந்தபடியே ஓரிரு நிமிஷங்களில் செய்ய முடிகிறது. மின்சாரக் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல வரிகளைச் செலுத்துவது, கல்விக் கட்டணங்களைச் செலுத்துவது, ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றைப் பெறுவது, அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வது, வங்கிப் பரிவர்த்தனைகள் போன்ற பல விஷயங்களும் தொழில்நுட்பத்தால் மிகவும் எளிதாகியுள்ளன.
  • இது ஒருபுறம் இருக்க, இணையவழி மோசடிகள் இன்னொருபுறம் அதிகரித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள இந்திய இணையவழி குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
  • நடப்பு ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் நான்கு மாதங்களில் மட்டுமே கம்போடியா, மியான்மர், லாவோ ஆகிய நாடுகளில் செயல்படும் குழுக்களால் 62,587 முதலீட்டு மோசடிகளில் ரூ.1,420 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர். இதேபோன்று, 20,043 வர்த்தக மோசடிகளில் ரூ.222 கோடியையும், விடியோ அழைப்பில் நிர்ப்பந்தப்படுத்தி மோசடி செய்த வகையில், 4,600 பேர் ரூ.120 கோடியையும், பாலியல் ரீதியான ஆசை காட்டி மோசடி செய்த வகையில் 1,725 பேர் ரூ.13 கோடியையும் இழந்துள்ளனர்.
  • மொத்தமாக, 2024-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு மோசடியாளர்களால் ரூ.7,061 கோடியை இழந்துள்ளதாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய இணையவழி குற்றப் புகார் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, மியான்மர், லாவோ போன்ற நாடுகளில் பெருநிறுவனங்கள்போல கட்டமைப்புகளை நிறுவி மோசடியாளர்கள் இதையே தொழிலாக செய்துவருகின்றனர். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள், இளம்பெண்களை இந்த மோசடியாளர்கள் குறிவைக்கின்றனர்.
  • இந்தியாவில் உள்ள அவர்களது போலி ஏஜெண்டுகள், வெளிநாட்டில் நல்ல வேலை, அதிக ஊதியம் என்று சொல்லி படித்த இளைஞர்களை ஏமாற்றி அவர்களைப் பல்வேறு நாடுகள் வழியாக கம்போடியா, மியான்மருக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு சித்திரவதை செய்து மிரட்டி சட்ட விரோத இணையவழி மோசடி செயல்களில் ஈடுபட வைக்கின்றனர்.
  • தமிழகம், தில்லி, ஆந்திரம், ஒடிஸாஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற மோசடியில் அதிகம் சிக்கியுள்ளனர். மத்திய அரசின் முயற்சியால் கம்போடியா, மியான்மரில் இருந்து 360 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
  • நம் நாட்டிலும் பலர் இணையவழி மோசடியில் ஈடுபடுகின்றனர். கோவையைச் சேர்ந்த முதியவரை கைப்பேசி எண்ணில் அழைத்து, மும்பை பாந்த்ரா காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும் அவரது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் இருந்து தப்பிக்க அபராதத் தொகையைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லி மிரட்டி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கும்பல் ரூ.67 லட்சத்தைப் பறித்துள்ளது.
  • பார்சலில் போதைப் பொருள் அனுப்பியதாக கோவை இளைஞரைக் கைப்பேசியில் அழைத்து மிரட்டி வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ஆதார் எண், வங்கி விவரங்களைப் பெற்று ரூ.8 லட்சத்தை மோசடிக் கும்பல் சுரண்டி உள்ளது.
  • குறைந்த வட்டியில் அதிக கடன் தருவதாகவும், அதிக பலன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டம் வழங்குவதாகவும் புது தில்லி அருகே உள்ள நொய்டாவில் இயங்கிய நிறுவனம், இதற்கென தனியே ’அழைப்பு மையங்கள்' (கால் சென்டர்) அமைத்து இளம்பெண்களைப் பணியில் அமர்த்தி வாடிக்கையாளர்களிடம் பேசவைத்து ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது.
  • திருமண தகவல் மையங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களைக் குறிவைக்கும் ஒரு கும்பல், பெண்கள்போல பேசி சமூக வலைதளங்களில் நட்பு வளர்த்து, உருக்கமாகப் பேசி, கஷ்டப்படுவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர். ஒருகட்டத்தில் இணைப்பு துண்டிக்கப்படும்போதுதான் இளைஞர்களுக்குத் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிகிறது.
  • இணையதள "லிங்க்'கில் கொடுக்கப்படும் சிறிய பணிகளைச் செய்தால் அதிக பணம் பெறலாம் என ஈர்த்து, பின்னர் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறி ஏமாற்றுவது, அரசு, தனியார் நிறுவன அதிகாரிகள் பெயரில் போலி சமூக வலைதள கணக்குகள் உருவாக்கி அவசரத்துக்குப் பணம் தேவை என அடுத்த நிலை ஊழியர்களிடம் கோருவது (பாஸ் ஸ்கேம்) போன்ற மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
  • இதுபோன்ற மோசடிகளுக்கு காரணம் பேராசையும், அறியாமையும்தான். அதிகம் உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதுபோன்ற மோசடி வலையில் சிக்குகிறார்கள். குடும்ப வறுமை காரணமாக பணம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அறியாமையால் சிக்கிக் கொள்கின்றனர்.
  • பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் உடனடியாகப் புகார் அளித்தால் பணத்தை மீட்க ஓரளவு வாய்ப்பு உண்டு என்று காவல் துறையினர் கூறுகின்றனர். இணையதளத்தில் நமக்குத் தெரியாத, நம்பகத்தன்மை இல்லாத இணைப்புகளுக்குள் (லிங்க்) நுழையக் கூடாது. நமது வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களைத் தெரிவிக்கக் கூடாது. "அறிவு அற்றம் காக்கும் கருவி' என்பது உண்மை. இணையதளம் உலகத்தை விரல் நுனிக்குள் கொண்டுவந்திருக்கிறது என்பது உண்மை; கூடவே மோசடிகளையும்...!

நன்றி: தினமணி (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்