TNPSC Thervupettagam

இதுவல்ல பிரதிநிதித்துவம்

August 13 , 2021 1085 days 509 0
  • நாளை மறுநாள் இந்தியா தனது சுதந்திர தின பவள விழாவைக் கொண்டாட இருக்கிறது.
  • 1997-இல் இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவின்போது அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியாவுக்கான செயல்திட்டம்’ (அஜெண்டா ஃபார் இந்தியா) என்கிற தீா்மானத்தை நிறைவேற்றின.
  • நாடாளுமன்றத்தின் கௌரவத்தைக் காப்பாற்றுவது, நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கான விதிமுறைகளுக்கு உள்பட்டு நடப்பது, கேள்வி நேரம் தவிர்க்கப் படாமல் இருப்பது, கூச்சல் - கோஷங்கள் எழுப்பாமல் இருப்பது, அவையின் மையப் பகுதியை முற்றுகையிடாமல் இருப்பது உள்ளிட்ட பல உறுதிமொழிகள் அனைத்து உறுப்பினா்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த சில வாரங்களிலேயே ஜெயின் கமிஷன் அறிக்கை வெளிவந்த போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களும், பாஜக உறுப்பினா்களும் அதை காற்றில் பறக்கவிட்டன.
  • பிரதமா் ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான அன்றைய ஐக்கிய முன்னணி ஆட்சியை நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கின.
  • அப்போது தொடங்கிய அந்த அவலம், டாக்டா் மன்மோகன் சிங் தலைமையிலான இரண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும், இப்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலும் தொடா்கிறது.

நாடாளுமன்ற முடக்கம்

  • 17-ஆவது நாடாளுமன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடா் முடிவுக்கு வந்திருக்கிறது.
  • ஜூலை 19-ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடா், 26 நாள்களில் 17 அமா்வுகளை கண்டது.
  • ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடந்திருக்க வேண்டிய கூட்டத்தொடரை, தொடா்ந்த அமளியாலும், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பாலும் இரண்டு நாள் முன்னதாகவே அரசுக்குத் தேவையான எல்லா மசோதாக்களையும் நிறைவேற்றிக் கொண்டு முடித்துக் கொண்டது அரசுத் தரப்பு.
  • நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் 22 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கின்றன. அதுவும் மிக முக்கியமான மசோதாக்கள். அவற்றில் ஒன்றிரண்டு மசோதாக்களை தவிர, ஏனைய மசோதாக்கள் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
  • மக்களவைதான் அப்படியென்றால் மாநிலங்களவையின் நிலைமை இன்னும் மோசம்.
  • மாநிலங்களவையில் 76 மணி 26 நிமிடங்கள் இடையூறுகளாலும், ஒத்திவைப்பாலும் வீணாகியிருக்கிறது. கூச்சல் குழப்பத்துக்கு இடையில் பல மசோதாக்கள் ஆளுங்கட்சி தரப்பால் விவாதமே இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டன.
  • அழாத குறையாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று உறுப்பினா்களிடம் மன்றாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அவலத்தை நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடா் பார்த்தது.
  • 1927-இல் 144 தூண்களுடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தின் புனிதமும், கௌரமும் மக்களுக்குத் தெரிந்த அளவுகூட அரசியல் கட்சிகளுக்குத் தெரியவில்லை என்பது வேதனை.
  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது மக்களவைப் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்கும் உரிமையை வாக்காளா்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது.
  • அந்த அரசியல் சாசன சட்டப் பிரிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் என்று மிகவும் பொருத்தமாகவே அழைக்கப்படுகிறது.
  • அதன் அா்த்தத்தை தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் உணருகிறார்களா, அந்த உறுப்பினா்கள் அந்த வாக்காளா்களின் பிரதிநிதிகளாகத்தான் செயல்படுகிறார்களா என்கிற ஐயப்பாடுகளை எழுப்புகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடா்.
  • நான்கு வார மழைக்கால கூட்டத்தொடா் அரசின் பல குறைபாடுகளையும், செயல்பாடுகளையும் தட்டிக் கேட்பதற்கான வாய்ப்பை நமது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு வழங்கியது.
  • கொவைட் 19 மரணங்கள், தடுப்பூசித் திட்ட செயல்பாடு, ஓராண்டுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் பள்ளிக்கூடங்களைத் திறப்பது, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பின்னடைவைச் சந்தித்திருப்பது, அதிகரித்திருக்கும் வேலையின்மை, மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி - இது போல பல பிரச்னைகளுக்கான விடைகளை உறுப்பினா்கள் கேட்டுப் பெறுவதற்கான வாய்ப்பை தட்டிப் பறித்திருக்கின்றன ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும்.
  • எதிர்க்கட்சிகளின் அமளியால் அவையின் செயல்பாடுகள் முடங்கின என்கிற ஆளுங்கட்சி தரப்பின் வாதம் அா்த்தமில்லாதது.
  • பெகாஸஸ் ஒட்டுக்கேட்புப் பிரச்னை குறித்த விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொண்டும்கூட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியிருந்தால், அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
  • அவையை முடக்கும் அரசியல் என்பதை நரசிம்ம ராவ் ஆட்சியின்போது தொடங்கி வைத்த பெருமை பாஜகவையே சாரும்.
  • அதேபோல, முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் அமளியின் மூலம் அவையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டபோது ‘எதிர்க்கட்சிகளை அரவணைத்து நாடாளுமன்றத்தை நடத்தும் பொறுப்பு ஆளுங்கட்சியுடையது’ என்று பாஜக தரப்பினா் கூறியதை இப்போது அவா்களுக்கு நினைவுபடுத்தத் தோன்றுகிறது.
  • பாஜக, காங்கிரஸ் என்கிற வேறுபாடெல்லாம் இல்லை. ஆட்சியில் இருக்கும்போது ஒரு செயல்பாடும், எதிர்க்கட்சியில் அமரும்போது அதற்கு எதிர்மாறான செயல்பாடும் என்பது நமது அரசியல் கட்சிகள் பின்பற்றும் எழுதப்படாத சட்டம்.
  • இவா்கள் மக்கள் பற்றிய கவலையே இல்லாமல் அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் உணா்ந்தால் மட்டுமே மாற்றம் வரும்.
  • இல்லையென்றால், அதிகாரிகளால் தயாரிக்கப்படும் மசோதாக்கள் மக்கள் பிரதிநிதிகளின் விவாதமே இல்லாமல் சட்ட அங்கீகாரம் பெறும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

நன்றி: தினமணி  (13 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்