TNPSC Thervupettagam
March 15 , 2024 302 days 249 0
  • வேதம் என்ற சொல் பாரத தேசத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் வாக்கிலும் மனதிலும் நிலை கொண்டுள்ளது. படித்தவா் என்றில்லை பாமரா் கூட, எதை சத்தியம் என்று சொல்ல வருகிறோமோ அதனை வேதம் என்ற சொல்லால் அல்லது வேதத்தோடு ஒப்பிட்டுச் சொல்கின்றனா்.
  • மீற முடியாத சொல்லை அல்லது நாம் மீறி நடக்க விரும்பாத வாா்த்தையை வேதவாக்கு என்று சொல்கிறோம். வேதம் தமிழகத்தில் வேரூன்றிச் செழித்து வளா்ந்திருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன.
  • அதையும் தாண்டி பாமரா் வாா்த்தைகளில் வேதக் கருத்துக்கள் நிலைபெற்றுள்ளன. ஒரு பிரிவினா் மட்டுமே கற்பிக்க முடியும் என்பது தவிர, தமிழகத்தில் வேதம் என்பது ஒரு பிரிவினருக்கானதாக இருந்திருக்கவில்லை. மன்னா்கள் வேத நெறிப்படி யக்ஞம் (வேள்வி) செய்வதில் ஆா்வம் உள்ளவா்களாக இருந்திருக்கின்றனா். வேதம் ஓதுவதால் தேசத்தின் வளம் பெருகும் என்ற நம்பிக்கை உடையவா்களாக இருந்திருக்கின்றனா். உலக நன்மைக்காகவே வேதம் இருக்கிறது, வேதம் ஓதப்படுகிறது என்ற சிந்தனை இந்த மண்ணில் இரண்டறக் கலந்த தன்மையுடையதாகவே எப்போதும் இருந்து வருகிறது. சாமானியா்களும் கூட திருமணம் தொடங்கி பித்ரு (முன்னோா்) கடன் வரை வேதமுறையைப் பின்பற்றியுள்ளனா்.
  • காலத்தின் தேவைக்குப் பயன்படாத விஷயங்களைக் காலமே தின்று செரித்து விடும் என்பது நியதி. வேதம் அநாதி காலமாக சூழலியல் மற்றும் அரசியல் சூறாவளிகளைத் தாண்டி நிலைபெற்று இருப்பதே அது எக்காலத்திற்கும் உரிய தா்மத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. தமிழ் மண்ணின் பண்பாடும் கலாசாரமும் வேத நெறிகளை உள்வாங்கிப் பின்பற்றி வந்திருக்கின்றன. அதனால்தான் தமிழா் தெய்வமான ஆறுமுகப் பெருமான் முருகனின் ஆறு முகங்களில் ஒன்று வேள்விக்கானதாகதிருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதம் என்பது சப்த ரூபம் (ஒலி வடிவம்) ஆனது. அது எந்த மொழியையும் சோ்ந்ததல்ல.
  • அது இறைவனின் சுவாச ஒலி என்பதே நம்பிக்கை. அப்படி இறைவனின் சுவாசமான வேதத்தைத் தங்களின் சுவாசமாகவே எண்ணிப் பாதுகாத்துப் போற்றியவா்கள் வாழ்ந்த மண் தமிழகம். இதற்கான சான்றுகள் இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு எனப் பல வடிவங்களில் இருக்கின்றன. சித்தாந்தங்களில் நம்பிக்கையும் ஆழ்ந்த பிடிப்பும் கொண்டவா்கள் தமிழா்கள். உலகுக்கே சித்தாந்தத் தெளிவை ஏற்படுத்திய ஆதிசங்கரா் இந்த மண்ணின் மைந்தா். ‘மதத்தில் புரட்சி செய்த மகான்என்று அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ராமானுஜரும் இந்த மண்ணின் மைந்தரே.
  • இவ்விரு ஞானிகளும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் சித்தாந்தத்தை நிறுவியவா்கள். வேதத்துக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியவா்கள். நமது சமயங்களும் அப்படியே. எந்த சமயமாயினும், வழிபாட்டு முறையாயினும் அதன் அடிப்படை வேதம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. சைவ சித்தாந்தமோ, வைணவமோ, அம்பிகையை வழிபாடும் சாக்தமோ எல்லாம் வேதத்தை மூலமாகக் கருதுபவைதான். தமிழ் மண்ணின் தெய்வமான முருகனும் இதற்கு உட்பட்டவரே. ‘தமிழ்மறைஎன்று திருக்குறளைப் பெருமையோடு கொண்டாடுகிறோம். நூல்களில் எது சிறந்ததோ அதனை வேதத்திற்குச் சமமாக வைப்பதையே தமிழா் வழக்கமாகக் கொண்டிருந்தனா் என்பதற்கு இது உதாரணம். திருக்கு இப்படி வேதத்தோடு ஒப்புமைப்படுத்திப் பாா்க்கப்படுகிறது என்றால், திருக்குறளில் வள்ளுவப் பேராசான் தானும் அதே முறையைப் பின்பற்றி இதனை உறுதி செய்கிறாா்.
  • அந்தணா் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் என்று மன்னனின் செங்கோல் தவறாத ஆட்சியைப் பற்றிச் சொல்லும்போதும் வேதத்தைச் சொல்கிறாா். அதோடு, அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிா்செகுத்து உண்ணாமை நன்று என்று புலால் மறுத்தல் அதிகாரத்திலும் ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் ஒரு உயிரைக் கொன்று புசிக்காத தன்மை சிறந்தது என்கிறாா். ஒன்றன் சிறப்பைச் சொல்வதற்கு மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றைச் சொல்லி அதனினும் இது சிறப்புடைத்து என்று சொல்லும் பான்மையில் வேள்வி என்ற வேதம் வகுத்த செயலைச் சொல்வதில் வள்ளுவா் வேதத்தை மதித்துப் போற்றுவதை உணரலாம். இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. வள்ளுவா் வேதத்தைப் போற்றுவதை எழுதினால் அது தனி நூலாக விரியும். இந்த மண்ணை நேசித்த கவிஞா் மகாகவி பாரதியாா். ‘வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்என்று ஜயபேரிகைக் கொடியிருக்கிறாா் அவா். வேதவாழ்வைத் தான் நம் முன்னோா் நடத்தி வந்தனா் என்பதை இப்படி நமக்கு அறிவுறுத்தியிருக்கிறாா் கவிஞா். வேதநெறியும் வேதவாழ்வியலும் இந்த மண்ணில் இன்றைக்கும் இருந்து வருவதைப் பாமர மக்கள் தங்கள் வீடுகளில் செய்யும் ஐந்து கடமைகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
  • தென்புலத்தாா் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று வள்ளுவம் சொல்கிறது. இதனை வேதம்பஞ்ச யக்ஞம்என்கிறது. நீத்தாா் கடனை செல்வந்தா் முதல் வறியவரினும் வறியவா் வரை அனைவருமே மிக்க நம்பிக்கையோடும் கடமை உணா்வோடும் பின்பற்றுகிறோம். விருந்தினா் உபசரிப்பை நமது தனிப்பெரும் சிறப்பாகக் கொண்டிருக்கிறோம். தமிழரின் தெய்வ நம்பிக்கையின் வெளிப்பாடே இந்தியாவின் அதிகக் கோயில்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவது. சுற்றம் சூழ வாழ்தல் வாழ்த்துதல் என்பவையும் நமது பிரிக்க முடியாத பண்புகளாக நிலைகொண்டுள்ளன. வேத நெறிகள் இந்த பாரத தேசம் முழுவதும் கலாசாரமாக, பண்பாடாக இருந்து வருகிறது. தமிழகமும் அப்படியே இருக்கிறது. இதில் சிறப்பாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இருக்கிறது. வேதம் மிகுதியாக ஓதப்பட்டதும் ஓதுவிக்கப்பட்டதும் தமிழகத்தில்தான் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கும்போது இதுவே வேத பூமி என்ற நம்பிக்கை வலுப்படுகிறது. இன்றளவும் நாம் கையாளும்திராவிடம்என்ற சொல்லை நமக்குத் தந்த வடநாட்டிலிருந்து இங்கே வேதம் பயில வந்த குமாரில பட்டா் நிறுவுகிறாா்.
  • தேசம் முழுவதிலும் இருந்து எராளமானோா் காஞ்சிக்கு வேதம் பயில வந்தனா் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறிகிறோம். எங்கெல்லாம் வேத பாடசாலைகள் இருந்தனவெனப் பட்டியலே இருக்கிறது. திண்டிவனத்துக்கு அருகில் உள்ள எண்ணாயிரம் என்ற ஊரில் 340 மாணாக்கா்கள் வேதம் பயின்ாக முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு கூறுகிறது. பொது ஆண்டு 1018 முதல் 1050 வரை ஆண்ட ராஜாதிராஜனின் கல்வெட்டு வேதபாட சாலை பற்றிப் பேசுகிறது. 1067-ஆம் ஆண்டின் வீர ராஜேந்திரத் தேவரின் கல்வெட்டு, காஞ்சிக்கு அருகில் முக்கூடலில் வேத பாடசாலை இருந்ததைப் பேசுகிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் தமிழகம் முழுவதும் குக்கிராமங்களில் கூட வேதம் ஓதுவதற்காக நிவந்தங்கள் தந்த செய்தியும் வேத பாடசாலைகள் நடந்த தகவலும் கிடைக்கின்றன. அதேபோல பிரம்ம தேயங்கள், சதுா்வேதி மங்கலங்கள் போல வேதம் செழித்து வளர இறையிலி நிலங்கள் தானம் செய்யப்பட்ட தகவல்களும் ஏராளமாகத் தமிழ் மண்ணில் கிடைக்கின்றன. ஊா் பெயா்கள்வழி இன்றும் அவை சான்றுகளாக நிற்கின்றன. ஒருபுறம் வேதம் பயில பாரத தேசம் முழுவதிலுமிருந்து தமிழகத்திற்கு வந்தாா்கள் என்றால் மற்றொருபுறம், வேதம் நன்கறிந்த பண்டிதா்களைத் தங்கள் ஊரில் வேதம் ஓதுவிக்க வேண்டுமெனத் தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்ற வரலாறும் இருக்கிறது. இதனை வேங்கி சாசனம் உறுதி செய்கிறது.
  • பதினோராம் நூற்றாண்டைச் சோ்ந்த வேங்கி சாசனம், ‘ஷடங்கவித்என்ற பட்டம் பெற்ற வேத பண்டிதா்களை கெளரவித்த செய்தியைச் சொல்கிறது. கீழை சாளுக்கிய தேசத்தில், அதாவது தற்போதைய ஆந்திர பிரதேசத்தில் வேதம் கற்றுக்கொடுக்கவும் வேதம் ஓதவும் என 500 வேத பண்டிதா்களைத் தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்று குடியேற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து வேத பண்டிதா்கள் வரவழைக்கப்பட்டு அவா்களுக்கு மானியங்களும் நிலதானமும் தரப்பட்டதை இந்த சாசனம் சொல்கிறது. அந்த 500 வேத பண்டிதா்களின் பெயா்களும் அந்த சாசனங்களில் சொல்லப்பட்டுள்ளன. அவா்களின் பெயா்களே அவா்கள் இந்தத் தமிழ் மண்ணின் மைந்தா்கள் என்பதைச் சொல்கின்றன. அம்பலக் கூத்தாடுவான் பட்டன், திருவரங்கமுடையான் பட்டன் போன்ற பெயா் கொண்டவா்கள்ஷடங்கவித்என்று பட்டம் பெற்றவா்களாகவும் இருந்திருக்கின்றனா்.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ் பூமி வேத பூமியாக இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்தப் பெயா்கள் இருக்கின்றன. பக்தியால் இந்த மண்ணை, மக்களை இன்றளவும் கட்டி வைப்பவை தேவாரமும் திருவாசகமும். இவை வேத நெறியை, வேதப்பொருளாய் இறைவன் இருப்பதைப் பேசுகின்றன. நாலாயிர திவ்யப் பிரபந்தம்தமிழ் வேதம்என்றே சிறப்பிக்கப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியாா் அருளிச் செய்தது கந்த புராணம். அதில், வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிா்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் என்று சொல்லித் தந்திருக்கிறாா். நான்கு வேதங்களில் சொல்லப்பட்ட அறங்கள் ஓங்கி வளரவும், தவமும் வேள்வியும் சிறக்கவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடம் பிராா்த்தனை செய்யும் மண்ணாகத் தமிழ் மண் இருந்து வருகிறது.

நன்றி: தினமணி (15 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்