TNPSC Thervupettagam

இது ஆடையுலகின் கறுப்புப் பக்கம்!

December 15 , 2020 1497 days 806 0
  • இந்த ஆண்டு உலகம் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது: கரோனா பெருந்தொற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பேரழிவும்தான் அந்த சவால்கள்.
  • மிகக் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக்கொண்டு, மிகக் குறைவான சமூகப் பாதுகாப்புகளைக் கொண்டிருந்த, பொருளாதாரரீதியில் பலவீனமானவர்களுக்குப் பெரும் பாதிப்பை இந்த இரண்டுமே ஏற்படுத்தியிருக்கின்றன.
  • அவர்களின் நிலை நவநாகரிகப் பொருட்கள் துறை உள்பட, உலகமயமான உலகின் பல்வேறு மூலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சமத்துவமின்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
  • பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் நவநாகரிகப் பொருட்களின் தயாரிப்பு உலகம் எந்த அளவுக்குக் குறைந்த ஊதியம் வழங்கிச் செய்யப்படும் உழைப்புச் சுரண்டலைச் சார்ந்திருக்கிறது என்பதை நமக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. இந்தப் பெருந்தொற்றின் விளைவாக 15 கோடி மக்கள் 2021-ன் இறுதிக்குள் மிக மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்திருப்பதால் இந்தப் பிரச்சினையை நாம் புறக்கணிக்க முடியாது.
  • கரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்துப் பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டு உலகமே ஸ்தம்பித்துப்போனபோது அதனால் மிகுந்த துயரத்தை அனுபவித்தவர்கள் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றும் ஆடைத் தயாரிப்புத் தொழிலாளர்களே.
  • ஆடைத் தொழிலின் விநியோகச் சங்கிலிகள் அறுபட்டு, வர வேண்டிய நிலுவைகள் நின்றுபோய், கேட்புகளும் ரத்தானதால் வியட்நாம், கம்போடியா, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளின் தொழிற்சாலை முதலாளிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
  • தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஊதியம் ஏதும் அளிக்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர், உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு நடுவே அவர்கள் நிராதரவாக விடப்பட்டனர்.
  • கரோனா பெருந்தொற்றின் தாண்டவம் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள உய்கர் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு நவநாகரிகப் பொருட்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் துணைபோனதை மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனர்.
  • சீனாவின் மிகப் பெரிய முஸ்லிம் சிறுபான்மை இனக்குழுவான உய்கர் முஸ்லிம்கள் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர்.
  • கிட்டத்தட்ட 10 லட்சம் முஸ்லிம்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களுடைய மரபான வாழ்க்கை முறையை உதறித் தள்ளிவிட்டு கட்டாயக் கடும் உழைப்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
  • ஆஸ்திரேலியன் ஸ்ட்ரேட்டஜிக் பாலிஸி இன்ஸ்டிடியூட்டின் தரவின்படி2017-லிருந்து 2019 வரை குறைந்தபட்சம் 80 ஆயிரம் உய்கர் முஸ்லிம்கள் ஜின்ஜியாங்கிலிருந்து சீனா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
  • அங்கே அவர்கள் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாத வகையில் சிறைவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டனர்.
  • சீன அரசு நடத்தும் செய்தி ஊடகத்தின்படி அந்த நாடு பெருந்தொற்றை எதிர்கொண்ட 2020-லும் இது தொடர்ந்திருக்கிறது. ஜூலை மாதம், ‘உய்கர்களின் கட்டாய உழைப்பை முடிவுக்குக் கொண்டுவருகஎன்ற பெயரிலான சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பானது ஒரு பட்டியலை வெளியிட்டது.
  • ஜின்ஜியாங் மாநிலத்திலிருந்து பெறப்பட்ட கட்டாய உழைப்பைக் கொண்டு தங்கள் தயாரிப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தாத ஆடை நிறுவனங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. (சீனாவின் 85% பருத்தி ஜின்ஜியாங் மாநிலத்திலிருந்து வருகிறது, இது உலக அளவில் 20% ஆகும்).
  • சிரமத்துக்கு ஆளானது ஆசியாவில் உள்ள ஆடைத் தயாரிப்புத் தொழிலாளர்கள் மட்டும் இல்லை.
  • பிரிட்டனில் பிரபல அதிநவீன ஆடை நிறுவனமான பூஹூவுக்காக லெஸ்டரில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் தொழிலாளர்களுக்கு இந்திய மதிப்பில் மணிக்கு ரூ. 342.80 என்ற அளவில் ஊதியம் கொடுத்திருக்கிறார்கள்.
  • (பிரிட்டனில் 25 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு மணிக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் இந்திய மதிப்பில் ரூ. 854.06).
  • பெருந்தொற்றுக் காலத்தில் லெஸ்டரில் ஆடைத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் பலவும் திறந்திருந்தன எனவும், அங்கெல்லாம் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனவும், கரோனா இருப்பதாகப் பரிசோதனையில் தெரியவந்த தொழிலாளர்கள்கூட வேலைக்கு வரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் எனவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் லேபர் பிஹைண்டு தி லேபிள்என்ற தொண்டுநிறுவனம் கூறுகிறது.

வாய்ஸஸ் சந்திப்பு

  • குறைந்த வருவாய் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் பணக்காரர்களை விட கரோனா பெருந்தொற்றால் இறப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
  • அமெரிக்காவில் பெருந்தொற்று ஏற்படுத்திய மோசமான பொருளாதாரப் பின்விளைவுகள் குறைந்த வருவாய் பெறுவோருக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தின.
  • 2016-ல் தி பிஸினஸ் ஆஃப் ஃபேஷன்அமைப்பு ஆடை நிறுவனங்கள், ஒப்பனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பாகிய வாய்ஸஸ்என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
  • அதில் நவநாகரிகப் போக்கைக் கணிக்கும் வல்லுநரான லி எடெல்கூர்ட் ஒரு கேள்வியைக் கேட்டார்: ஒரு சாண்ட்விச்சை விட ஒரு ஆடை எப்படி குறைந்த விலையில் கிடைக்கிறது? வயலில் விதை விதைத்து, அறுவடை செய்து, பஞ்சைப் பிரித்தெடுத்து, நூல் நூற்று, அதனைத் துணியாகப் பின்னி, வெட்டி, தைத்து, முழுமையடையச் செய்து, அச்சிட்டு, லேபிள் ஒட்டி, பொதிந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பப்படும் ஒரு பொருள் எப்படி ஒருசில யூரோக்களுக்கு கிடைக்கிறது?”
  • இந்தக் கேள்வி அப்போதிருந்து என்னைக் குடைந்துகொண்டிருக்கிறது.
  • தங்கள் லாபத்தை அதிகரிப்பதற்காக ஆடை, ஒப்பனைப் பொருட்கள் துறையானது வெகுநாட்களாகவே தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான அளவுக்கும் குறைவாகவே ஊதியம் வழங்கிவருகிறது.
  • இந்த வணிக மாதிரி, அதாவது மலை மலையாய் ஆடைகளை இயல்பாகவே கட்டுப்படியாகாத விலைகளுக்கு விற்பதைக் குறிவைத்துச் செயல்படும் இந்த வணிக மாதிரி, அந்த ஆடைகளை உருவாக்கும் தொழிலாளர்களுக்கோ பதிலுக்கு மிக மிகக் குறைவாகவே ஊதியம் தந்துவந்திருக்கிறது.
  • வங்கதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள், 40 லட்சம் ஆடைத் தயாரிப்புத் தொழிலாளர்களின் தாயகம் அது.
  • அவர்களில் பெரும்பாலானோர் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்: மாதத்துக்குக் கிட்டத்தட்ட ரூ. 7,000. அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு இதைவிட இரண்டு மடங்கு ஊதியம் தேவைப்படுகிறது.
  • சொகுசானவர்கள் வாங்கும் தயாரிப்புகளான டியோர், செந்த் லொரான் போன்றவை குறைந்த செலவில் நுட்பமான பூவேலைப்பாடுகளுக்காகவும் மெருகூட்டுவதற்காகவும் இந்தியாவில் உள்ள துணைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளையே பெரிதும் நாடுகிறார்கள்.
  • அந்த வேலைகளைச் செய்வதற்குப் பணிக்கப்படும் திறமைமிக்க கைவினைஞர்கள் தங்களின் வேலைக்கு மிகக் குறைந்த அங்கீகாரமும் ஊதியமுமே பெறுகின்றனர்.
  • தங்கள் பொருட்களை இப்படித் துணைத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெறும் சில நிறுவனங்கள் நிறைவுப் பணிக்காக ஐரோப்பாவுக்கு எடுத்துச்சென்று அவற்றில் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதுஅல்லது பிரான்ஸில் தயாரிக்கப்பட்டதுஎன்று மோசடியாக அடையாளமிடுகிறார்கள்.
  • பெருந்தொற்று இந்தத் துறையில் வருமானத்தில் கணிசமான சரிவுக்கு இட்டுச்சென்றிருக்கிறது, சில்லறை விற்பனையாளர்கள் அலையலையாய் திவால் அறிவிப்பு செய்துவருகிறார்கள், நுகர்வோரிடையே நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

நன்றி: தி இந்து (15-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்