- வரலாற்றுக் காலந்தொட்டு, ஆங்கிலேயர் காலம் வரையும் கல்வி என்பது அவரவர் சொந்தப் பொறுப்பாகவே இருந்தது. ஆங்கிலேயர் காலம் வரையும் அரசன் என்னும் சமூகத் தலைமையும் பிறப்பின் அடிப்படையில் பரம்பரை உரிமையாயிற்று. சமூக ஒருங்கிணைப்புக்குத் தேவைப்படும் நிருவாகிகள் என்போர் அரசனின் விருப்பத்திற்கு உரியோராக அமைந்தனர்.
- இந்த நிலையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வியாபாரத்திற்கென இந்தியா வந்த ஆங்கிலேயர் இந்தியாவின் பெரும் பகுதிக்கு ஆட்சியாளர் ஆனநிலையில், சமூக அமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். அதாவது, சமூக இணைப்பாகும் நிருவாகம் என்பதை ஆள்வோரின் விருப்பத்திலிருந்து மாற்றி, கல்வி என்பதன் அடிப்படையில் அமைக்க முற்பட்டனர். மன்னராட்சி என்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பின் வழியாகவும், அந்த அமைப்பின் செயற்பாட்டைக் கல்வியின் அடிப்படையில், அரசு அலுவலர் என்போர் வழியாகவும் செயற்படுத்த முற்பட்டனர்.
- அதாவது, நாடெங்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்க்குமான அரசுக் கல்வி நிலையங்களை நிறுவி, அதன்வழிக் கல்விகற்றவர்களை அரசு நிருவாகிகளாக்கி அவர்களின்வழிச் சமூக ஒருங்கிணைப்பு செயற்பட வழி வகுத்தனர். அதன்விளைவாக அதுவரையில்லாத "அரசு அலுவலர்' என்றொரு புதிய வருக்கம் உருவாயிற்று.
- இதன் காரணமாக இந்திய சமூகத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.அதாவது இந்திய சமூக அமைப்பு, உலகில் வேறெங்கும் காணமாட்டாத வகையில் உருவாகியிருந்தது. அதாவது, சமூகத்திற்குத் தேவையான தொழில்கள் என்பன அவரவர் விருப்பத்திற்கு என்றில்லாமல், பரம்பரை அடிப்படையில் அமைந்தன. அன்றியும், மக்களில் மேலோர், கீழோர் என்பது குணநலன்களை அடிப்படையாகக் கொள்ளாது, செய்யும் தொழில்களின் அடிப்படையில் அமைந்தன. அதுவே வருணாசிரமம் எனவும் சனாதன தர்மம் எனவும் கொள்ளப்பட்டது.
- இந்தநிலையில் ஆங்கிலேயர் புகுத்திய அனைவர்க்குமான பொதுக்கல்வி, அதனடிப்படையில் அரசு அலுவலர், அவர்களின்வழி ஆட்சிமுறைமை என்றாகி இந்தியாவின் பரம்பரை அடிப்படையிலான தொழில், அதன் அடிப்படையில் சமூக மதிப்பு என்பது மாறி, கல்வித்தகுதி, அதனடிப்படையில் சமூக மதிப்பு என்னும் நிலை உருவாயிற்று. அதன் காரணமாக, சமூகத்தின் கீழ்சாதியில் பிறந்தவன், அரசுக் கல்வி நிலையங்களில் கல்விகற்று, அரசு அலுவலராகி அதன்வழிச் சமூகத்தின், வழிமரபான மேல்சாதியார்மீது அதிகாரம் செலுத்தும் நிலையேற்பட்டது.
- ஆனாலும் ஆங்கிலேயர் ஏற்படுத்திய கல்விமுறையை, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரே அளவில் பயன்படுத்த இயலாதநிலை. அதாவது, சமூகத்தில் பரம்பரைக் கல்வியறிவு உடையோர் அளவுக்குப் பரம்பரைக் கல்வியறிவற்ற, பிற வகுப்பினரால் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. அந்த நிலையில்தான் கீழ்வகுப்புக்களைச் சேர்ந்த சிலர் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். அதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம். அதாவது கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவல் வாய்ப்பிலும், சமூகத்தின் ஏற்றத்தாழ்வான பிரிவு மக்கள் தொகைக்கேற்ப, கல்வி வாய்ப்பையும், அரசு அலுவல் வாய்ப்பையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையாயிற்று.
- 1928-இல் அன்றைய சென்னை மாகாணத்தின் நீதிக்கட்சி அரசு ஒவ்வொரு பன்னிரண்டு இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாதார் 5, முஸ்லிம் 2, ஆங்கிலோ இந்தியக் கிறிஸ்துவர்/கிறிஸ்துவர் 2, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 1 எனத்திட்டமான ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தினர்.1947-இல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒவ்வொரு பதினான்கு இடங்களும், பார்ப்பனர் 2, பார்ப்பனரல்லாத ஹிந்து 6, பிற்படுத்தப்பட்ட ஹிந்து 2, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 2, ஆங்கிலோ இந்திய கிறிஸ்தவர்/இந்திய கிறிஸ்தவர் 1, முஸ்லிம் 1 என மாற்றியமைக்கப்பட்டது.
- இந்த நிலையில் 1950-இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தில் பதினைந்தாவது பிரிவு முதலாவது உட்பிரிவு சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணமாகக் கொண்டு, குடிமகன் எவருக்கும் எதிராக அரசு வேற்றுமை பாராட்டுதல் ஆகாது என அமைந்தது. சட்டம் நடைமுறைக்கு வந்த 1950-இல், அரசியல் சட்ட வரைவுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி என்பவர், உயர்சாதி மாணவியொருவர் சார்பில் புதிய அரசியல் சட்டப்படி பிரிவுகள் 15(1),29(2) படி, சாதிவாரி இடவொதுக்கீடு செல்லாது என வழக்குத் தொடுத்தார்.
- நீதிபதியும், புதிய அரசியல் சட்டப்படி, வகுப்புவாரி இட ஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தார். தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டு முடிவதற்குள்ளாக மேற்படி பதினைந்தாவது பிரிவு நான்காவது உட்பிரிவாக சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பிற்பட்ட வகுப்பினரான குடிமக்களின் முன்னேற்றத்திற்காக, பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்காக, சிறப்பு வரையறை செய்வதிலிருந்து அரசினைத் தடுத்தல் ஆகாது என்பது இணைக்கப்பட்டது.
- இந்தத் திருத்தம் பற்றிய விவாதத்தின்போது, சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் என்பதுடன், பொருளாதார நிலையிலும் என்பதைச் சேர்க்கவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அன்றைய தலைமை அமைச்சர் நேரு, "அரசியல் சட்டம், குடியரசுத் தலைவர் பற்றிய பகுதியில், சமூக நிலையிலும், கல்வி நிலையிலும், பின்தங்கியோரின் முன்னேற்றம் பற்றிப் பரிந்துரை செய்தற்கென ஒரு குழுவை குடியரசுத் தலைவர் நியமிக்கலாம் என்றுதான் இருக்கிறது. அங்கே, பொருளாதாரம் குறிப்பிடப்படவில்லை. எனவே இங்கேயும், சமூகநிலை, கல்விநிலை, இரண்டு மட்டுமே கொள்ளப்பட வேண்டும்' என வலியுறுத்தியதால் பொருளாதாரம் கைவிடப்பட்டது.
- 1978-இல் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட பி.பி. மண்டல் குழு, மத்திய அரசின், கல்வி வேலைவாய்ப்புத் துறைகளில், பிற்படுத்தப்பட்டவர்க்கு இருபத்தேழரை விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினருக்கு இருபத்திரண்டு விழுக்காடு ஒதுக்கீடு எனச்செய்த பரிந்துரை 1991-இல் நரசிம்ம ராவ் ஆட்சியில் சட்டமாக்கப்பட்ட போது, பொதுப்போட்டியில், பத்து விழுக்காடு பொருளாதார அடிப்படையில் வழங்க உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- தற்போது, பா.ஜ.க. அரசு, தனக்குள்ள பெரும்பான்மை பலத்தைக்கொண்டு, அரசியல் சட்டம், பதினைந்தாவது பிரிவின் உட்பிரிவில் சமூகநிலை, கல்விநிலை என்பவற்றுடன் பொருளாதாரநிலை என்பதையும் கருதலாம் என்கிற நிலைக்கு கொண்டுவந்துள்ள நிலையில், அதன்பேரில், தற்போது பொதுப்பிரிவில், முன்னேறிய வகுப்பார்க்குமட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வதை ஆமோதித்துவிட்டது.
- இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், சாதிவாரி ஒதுக்கீடு போக, மீதமுள்ள இடங்கள், அனைத்துப் பிரிவினர்க்குமான பொதுப்போட்டிக்கு உரியனவன்றி, முன்னேறிய வகுப்பினர்க்கு மட்டுமல்ல. எனவே, பொருளாதார வரம்பு என்பது அனைவர்க்கும் பொதுவானதாகவே அமையவேண்டும். ஆனால் பா.ஜ.க. அரசு, பொதுப்போட்டிக்குரிய முன்னேறிய வகுப்பினர்க்கு மட்டுமாகச் செய்வதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சரியான நீதியல்ல.
- வகுப்புவாரி ஒதுக்கீட்டில் இடம்பெறுவோர் அனைவரும் அல்லது அவர்களில் பெரும்பான்மையர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பதற்கு என்ன ஆதாரம்? அவ்வாறே, பொதுப்போட்டியில் வெற்றிபெறும் முன்னேறிய வகுப்பினரில், பெரும்பான்மையர், பொருளாதாரத்தில் மேல்நிலையில் இருப்போர் என்பதற்கு என்ன ஆதாரம்? அவ்வாறான ஆதாரம் இல்லாமல் பொதுப்போட்டியில் முன்னேறிய வகுப்பினர்க்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது சரியான நீதியாகாது.
- பொருளாதார வரம்பில், ஊதியப்பட்டியலில் கையொப்பமிட்டு, மாத ஊதியம் வாங்குவோர் மட்டுமே சிக்குவர்.வேறு வகையில் கூடுதல் வருமானம் ஈட்டுவோர், அரசு குறிப்பிடும் வருமானத்திற்கு உட்பட்டவராக வருமானச் சான்று காட்டுதல் ஆகாத செயலல்ல. அதாவது, சட்டபூர்வமான வருமானம் பெறுவோரின் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்பை அவரினும் கூடுதலாக வேறுவகையில் பொருள்குவிப்போரின் பிள்ளைகள் தட்டிப் பறிப்பதற்கே வருமானவரம்பு பயன்படும்.
- இன்னொன்று, சமூகத்தில் உயர்நிலைப் பிரிவைச் சேர்ந்தவர்களில், எத்தனைபேர் ஏழ்மையின் காரணமாக விவசாயக் கூலித்தொழிலாளியாக, கட்டுமானச் சிற்றாளாக, துப்புரவுத் தொழிலாளியாகப் பிழைப்பு நடத்துகின்றனர் என்பதை நினைவிற்கொண்டால் சாதி அடிப்படையாயினும், பொருளாதார அடிப்படையாயினும், தனிநபரை, தனிநபர்க்கான குடும்பத்தை, ஓர் அலகாகக் கொள்ளுதல் தவறு என்பது புலப்படும்.
- கடந்த நூற்றாண்டில், அரசுக் கல்வி நிலையங்கள் பரவலாகாத நிலையில், பட்டப்படிப்பும், சட்டப்படிப்பும் முடித்து, நீதிபதியான முதலாவது இந்தியரான முத்துசாமி ஐயர் வளமையான குடும்பத்தவர் அல்ல. தெருவோர மின்விளக்குக் கம்பத்தின் அடியிலமர்ந்து படித்து முன்னேறிவர். அவரின் குடும்ப ஏழ்மை, அவரின் முன்னேற்றத்திற்குத் தடையாகவில்லை. எனவே கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்க்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோரென முன்னுரிமை அளித்தல் நீதியல்ல, அநீதி.
- வகுப்புவாரி இட ஒதுக்கீட்டில், தங்கள் வகுப்பின் உரிமை பாதிக்கப்படுகிறது என்போர் வகுப்புவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த வகுப்பாரின் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு செய்யும் யோசனையை ஏற்றுக்கொள்வார்களா?
- தகுதி, சமவாய்ப்புப் பற்றிப் பேசப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவனும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும் சம தகுதியாளர்களா? அவர்களுக்கிடையே, பேச்சுப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் ஓட்டப் போட்டியும் நடத்துகிறோமா? அவ்வாறே பரம்பரைப் படிப்பாளிக் குடும்பத்து மாணவனையும், புதிய தலைமுறைப் படிப்பாளியாகும் மாணவனையும் சமமாகப் பாவித்தல் சம வாய்ப்பாகாது.
நன்றி: தினமணி (14 – 12 – 2022)