TNPSC Thervupettagam

இது போரிடும் கூட்டாட்சி சகாப்தம்

February 27 , 2022 1076 days 506 0
  • இந்திய ஆட்சிப்பணிகளுக்கான சேவை விதிகள் 1954 சட்டத்துக்கு ஒன்றிய அரசு கொண்டுவர விரும்பும் திருத்தங்களால் அதற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் முற்றிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுப் பணிக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அயல்பணி மாற்ற அடிப்படையில் வழங்க முடியாது என்று மறுக்கும் உரிமை, மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட இந்த உத்தேச திருத்தங்கள் வழிசெய்கின்றன.
  • இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தொடருமானால் குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒன்றிய அரசின் கட்டளையை மாநில அரசு ஏற்றாக வேண்டும் என்று திருத்தம் கூறுகிறது. தமிழ்நாடு, கேரளம், வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய (எதிர்க்கட்சிகள் ஆளும்) மாநிலங்கள் இந்த உத்தேச திருத்தங்களைக் கடுமையாக எதிர்த்துள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் எப்போதுமே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளவைதாம் என்றாலும் முதல் முறையாக, ‘போரிடும் கூட்டாட்சி’ முறை வலுப்பெற்றுவருகிறது. 

மாறும் அலைகள்

  • பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது முதலே, இந்திய அரசியல் வானில் ஒத்துழைத்த ஒன்றிய – மாநில அரசுகள் உறவு - போரிடும் உறவாக மாறிக்கொண்டிருக்கிறது. அரசமைப்புச்  சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி உத்தராகண்ட் மாநில (காங்கிரஸ்) அரசை ஒன்றிய அரசு கலைத்த பிறகு, அந்த மாநில முதல்வராகப் பதவி வகித்த ஹரீஷ் ராவத் பயன்படுத்திய வார்த்தைதான் ‘போரிடும் கூட்டாட்சி’ (Combative Federalism).
  • அதற்குப் பிறகு மாநில ஆளுநர்கள் மூலமாக, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் ஒன்றிய அரசு அடிக்கடி பல்வேறு வழிகளில் குறுக்கிட்டுக்கொண்டேவருகிறது.
  • அருணாசல பிரதேச மாநில ஆளுநர் 2016-ல் மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டதை அடுத்து மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்தத் தவறைச் சரிசெய்ய வேண்டியதாயிற்று. மாநில ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 174-வது பிரிவு அளிக்கும் விருப்ப அதிகாரமானது, இப்படித் தேர்தலை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு விரிவானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
  • மாநில முதல்வர் அல்லது சட்டப் பேரவைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை கலக்காமல் சட்டப் பேரவையைக் கூட்டவோ, பேரவையில் விவாதிக்கப்பட வேண்டிய விவாதப் பட்டியலைத் தீர்மானிக்கவோ, பேசவோ ஆளுநரால் முடியாது என்று தீர்ப்பளித்தது.
  • கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை வலு இல்லாத கட்சிகளையும் கூட்டணியையும் ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர்கள் அழைத்த நிகழ்வுகளையும் இந்த ஆட்சியில் பார்த்தோம்.
  • ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் அமைச்சரவை விரும்பியபடி பேரவையைக் கூட்ட ஆளுநர் மறுத்தார். மாநில நிர்வாகத்தில் ஒன்றிய அரசு எப்படியெல்லாம் தலையிடுகிறது என்பதை இதுவும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.
  • தில்லி தேசிய தலைநகர் பிரதேசத்தின் மீது யாருக்கு அதிக அதிகாரம் என்பதையும் 2018-ல் உச்ச நீதிமன்றம்தான் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று. ஆனால் இந்த பிரச்சினை இன்னமும் தீரவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் தொடர்ந்து நீதிமன்றங்களில் எழுப்பப்பட்டேவருகிறது. தில்லியின் துணை நிலை ஆளுநருக்கும், தில்லி மாநில அரசுக்கும் அதிகாரங்களில் உள்ள வேறுபாடுகளை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்த நேர்ந்தது. நிலம், காவல் துறை, பொதுச் சட்டம்-ஒழுங்கு தொடர்பானவற்றை மட்டும் துணை நிலை ஆளுநர், குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் போதும் என்று கூற வேண்டியதாயிற்று.
  • அதற்குப் பிறகும் ‘அஜீத் மோகன் எதிர் தில்லி தேசியத் தலைநகர் பிரதேச சட்டப் பேரவை வழக்கில்’ (2021), ‘நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஒன்றிய அரசும் (தில்லி) மாநில அரசும் கை கோத்துச் செயல்படாவிட்டாலும், அருகருகிலாவது நடந்து நிர்வாகத்தை நடத்த வேண்டும்’ என்று நினைவூட்ட வேண்டியதாயிற்று.

வெளிப்படையான மோதல்கள்

  • சட்டம் இயற்றுவதில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுவது அதிகமாகி இருக்கிறது. அனைத்திந்திய ஆட்சிப் பணி சேவைகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக வெளிப்படையான மோதல்களும் பரஸ்பர கண்டன அறிக்கைகளும் அதிகரித்துவருகின்றன. ‘யாஸ்’ புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட பிரதமர் மோடி கொல்கத்தா சென்றபோது அவரை வரவேற்க வராமல் இருந்த மாநில தலைமைச் செயலாளர் ஆலாபன் பண்டோபாத்தியாவை, உடனடியாக தில்லிக்கு வருமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கட்டளையிட்டதும் இந்த மோதலில் ஒன்று.
  • ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க விரும்பாத முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலாபனை தில்லிக்கு அனுப்பாமல் தடுத்தார், ஒன்றிய அரசு ஆலாபன் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. இது மேலும் பெரிய மோதலாக உருவெடுத்து இப்போது தில்லி உயர் நீதிமன்றத்தின் வழக்குப் பட்டியலில் விசாரணைக்காகக் காத்திருக்கிறது.

ஒன்றிய விசாரணை முகமைகள்

  • ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட விசாரணை முகமைகளை, மாநிலங்களில் விசாரணைக்கு அனுமதிப்பது தொடர்பாகவும் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
  • கொல்கத்தா மாநநகர காவல் துறை ஆணையர் ராஜீவ் குமாரை ‘வாரண்ட்’ ஏதுமில்லாமல் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் கைதுசெய்ய மத்தியப் புலனாய்வு முகமை (சிபிஐ) மேற்கொண்ட நிகழ்வு, இது தொடர்பான மோதல்களுக்குத் தொடக்கமாக அமைந்தது. பாலிவுட் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் செய்துகொண்ட தற்கொலை தொடர்பான விசாரணை, மும்பை மாநகர காவல்துறைக்கும் மத்தியப் புலனாய்வுக் கழக முகமைக்கும் இடையிலான மோதலாக மாறியது.
  • பிஹாரைச் சேர்ந்தவர் என்பதால் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக பாட்னாவில் பதிவான பல்வேறு முதல் தகவல் அறிக்கைகள், மத்தியப் புலனாய்வு முகமை விசாரிக்க பிஹார் அரசால் மாற்றித்தரப்பட்டது. இதனால் ஏற்பட்ட சட்ட மோதலை, மத்தியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்குமாறு மும்பை காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகே பூசல்கள் ஓய்ந்தன.
  • கேரளாவுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம் தொடர்பாக சுங்கத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘தேசியப் புலனாய்வு முகமை’ (என்ஐஏ), ‘வருவாய்ப் புலனாய்வுத்துறை அமல் பிரிவு இயக்குநரகம்’ (இ.டி.) மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. இது ஒன்றிய அரசுக்கும் கேரள அரசுக்கும் இடையே கசப்புணர்வையே வளர்த்தன. சுங்கத் துறை, தேசியப் புலனாய்வு முகமை, அமல்பிரிவு இயக்குநரகம் ஆகியவை முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் மீது குற்றப்பட்டியலைத் தாக்கல் செய்தன. உடனே கேரள அரசு, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை தொடர்பாகவும் அதிகார வரம்பை அவை மீறியது தொடர்பாகவும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.
  • அன்னியச் செலாவணி (ஒழுங்காற்று) சட்டத்துக்கு முரணாக, நடந்த சில நிகழ்வுகள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தபோதும் சர்ச்சைகள் மூண்டன. கேரளத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு ஐக்கிய அரசு சிற்றரசிடமிருந்து ஒன்றிய அரசின் ஒப்புதல் – அறிதல் இன்றி நிதி பெற்றது தொடர்பானது அந்தச் சர்ச்சை.
  • அரசியல் காரணத்துக்காகவே போடப்படும் இத்தகைய வழக்குகள் அல்லது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒன்றிய – மாநில அரசுகளிடையே சுமுக உறவைக் கெடுத்து, கூட்டாட்சி கட்டமைப்பையே வலுவற்றதாக்குகின்றன என்பதில் ஐயமே இல்லை. இதனாலேயே பல மாநில அரசுகள் தங்கள் அனுமதியின்றி, மத்தியப் புலனாய்வு முகமை தங்களுடைய மாநிலத்தில் விசாரணை எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று தடை விதிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டன.

இணக்கமான கூட்டாட்சி

  • ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒத்துழைத்தும் இணக்கமாகவும் செயல்பட வேண்டும் என்றே கூறும் அரசமைப்புச் சட்டத்துக்கு இப்படிப்பட்ட 'போரிடும் கூட்டாட்சி முறை' வெறுப்பையே தரும். ‘தில்லி என்சிடி எதிர் ஒன்றிய அரசு (2018)’ வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு (பெஞ்ச்), இணக்கமான கூட்டாட்சி என்றால் என்ன என்று விளக்கியது. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் – பொது நன்மையைக் கருதி தங்களுடைய செயல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
  • “மக்களுடைய நலனைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பொறுப்புணர்வுள்ள ராஜதந்திரிகளின் நிலையிலிருந்து அணுகி, தீர்வுகாண வேண்டும், கூட்டாகச் செயல்பட வேண்டும், முழு மனதுடன் தீர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றது.
  • நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை, இப்படி ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒவ்வொரு பிரச்சினையிலும் மோதிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மாநிலங்களின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுவதையும் - ஒன்றிய அரசின் செயல்களில் மாநிலங்கள் குறுக்கிடுவதையும் வெறுக்கத்தக்க செயலாகவே கருதி தடைசெய்திருக்கிறது அரசமைப்புச் சட்டம்.
  • தேவையற்ற பூசல்களில் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கிக் கொண்டிருக்காமல் மக்களுடைய நலனுக்கான செயல்களில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒற்றுமையாக இனிச் செயல்பட வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (27 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்