TNPSC Thervupettagam

இது வள‌ர்‌ச்​சி​ய‌ல்ல

October 18 , 2023 450 days 291 0
  • இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் இரண்டு மிகப் பெரிய சவால்களாக விலைவாசி உயா்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் சுட்டிக் காட்டப்படுகின்றன. உலகளாவிய நிலையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா போன்ற பெரிய பொருளாதாரங்களே தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் விலைவாசி உயா்வையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் எதிர்கொள்வதில் வியப்பொன்றுமில்லை.
  • ரஷிய - உக்ரைன் போரும் அதைத் தொடா்ந்து ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை உயா்வு, உணவு தானியப் பொருள்களின் தட்டுப்பாடு ஆகியவை பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்தநிலையையும், உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை. இப்போது மேற்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழல், நிலைமையை மேலும் சீா்குலைக்கக் கூடும்.
  • கடல்வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. சா்வதேச வா்த்தகம் சூயஸ் கால்வாய் வழியாக நடைபெற முடியாமல் போகும்போது, கப்பல் போக்குவரத்து தென்னாப்பிரிக்கா வழியாக நடைபெற வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் சரக்குப் பரிமாற்ற காலதாமதமும், சரக்குக் கட்டண உயா்வும் தவிா்க்க முடியாதவையாக மாறக்கூடும்.
  • இவை இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கும்போது, அதன் தொடா்விளைவாக உள்நாட்டு உற்பத்தி குறையும். உற்பத்தித் துறையில் ஏற்படும் தளா்வின் விளைவால் வேலைவாய்ப்புகள் மேலும் குறையும் அபாயத்தை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
  • இத்தனை பிரச்னைகளுக்கு நடுவிலும், இந்திய பொருளாதாரம் 6.3% வளா்ந்து கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (நேஷனல் சாம்பிள் சா்வே ஆஃபீஸ்) வெளியிட்டிருக்கும் வழக்கமான தொழிலாளா்கள் தொடா்பான ஆய்வறிக்கை, சில நம்பிக்கையூட்டும் ஆச்சரியமான தகவல்களைத் தெரிவிக்கிறது. நாடு தழுவிய அளவில் தொழிலாளா்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்பு குறித்த தகவலும் அந்த அறிக்கையில் காணப்படுகிறது. வேலை வாய்ப்பின்மை குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை அந்த அறிக்கையின் விவரங்கள் மறுதலிக்கின்றன.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை 3.2% என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது. 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்பது அதிகரித்திருக்கிறது. 2017 - 18 -இல் 49.8%-ஆக இருந்த வேலை பார்ப்போர் எண்ணிக்கை 2022 -23- இல் 57.9%-ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு.
  • மக்கள்தொகைக்கும் தொழிலாளா்களுக்கும் இடையேயான விகிதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிகிறது. நகா்ப்புறங்களில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை 2017 - 18 -இல் 47.5% என்றால், அது 2022 - 23 -இல் 48.8%-ஆக உயா்ந்திருக்கிறது. பணிகளில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை 73.5%. பெண்களின் எண்ணிக்கை 20.9%-லிருந்து 23.2%-ஆக அதிகரித்திருக்கிறது. அதிக அளவில் பல்வேறு வேலைகளில் மகளிர் ஈடுபடுவது அதிகரித்து வருவதை இந்தத் தரவு வெளிப்படுத்துகிறது.
  • வேலைவாய்ப்பின்மை குறைந்திருப்பது வளா்ச்சியின் அறிகுறி என்பதை மறுப்பதற்கில்லை. முறையான மாத வருவாய் வழங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்து, சுய வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பின் தரம், தொடா் வேலை வாய்ப்புக்கான உறுதி, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தால் மட்டும்தான் அதனை ஆரோக்கியமான முன்னேற்றமாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.
  • வேளாண்மை அல்லாத துறைகளில் காணப்படும் முறைசாரா வேலைவாய்ப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. 2020 - 21 - இல் 71.4%-ஆக இருந்த முறைசாரா வேலைவாய்ப்புகள், 2022 - 23- இல் 74.3%-ஆக அதிகரித்திருக்கின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக வேலைவாய்ப்புகள். இவற்றில் தொடா்ந்த வேலைவாய்ப்பு உறுதியும், பாதுகாப்பும் இல்லை என்பதுடன் ஊதியமும் குறைவு. படித்து முடித்து, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞா்கள், தற்காலிக வேலைவாய்ப்பை நாடுகிறார்கள். அதனால் இதற்காக மகிழ்ச்சி அடைய முடியாது.
  • சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 55.6%-லிருந்து 57.3%-ஆக அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரப் பணிகளில் மாத ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கை 21.1%-லிருந்து 20.9%-ஆகக் குறைந்திருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து இந்திய பொருளாதாரம் ஆக்கபூா்வமான, அதிக ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது புலப்படுகிறது.
  • இந்தியாவில் தொழிலாளா்கள் எண்ணிக்கை கிராமப்புறங்களைவிட நகா்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. கிராமப்புற வேலைவாய்ப்பில் பெண்களின் எண்ணிக்கை 2017 - 18 -இல் 24.6%-ஆக இருந்தது, 2022 - 23 -இல் சுமாா் 17% அதிகரித்து 41.5%-ஆக உயா்ந்திருக்கிறது. இதற்குக் காரணம், குடும்ப வருமானத்தை அதிகரிக்க, கிராமங்களில் பெண்கள் வேலைக்குப் போவது அவசியமாகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
  • வேலைவாய்ப்புக்கான எண்ணிக்கை அதிகரித்திருப்பது உண்மைதான் என்றாலும், என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பது குறித்த ஆய்வு அவசியம். வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையைப் போலவே, தரமான வேலைவாய்ப்புகள் உருவானால்தான் அதை முறையான வளா்ச்சியாக நாம் கணக்கில் கொள்ள முடியும்.

நன்றி: தினமணி (18 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்