TNPSC Thervupettagam

இது வெறும் ‘விளையாட்டு’ அல்ல

August 4 , 2024 162 days 132 0
  • நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நூறாண்டுகள் கழித்துத்தான் அதில் பாலினச் சமத்துவத்தை அடைந்திருக்கிறோம். அதுவும்கூடத் தன்னியல்பாக, நாடுகளின்முற்போக்குச் சிந்தனையால் நடைபெற்று விடவில்லை. போட்டிப் பங்கேற்பில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகச் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் பல்வேறு விதிமுறைகளை உருவாக்கிய பிறகே பாலினச் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. விளையாட்டுகளில் வெளிப்படையாகச் செயல்படுத்தப்படும் பாலினப் பாகுபாட்டைக் களைவதற்காகக் காலந்தோறும் உரிமைக் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன. அப்படிக் குரல் எழுப்பியவர்களில் தனித்துவமானவர் பில்லி ஜீன் கிங்.
  • அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான பில்லி ஜீன் 1943இல் பிறந்தவர். தீயணைப்பு வீரரான இவருடைய தந்தை கூடைப்பந்து வீரராக இருந்தவர். தாய், நீச்சல் வீராங்கனை. பில்லி ஜீனின் தம்பி பேஸ்பால் வீரர். பில்லி ஜீன் சிறு வயதில் கூடைப்பந்து விளையாட்டைத்தான் தேர்ந்தெடுத்தார். பத்து வயதானபோது எதை விளையாடுவது தனக்குச் சிறந்ததாக இருக்கும் எனத் தந்தையிடம் கேட்டார். தந்தையின் வழிகாட்டுதலில் அன்றைக்குத் தொடங்கியது பில்லி ஜீனின் டென்னிஸ் பயணம்.

பரிசுத் தொகையில் ஏன் பாகுபாடு?

  • டென்னிஸ் விளையாடத் தொடங்கிய சில நாள்களிலேயே ‘உலகின் முதல் தர வீராங்கனையாக உயர்வேன்’ எனத் தன் தாயிடம் பில்லி ஜீன் சொன்னார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அதை மெய்ப்பித்தார். 1961இல் விம்பிள்டன் இரட்டையர் போட்டியில் வெற்றிபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தார். 1966, 1967, 1968 என அடுத்தடுத்த ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். 1961- 1979 வரை 20 விம்பிள்டன் பட்டங்களை வென்றார். டென்னிஸ் விளையாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு தரத்தில் பயிற்சியும் போட்டிகளும் இருப்பதைச் சிறுமியாக பில்லி ஜீன் கண்டுகொண்டார். வளர்ந்த பிறகு பரிசுத் தொகையில் காட்டப்படும் பாகுபாட்டை எதிர்த்தார். இது குறித்து போட்டி நடத்தும் அமைப்புகளிடம் வாதாடினார். அதற்குப் பலன் கிடைத்தது. 1971இல் 1,00,000 அமெரிக்க டாலர்கள் பரிசாகப் பெற்ற முதல் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார். 1973இல் பெண்களுக்கான டென்னிஸ் அசோசியேஷனைத் தொடங்கினார். சம பரிசுத் தொகை வழங்கிய முதல் போட்டியாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள் மாறியதில் பில்லி ஜீனுக்கு முக்கியப் பங்கு உண்டு.

சவாலே சமாளி

  • அது 1973ஆம் ஆண்டு. 1930களில் தொடங்கி 20 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட்டில் கோலோச்சிய பாபி ரிக்ஸுக்கு அப்போது 55 வயது. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். டென்னில் ஜாம்பவானான பாபி ரிக்ஸ், தன்னை ஆணாதிக்கவாதி என்று பகிரங்கமாக அறிவித்துக்கொள்ளும் அளவுக்குப் பெண் வெறுப்பில் ஊறிக் கிடந்தார். பெண்கள் குறித்த மலினமான பிற்போக்குக் கருத்தை அவர் கொண்டிருந்தார். ‘பெண்கள் டென்னிஸ் விளையாடுவது ஆண்களோடு ஒப்பிடுகையில் தரம் குறைந்தது. தற்போது முன்னிலையில் இருக்கும் வீராங்கனையை இந்த வயதில்கூட என்னால் மிக எளிதாகத் தோற்கடித்துவிட முடியும்’ எனச் சவால் விட்டார். அவரது சவாலை ஏற்று மார்கரெட் என்பவர் அவருடன் டென்னிஸ் விளையாடித் தோற்றார். பாபி ரிக்ஸின் ஆணவப் பேச்சை பில்லி ஜீன் கிங் முதலில் கண்டுகொள்ளவில்லை. மார்கரெட் தோல்வியுற்றபோதுதான் அந்தச் சவாலை எதிர்கொண்டே தீருவது என முடிவெடுத்தார்.
  • பெண்களை ஒடுக்கும்விதமாகவும் சிறுமைப்படுத்தும்விதமாகவும் ஆதிக்கக் குரல் ஒலிக்கும்போது எதிர்வினையாற்றுவது அவசியம் என்பதை பில்லி ஜீன் கிங் உணர்ந்தார். அந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் உலகத்தின் கவனத்தைப் பாலினச் சமத்துவத்தின் பக்கம் திருப்பலாம் என அவர் நினைத்தார். தனது வெற்றி, பெண்கள் விளையாடுவது குறித்த பாபி ரிக்ஸின் கருத்து எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்ற புரட்டு வாதம் என்பதை நிரூபிக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். ‘இந்தப் போட்டியை நான் மிகத் தீவிரமாக எதிர்கொள்கிறேன். அதில் வெற்றிபெற விரும்புகிறேன். வெற்றி பெறுவது குறித்த பொறுப்பையும் அழுத்தத்தையும் வரவேற்கிறேன். பாபி அதற்குத் தயாராக இருக்கட்டும்’ என அந்தப் போட்டி குறித்துச் சொன்னார் பில்லி ஜீன்.

பெண்களின் தன்மானம் வென்றது

  • முன்னாள் டென்னிஸ் சாம்பியனான ஆணும் இந்நாள் சாம்பியனான பெண்ணும் மோதும் விளையாட்டை ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு எழுதின. விளையாட்டுப் போட்டியை நடத்திய நிறுவனங்கள் அந்தப் போட்டியை ‘பாலினங்களின் போர்’ (Battle of the sexes - இதே தலைப்பில் 2017இல் ஹாலிவுட் படம் வெளியானது) எனக் குறிப்பிட்டன. 1973 செப்டம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தப் போட்டியை உலகம் முழுவதும் 9 கோடி பேர் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தன. பில்லியும் பாபியும் விளையாடிய அந்தப் போட்டிதான், இதுவரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரே போட்டி.
  • 6-4, 6-3,6-3 என்கிற விகிதத்தில் பாபியைத் தோற்கடித்து பில்லி ஜீன் வாகை சூடினார். ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களைப் பரிசாகப் பெற்றார். அந்தப் போட்டியில் பாபியைத் தோற்கடிப்பது மட்டுமே தன் நோக்கமல்ல என்று குறிப்பிடும் பில்லி, “நான் தோற்றுவிட்டால் பெண்களை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியது போல் ஆகிவிடும். அனைத்துப் பெண்களின் தன்மானத்தை அது எள்ளி நகையாடும். பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்படக்கூடும். 55 வயது ஆணைத் தோற்கடிப்பது பெரிய விஷயமல்ல. உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு டென்னிஸ் விளையாட்டு குறித்து நான் தெரியப் படுத்துவதுதான் எனக்குப் பெரிய விஷயமாகப் பட்டது” என்று வெற்றிக்குப் பிந்தைய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
  • விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவும் பெண் பயிற்சியாளர்களை உருவாக்கவும் பல்வேறு அமைப்புகளை பில்லி ஜீன் உருவாக்கினார். விளையாட்டு உலகில் பாலினச் சமத்துவத்துக்கான புதிய வரலாற்றை எழுதிய பில்லி ஜீன் தற்போது பாரிஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் இளம் வீரர்களை உற்சாகப்படுத்தும்விதமாகப் பேசிவருகிறார். 80 வயதிலும் குன்றாத உற்சாகமும் போராட்டக் குணமுமாக அவர் வலம்வருவதே முக்கியமான அரசியல் செயல்பாடுதான்!

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்