TNPSC Thervupettagam

இந்தியக் கால்நடைகள்

December 22 , 2017 2540 days 7410 0
இந்தியக் கால்நடைகள்

- - - - - - - - - - - - - -

இந்தியக் கால்நடைகளைப் பற்றியத் தொகுப்பு
  • சமீப காலங்களில் கால்நடை வளர்ப்பு என்பதைப் பற்றியும் குறிப்பாக பசுவைப் பற்றியச் செய்திகளும் ஊடகங்களில் முக்கிய இடம் பெற்று வருகின்றது. இது நம் அனைவருக்குமே முக்கியமான ஒன்றாகும். நாம் அனைவரும் இதைப் பற்றிய செய்திகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். இங்கு நாம் தேர்விற்கு சம்பந்தமான தகவல்களைப் பற்றிக் காண்போம்.
  • இக்கட்டுரையானது 3 பகுதிகளின் தொகுப்பாக உள்ளது. வெண்மைப் புரட்சி (White Revolution), நாட்டு இனங்கள் (Native Breeds) மற்றும் நாட்டு மற்றும் அயல்நாட்டு இனங்களின் (Native and exotic breed species) வேறுபாடு ஆகியன ஆகும். இறுதியில் இந்திய அரசாங்கமானது கால்நடைகளுக்காக உருவாக்கியத் திட்டங்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் காணலாம்.
  இந்தியாவில் வெண்மைப் புரட்சி
  • இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டத் திட்டத்திற்கு வெண்மைப் புரட்சி என்று பெயர். இது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுக் கழகத்தினால் (National Dairy Development Board – NDDB) 1970-ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். தேசிய பால்பண்ணை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர்.வர்கீஸ் குரியன் இதை நிறுவினார். இதனால் இவர் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் பால்வளர்ச்சித் திட்டமானது முதன்முதலாக குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மிகுந்த வெற்றியைப் பெற்றன. இந்தக் கூட்டுறவுச் சங்கங்களானது பால் உற்பத்தியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமின்றி நிதி உதவியும் வழங்கி வருகின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்க ஏற்படுத்தப்பட்டத் திட்டம் ஆனது “வெள்ள நடவடிக்கை” (Operation Flood) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
  நோக்கங்கள்
  • பால் கொள்முதல், போக்குவரத்து, பாலைச் சேமித்தல் மற்றும் குளிர்விக்கும் தொழிற்கூடம் அமைத்தல்.
  • கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குதல்
  • பல்வேறு வகையான பால் சார்ந்த பொருட்களை உருவாக்குதல் மற்றும் அவற்றிற்கான சந்தை நிலவரத்தை நிர்வகித்தல்.
  • உயர் ரக கால்நடைகளை வழங்குதல் (பசு மற்றும் எருமைகள்), சுகாதார உதவி, கால்நடை சிகிச்சை மற்றும் செயற்கை முறையில் விந்தணு செலுத்துதல் ஆகிய வசதிகளை வழங்குதல், விரிவாக்கப் பணிகளை வழங்குதல்.
  சாதனைகள் வெண்மைப் புரட்சியின் சில முக்கியமான சாதனைகள் பின்வருமாறு:
  • வெண்மைப் புரட்சியானது கிராமப்புற மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பால்பண்ணை வைப்பது துணை வருமானத்திற்கு வழிவகுக்கும் எனக் கூறியது.
  • உலகளவில் இந்தியா, பால் உற்பத்தி செய்வதில் முதலிடம் பெற்று வருகிறது.
  • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் இறக்குமதி வெகுவாக குறைந்தது.
  • குறிப்பாக வெண்மைப் புரட்சியால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் நிலமில்லாத கூலியாட்கள் பெரும் பயன்பெற்றுள்ளனர்.
  • “வெள்ள நடவடிக்கைத்” திட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்க வேண்டி ஆனந்த், மேஹ்சானா மற்றும் பலன்பூர் ஆகியவற்றில் ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • சிலிகுரி, ஜலந்தர் மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் பிராந்திய மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது நாட்டில் 10 பெருநகரங்களில் பெரும் பால் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட 40 தொழிற்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • கால்நடைகளின் தரத்தை மேம்படுத்த, கலப்பு உயிரினச் சேர்க்கை தொடங்கப்பட்டது.
  பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள்
  • தொலை தூரங்களில் இருந்து சேகரிக்கப்படக் கூடிய பாலின் அதிக செலவு, நேரமின்மை மற்றும் போதிய அளவு பொருளாதாரம் இன்மை.
  • பெரும்பான்மையான கிராமங்களில் கால்நடைகள் சுகாதாரமற்ற நிலையில் வளர்க்கப்படுதல்.
  • போதிய அளவு சந்தை வசதியின்மை, மேலும் சந்தைக் கட்டமைப்புகளில் அதிகளவிலான முன்னேற்றம் தேவைப்படுகிறது.
  • பொதுவாக தரம் தாழ்ந்த கால்நடை ரகங்களே உள்ளன.
  • விரிவாக்கப் பணித் திட்டம் திறம்பட செயல்படவில்லை.
  இந்திய நாட்டுக் கால்நடை ரகங்கள்
  • சமீபத்தில் தெகல்கா பத்திரிக்கையின் அறிக்கைப்படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியா பால் இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கால்நடை இனங்கள் அனைத்தும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. இதற்கான காரணங்கள் பின்வருமாறு
  • இந்தியா, கடந்த பல ஆண்டுகளாக பால் உற்பத்தியை அதிகரிக்க வைப்பதற்காக அயல்நாட்டு பசுக்களை இறக்குமதி செய்துள்ளது.
  • உதாரணம்: பஞ்சாப் மாநிலத்தின் ஒரு லட்சம் மேய்ச்சல் கால்நடைகளில் 80 சதவிகிதம் வெளிநாட்டு இனங்கள் ஆகும். இந்தக் கால்நடைகள் அதிகப் பாலை உற்பத்திச் செய்வதாயினும், இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்றதாக இல்லை.
  • 69% இந்திய பசுக்கள் சமுதாயத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடமே காணப்படுகிறது.
  • அரசாங்கமானது மாடுகளின் இனப்பெருக்கத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பசுக்களின் சாரசரி பால் உற்பத்தி அளவு2 கிலோகிராம். ஆனால் உலக அளவில் இதன் சராசரி 6.6 கிலோவாகும். பண்ணையில் பின்பற்றப்படும் கொள்கைகள் மிகவும் பழைமையாக உள்ளது. அதனால் அவற்றை நவீன முறையில் மாற்றியமைக்க வேண்டும்.
  • இந்தியாவில் 37 தூய நாட்டுக் கால்நடை வகைகள் உள்ளன. சாஹிவால், கிர், சிவப்பு சிந்து, தார்பார்கர் மற்றும் ரதி ஆகிய இனங்கள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. காங்ரேஜ், ஓங்கோல் மற்றும் ஹரியானா ஆகிய இனங்கள் கறவை மற்றும் இழுவைக்கு ஏற்றவை. இவை ஏர் உழுவதற்கும் ஏற்றவை. மீதமுள்ள இனங்கள் இழுவைக்கு ஏற்ற இனங்களாகும்.
   
வ.எண் பெயர் புவியியல் வரம்பு விளக்கம்
1. கிர் சௌராஷ்டிரா  (குஜராத்) இந்தியாவிலுள்ள மற்ற இன வகையை விட இந்த இனவகைப் பசுக்கள் அதிக பால் தருகின்றன. இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் இவை கலப்பின வகைகளின் உருவாக்கலுக்குப்  பயன்படுத்தப்படுகின்றன.
2. சாஹிவால் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், & ஹரியானா இவை தனித்தன்மை வாய்ந்த சிவப்பு நிறத்தால் அடையாளப் படுத்தப்படுகின்றன.
3. சிவப்பு சிந்து சிந்து, பாகிஸ்தான் தற்போது இது பரவலாக காணப்படுகிறது.
4. ரதி பிகானீர் (ராஜஸ்தான்), ஹரியானா & பஞ்சாப் இது ராஜஸ்தானின் வறண்டப் பகுதியில் காணப்படும் முக்கியமான கறவை இன வகையாகும். இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக இந்த இனம் விளங்குகிறது.
5. ஹரியானா ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் & ராஜஸ்தான் ஏர் உழுதல் மற்றும் போக்குவரத்திற்கு இந்தக் கால்நடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகைப் பசுக்கள் நிறைய பால் தருகின்றன.
6. காங்க்ரேஜ் பூஜ், வடகுஜராத் & ராஜஸ்தான் இந்தியாவிலுள்ள கால்நடை இனங்களில் இந்த வகை மாடுகள் பலமானவை மற்றும் கடினமாக உழைக்கக் கூடியவை.
7. ஓங்கோல் ஆந்திராவின் குண்டூர் & ஓங்கோல் இந்த வகை மாடுகள் ஏர் உழுதல் மற்றும் இழுவை வேலை மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுகின்றன. இந்தப் பசுக்கள் போதுமான அளவு பால் தருகின்றன. இயற்கையாகவே இந்த வகை மாடுகள் கோமாரி நோய் (Foot-and-mouth disease) மற்றும் Mad Cow எனப்படும் போவின் ஸ்போஞ்சாம்பிக் என்செபலோபதி (Bovine spongiform encephalopathy) நோய் ஆகியவற்றை எதிர்க்கும் திறனுடையவை.
8. சிவப்பு காந்தாரி மராத்வாடா (மகாராஷ்ட்ரா) இவை நல்ல பாரம் இழுக்கக்கூடியவை ஆகும். இவை போதுமான அளவு பாலினைத் தருகின்றன.
9. நிமாரி கந்த்வா (மத்தியப் பிரதேசம்) இவை கறவை மற்றும் பாரம் இழுக்கக்கூடிய வகையாகும். இவை செம்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுக்களைக் கொண்டிருக்கும்.
10. அம்ரித் மகால் கர்நாடகா இந்த வகை மாடுகள் அதிக இழுப்புத் திறன் மற்றும் ஆயுட் காலம் உடையவை.
11. ஹலிகார் கர்நாடகாவின் ஹாசன், மைசூர் மற்றும் தும்கூர் மாவட்டங்கள் இந்த இழுவை மாடுகள் சாலை மற்றும் விவசாய நில வேலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அம்ரித்மகால் இன மாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. எனினும் இவை மிகவும் மெலிவாக இருக்கின்றன மற்றும் குறைந்த அளவு பாலினையேக் கொடுக்கின்றன.
12. நகோரி நாகூர் (ராஜஸ்தான்) மிகச்சிறந்த இழுவை வகையாகும். காளைகள் இழுவைப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
13. கேன்கதா பண்டா (உத்திரப்பிரதேசம் & மத்தியப் பிரதேச எல்லைப்பகுதி) சிறிய காளைகள் ஆனால் மிகவும் உறுதியான விலங்குகள் பாறை நிலப்பகுதிகளில் பயிரிட உதவுகின்றன.
14. சிரி டார்ஜ்லிங் மற்றும் சிக்கிமைச் சுற்றியுள்ள மலைகள் (பூட்டானில் இருந்து இவை இங்கு வந்தன) இவை மலைகளின் கரடுமுரடான சூழ்நிலைக்கு ஏற்ற வகையாகும். காளைகளின் வலிமையின் காரணமாக இழுவைப் (ஏர் உழுதல் & போக்குவரத்து) பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
15. கேரிகார் கேரி (உத்திரப்பிரதேசம்) இந்த இனக் கால்நடைகள் சுறுசுறுப்பானவை இவை மேய்ச்சலுக்கு மட்டும் பயன்படுகின்றன. இவை எளிய இழுவைப் பணிகள் மற்றும் மிக எளியப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. மிகக் குறைவான அளவே பால் கொடுப்பவை.
16. மேவாட்டி ராஜஸ்தான் இந்த வகை மாடுகள் பொதுவாக வலிமையான, மற்றும் சக்திவாய்ந்தவை. மேலும் சாந்தமானவை ஆகும். இவை ஏர் உழுதல், இழுவை வண்டி மற்றும் ஆழமானக் கிணறுகளில் இருந்து நீர் இறைத்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை போதுமான அளவு பாலைத் தருகின்றன.
17. கிருஷ்ணா பள்ளத்தாக்கு மகாராஷ்ட்ராவின் தெற்கு எல்லை மற்றும் ஆந்திரப் பிரதேசம் காளைகள் சக்தி வாய்ந்தவை, கடினமான ஏர் உழுதல் மற்றும் குறைவான இழுவைப் பணிக்கு ஏற்றவை. இந்த வகைப் பசுக்கள் போதுமான அளவு பயன்தருகின்றன.
18. வீச்சூர் கேரளா உலகிலேயே மிகச் சிறிய மாட்டின் வகை ஆகும். இவை பாரம் இழுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பசுக்கள் குறைந்த அளவு பாலினையேத் தருபவை.
  தமிழ்நாட்டு கால்நடை வகையினங்கள்
  • பின்வருவன தமிழ்நாட்டின் நாட்டு இன வகைகள் ஆகும். இந்த விஷயங்களை தெரிந்து கொள்வதனால் நம்முடைய நாட்டு இன கால்நடைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
காங்கேயம்
  • காங்கேய வகையானது “காங்கநாடு” மற்றும் “கொங்கு” என அழைக்கப்படுகின்றது. இவை தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் காணப்படுகின்றன. இதன்  வாழ்விடமான திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் தாலுக்காவின் பெயரால் ‘காங்கேயம்’ என இவை அழைக்கப்படுகின்றன.
·          இவை பலமான இழுவை இனமாகும். இவற்றின் தோல் மிகவும் உறுதியானது மற்றும் இறுக்கமானது ஆகும்.
பாராகுரு
  • ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி தாலுக்காவின் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கலவையைக் கொண்டதாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இதன் இனவகைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இவை ‘புர்னயா’ (Purnaia) கால்நடையின் அமைப்பைக் கொண்டுள்ளன. (அம்ரித்மகால் - ஹலிகர்)
  • கரடுமுரடான மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வேகமாக நடக்கக்கூடியதாகும்.
உம்பளச்சேரி ·          உம்பளச்சேரி வகை ஆனது மிகவும் கடினமானவை மற்றும் உறுதியானவை ஆகும். இவை தமிழ்நாட்டில் இழுவைக் கால்நடையாக பயன்படுத்தப்படுகின்றன. இவை அவற்றின் பூர்வீக இடமான உம்பளச்சேரியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இது ‘ஜாதிமாடு’, ‘மொட்டைமாடு’ ‘மொனுமாடு’, ‘தென்னவன்’, ‘தஞ்சாவூர்’ மற்றும் ‘தெற்கத்திமாடு’ என அழைக்கப்படுகின்றது. ·          இவை தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.
பாலமலை ·          சேலம் மாவட்டத்தின் மேட்டூர் தாலுகாவின் பாலமலை மற்றும் அதை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் தாலுகாவில் காணப்படுகின்றன. ·          மறைந்து வரும் இனமாக மாறிவருகின்றது. ·          ஆலம்பாடி மற்றும் பர்கூர் வகை மாடுகளுடன் ஒப்பிடும் போது குழப்பத்தை தரக்கூடியவை ·          இவை கருப்பு நிறத்தில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படுகின்றன.
ஆலம்பாடி ·          சேலம் மாவட்டத்தின் மேட்டூரில் காவேரி வடிநிலத்தின் மேல்பகுதி மலைகள், பென்னாகரம், தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) கொல்லேகால், பெங்களுர் கிராமப்புறம் (கர்நாடகா மாநிலம்) ஆகியவற்றில் காணப்படுகின்றன.
கொல்லிமலை சேர்வராயன்மலை கால்நடை இனம் ·          இவை பார்க்கையில் காங்கேயம் காளைகளின் குள்ள இனம் போல் காணப்படுகின்றன. ·          கொல்லிமலை - ஏற்காடு - பச்சைமலை கல்வராயன் மலைகளின் வெப்பமண்டல பசுமை மாறாத் தாவரங்களின் சூழல் இதற்கு ஏற்றவையாகும்.
புலிகுளம் ·          தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற இழுவை மற்றும் விளையாட்டு இனவகை. ·          இதன் பூர்வீகமான புலிகுளம் கிராமத்தின் பெயரால் இது புலிகுளம் என அழைக்கப்படுகிறது. ‘பளிங்கு மாடு’, ‘மணி மாடு’, ‘ஜல்லிக்கட்டு மாடு’ எனவும் இது அழைக்கப்படுகிறது. ·          தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இவை காணப்படுகின்றன.
  கலப்பு இனப்பெருக்கம் : (Cross Breeding)
  • கலப்பு இனப்பெருக்கம் என்பது வேறுபட்ட இனவகைகளை இனச்சேர்க்கை செய்வதாகும். கலப்பு இனப்பெருக்கமானது பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய இந்தியாவின் வகைப்படுத்த இயலாத இனங்கள் மற்றும் தோளில் திமில் பரந்து இருக்கும் பசு மாடுகள் (ஜீபூ இன மாடுகள்) அயல்நாட்டு இனங்களான ஹோல்ஸ்டீன் ஃப்ரைசியன், பிரவுன் சுவிஸ் மற்றும் ஜெர்ஸி எருதுகள் ஆகியவற்றின் விந்தணுக்களுடன் கலப்பினம் செய்யப்படுகின்றன.
  • இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய அளவில் இனப்பெருக்கம் செய்வதற்கு மரபணு மேம்பாட்டு கலப்பு இனப்பெருக்கமானது ஒரு மெதுவான வழிமுறையாக கருதப்படுகிறது.
  • கலப்பு இனப்பெருக்கம் என்ற சொல்லானது பெங்களூரிலுள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் (National Dairy Research Institute – NDRI), கால்நடைப் பண்ணை மற்றும் அலகாபாத் விவசாய நிறுவனங்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது கலப்பு இனப்பெருக்க பணிகளானது இராணுவ பால் பண்ணைகள் என்.டி.ஆர்.ஐ - கர்னால் (NDRI-Karnal) கூட்டுமுயற்சித் திட்டங்களான இந்தோ-சுவிஸ், இந்தோ - ஆஸ்திரேலியன், இந்தோ - டேனிஷ், மற்றும் சோன் கால்நடை அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் ஆகியவற்றின் மூலம் செயல்பட்டு வருகின்றன.
  நன்மைகள்
  1. உள்நாட்டு கால்நடை இனங்களிடம் இல்லாத விரும்பத்தக்க குணங்கள் அயல்நாட்டு கால்நடை இனங்களிடமிருந்து பெறப்படுகின்றன.
  2. இந்தியாவில் உள்ள பசுக்களின் கலப்பினச் சேர்க்கையானது அயல்நாட்டு எருதுகள் மூலம் நிகழ்த்தப்படுகிறது. அப்படி உருவாக்கப்பட்ட சந்ததிகளுக்கு விரும்பத்தக்க பண்புகளான அதிக பால் கொடுக்கும் திறன், அதிக எடையுடன் கன்றுகளை ஈனுதல், சிறந்த வளர்ச்சி விகிதம், சிறந்த இனப் பெருக்கத் திறன் மற்றும் உள்நாட்டுப் பசுக்களின் பண்புகளான, வெயிலைத் தாங்கும் தன்மை, நோய் எதிர்ப்பு ஆற்றல் ஆகியவை கிடைக்கப்பெறுகின்றன.
  3. இனங்களை ஜோடி சேர்க்கும் போது விரும்பத்தக்க வகையிலான குணாதிசயங்களுடன் கூடிய புதிய வகை இனங்கள் உருவாகின்றன.
  4. கலப்பினச் சந்ததிகளில் அதிகப் பால் ஈனும் தன்மை காணப்படுகின்றது.
  இந்தியாவில் கலப்பினக் கால்நடைகள்
.எண் இனத்தின் பெயர் நாட்டு இனம் குறிப்பிட்டப் பகுதி கூடும் இடம் குறிப்பு
1 பிரவுன் சுவிஸ் சுவிட்சர்லாந்து - இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகள் பால் இனம்
2 ஹோல்ஸ்டீன் ஃபிரைசியன் ஹாலந்து வட ஹாலந்து மாகாணம் மற்றும் மேற்கு ஃபிரைஸ்லாந்து நாடு முழுவதும் (கலப்பினம்) பால் இனம்
3 ஜெர்ஸி பிரிட்டிஷ் தீவுகள் ஜெர்ஸி தீவு அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கலப்பினம் காணப்படுகிறது பால் இனம்
  தீமைகள்
  1. இனவிருத்திக்குப் பயன்படும் விலங்குகளின் இனப்பெருக்கம் சிறிது குறைந்து விட்டது.
  2. கலப்பு இனத்தை உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய இனங்கள் தேவை.
  3. கலப்பினத்திற்குத் தேவையான உணவும் அதனை நிர்வகித்தலும் மிக அவசியம் ஆகும். ஏனெனில் அப்போதுதான் அவை நல்ல உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும்.
  பசு மாட்டினால் விவசாயத்தில் ஏற்படும் நலன்கள் நமக்கு ஏன் இது முக்கியமானது?
  • பசு மாடானது விவசாயம் செய்வதற்கு தேவையான அனைத்துப் பணிகளிலும் பங்களிக்கிறது. இது பொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்திற்கு உதவுகிறது. விவசாய நிலங்களில் வேலை செய்கிறது. நாம் பெறும் உணவானது பசுவின் உதவியினால்தான் கிடைக்கின்றது. இது நமது சுகாதாரத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது பயிர்களை பூச்சி மற்றும் பூஞ்சையிலிருந்துப் பாதுகாக்கிறது. இறுதியாக இது நமது குடும்பத்தில் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
  • மேற்கூறிய அனைத்தும் பசுவால் நமக்கு கிடைக்கின்றன. நாம் அதற்கு என்ன தருகிறோம்? நாம் நமக்கு தேவையில்லாத புல், எண்ணெய் எடுக்கப்பட்ட பருத்தி விதை, மற்றும் நிலக்கடலை, தேங்காய் மற்றும் பிற பொருட்களை தருகிறோம். ஆனால் இது பசுவிற்கு போதுமானதாக இல்லை, மனிதர்களைப் பொருத்தவரையில் இது தேவையில்லாத கழிவு மேலும் இதனை அப்புறப்படுத்துவதற்கு பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இவற்றைப் பசுவிற்கு தருகின்றனர். இந்தப் பொருட்களின் சுற்றுச்சூழல் மறுசுழற்சியானது பசுவின் உதவியால் நடைபெறுகிறது.
  இந்திய மாடுகளின் முக்கிய அம்சங்கள்
  • உடலின் ஒரு குறிப்பிட்டப் பகுதியை மட்டும் உலுக்க முடியும், உதாரணமாக உடலின் மற்ற பாகங்களை உலுக்காமல் வயிற்று பகுதியின் தோலை மட்டும் உலுக்க முடியும்.
  • நாட்டின் வெயில், மழை, குளிர் போன்ற காலநிலைக்கேற்ப தாங்கிக் கொள்ளும் தன்மை
  • 15 முதல் 20 கன்றுகளை வாழ்நாளில் ஈனும்.
  • பல கிலோமீட்டர் தூரம் நடக்க கூடியது. மேலும் உலகின் பல்வேறுபட்ட காலநிலையை ஏற்று கடின வேலை செய்யும்.
  • ஒரு மாடானது தனது வாழ்நாள் முழுவதிலும் 1000 மக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் 10 ஏக்கர் விவசாயத்திற்கு ஒரு மாடு போதுமானதாக இருக்கிறது.
  A1 மற்றும் A2 பால்
  • தேசிய விலங்கு மரபணு ஆராய்ச்சிப் பணியகமானது (National Bureau of Animal Genetic Research) இந்தியப் பசு இனங்களினுடைய பாலின் தரத்தை சமீபத்தில் விளக்கியுள்ளது.
  • 22 பசு இனங்களை ஆய்வு செய்ததில், ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு சிந்து, சாஹிவால், தார்பார்கள், ரதி, கிர் ஆகிய இனங்கள் அதிக பால் தரும் இனங்களாக அறிவித்தனர். A2 மரபணு மாற்றுருவில் பீட்டா கேசின் (beta casein) நிலை 100 சதவீதம் ஆக இருக்கிறது.
  • இந்திய இனங்களில் இவை 94 சதவீதமும், ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் ஃபிரையசின் ஆகியவற்றில் 60 சதவீதமும் உள்ளது.
  • A2 மரபணு மாற்றுருவானது பாலில் ஒமேகா-6 கொழுப்பு அமிலத்திற்கு காரணமாகும். தூய்மையான இந்திய வகைப் பசு மாடுகள் A2 பாலை தருகின்றன. இவற்றில் குறைந்த பீட்டா காஸ்மோ போரைன்-7 (BCM-7), உண்டு. இது A1 பாலை உற்பத்திச் செய்யும் கலப்பின பசுக்களுக்கு எதிரானது.
  பசும்பாலின் நன்மைகள்
  • குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பசு நெய் உதவுகிறது என ஆயுர்வேதம் கூறுகிறது.
  • உடலில் நல்ல கொழுப்பை (High-density lipoprotein - HDL) தங்க வைக்கிறது.
  • செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுகிறது.
  • மிகச் சிறந்த சைவ உணவாகவும், எதிர்ப்பாற்றல் நிறைந்ததாகவும். வெளிப்புற தோலில் பூசிக் கொள்ளக் கூடியதாகவும் இது விளங்குகிறது.
  • பசு நெய்யானது தேன் போன்றது. ஏனெனில் புரத்தை எளிதில் செரிக்கச் செய்யும் அமினோ அமிலம் அதில் உள்ளது.
  • வைட்டமின்கள் B2, B3 மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் உடைய வைட்டமின் A நிறைந்தது.
  • பசுவின் பாலானது அமிலத்தன்மையை குறைக்கும் (இன்றைய பொதுவான பிரச்சனை)
  • வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
  • பெருங்குடல், மார்பகம், மற்றும் தோல்புற்று நோய்க்கான வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.
  • இது மிகச் சிறந்த இயற்கை ஆக்ஸிஜனேற்றி ஆகும்.
  பசும் பாலில் உள்ளடங்குவன 100 கிராம் பசுவின் பாலில் உள்ளவை,
  • பாஸ்பரஸ்93 கிராம் - வளர்சிதை மாற்றம் மற்றும் உடலின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
  • கால்சியம்20 gm - எலும்புகளுக்கு வலிமை
  • மெக்னீசியம் - தசைச் செயல்பாடு மற்றும் வெனேடியம், குரோமியம், வெள்ளீயம், அலுமினியம், அபராக் மற்றும் சிசா தாதுக்கள் உடையது.
  • இதில் 25 வகை கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை
    • வைட்டமின் B12 - ஆரோக்கியமான செல்களை உற்பத்திச் செய்கின்றன.
    • வைட்டமின் A - நல்ல கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பாற்றல்
    • துத்தநாகம் - நோய் எதிர்ப்பாற்றல்
    • ரிஃபோபிலேவின் - ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்கின்றன.
    • ஃபோலேட் - ஆரோக்கியமான இணைப்புச் செல்களை உற்பத்தி செய்கிறது.
    • வைட்டமின் சி - ஆரோக்கியமான இணைப்புத் திசுக்களை உருவாக்குகிறது.
    • அயோடின் – மனித உடலினுடைய வளர்ச்சி மாற்ற விகிதத்தின் ஒழுங்கமைப்புக்குப் பயன்படுகிறது.
  பால்பண்ணைத் திட்டங்கள் 1) ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம்: (Rashtriya Gokul Mission)
  • உள்நாட்டு இனங்களை அறிவியல் முறைப்படி பாதுகாப்பதற்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் தொடங்கப்பட்டது.
  • எருது வளர்ப்பினப் பெருக்கம் மற்றும் பண்ணை மேம்பாட்டிற்கான தேசியத் திட்டத்தின் (National Programme for Bovine Breeding and Dairy Development) கீழ் இத்திட்டம் செயல்படுகிறது.
  • உள்நாட்டு இனங்களைப் பேணுதல் மற்றும் அவற்றின் மரபணு மாற்ற மேம்பாடு, பால் உற்பத்தித் திறனை மேம்படுத்தல் மற்றும் நோயில்லா உயர் மரபணு எருதுகளை இயற்கைப் பணிகளுக்கு வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
  • கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் (Livestock Development Board) மாநில செயலாக்க நிறுவனத்தின் (State Implementing Agency – SIA) மூலம் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் செயல்படுத்தப்படுகிறது.
நடைமுறைப்படுத்துதல்
  • ‘கோகுல் கிராம்’ (Gokul Gram) என்ற ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடை மையங்களை (Integrated Indigenous Cattle Centers) உருவாக்குதல்.
  • கோபாலன் சங்கம் (Gopalan Sangh) என்ற இனவிருத்தி சங்கங்கள் (Breeder’s Societies) உருவாக்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகளுக்கு ‘கோபால் ரத்னா’ (Gopal Rathna) மற்றும் இனவிருத்தி சங்கங்களுக்கு ‘காமதேனு’ (Kamadhenu) என்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
  2) பசுதான் சஞ்சிவானி: (Pashudhan Sanjivani)
  • விலங்குகள் நலத் திட்டத்தின் (Animal Wellness Programme) மூலம் “நகுல் ஸ்வஸ்த்யா பத்ரா” (Nakul Swasthya Patra) என்ற விலங்குகள் ஆரோக்கிய அட்டைகள் (Animal Health Cards) வழங்கப்படுகின்றன.
  • விலங்குகளின் பாலிற்கு UID அடையாளம் தருவதோடு, கால்நடை நோய்கள் பரவுவதை தடுப்பதற்கும், கால்நடைகள் மற்றும் அதன் தயாரிப்புகளின் வர்த்தக நிலையை கண்காணிப்பதற்கும் ஒரு தேசிய தரவுதளத்தை (National Database) உருவாக்கியது.
  3) -பசுதான் ஹாட் இணைய வாயில் (E-Pashudhan Haat Portal)
  • எருதுகளின் உற்பத்திக்காக இனவிருத்தியாளர்கள் மற்றும் உள்நாட்டு இனங்களை வைத்துள்ள விவசாயிகளை இணைத்தல் என்னும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த இணைய வாயில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த இணைய வாயிலானது விவசாயிகளுக்கு உள்நாட்டு இனங்களைப் பற்றிய தகவல்களையும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்துகிறது.
  • இந்த இணைய வாயிலின் வழியாக விவசாயிகள் / இனவிருத்தியாளர்கள் கால்நடைகளை விற்க இயலும்.
  4) சரக சம்ஹிதை: (Charaka Samhita)
  • சரக சம்ஹிதை என்பது பழங்கால இந்திய மருத்துவ நூலாகும். இது பசுவின் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற பொருட்கள் பல்வேறு நோய்களுக்குச் சிறந்த மருந்தாக இருக்குமெனக் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்