- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மைதானங்களில் ஓடிய சுனில் சேத்ரியின் கால்கள் எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஓய்வு பெற்றுவிட்டன. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான ஆசியத் தகுதிச் சுற்றுப் போட்டியில் குவைத்துக்கு எதிரான ஆட்டத்தோடு கனத்த மனதுடன் விடைபெற்றார் சுனில் சேத்ரி.
- இந்தியக் கால்பந்தின் சகாப்தம் என்றழைக்கப்படும் 39 வயதான சுனில் சேத்ரி, உலக அளவில் அதிக கோல்கள் அடித்த சிறந்த வீரர்களில் ஒருவர். உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து போட்டிக்கு இந்தியாவில் ரசிகர்கள் குறைவுதான். இந்தியாவில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தாத இந்த விளையாட்டில் விளையாடி, உலக அளவில் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக ஜொலித்தவர் சுனில் சேத்ரி.
- இந்தியாவுக்காக இதுவரை 151 சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, மொத்தம் 94 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் இவர்.
- இந்த வரிசையில் உலகக் கால்பந்து ஜாம்பவான்களான போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (128 கோல்கள்), அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி (106 கோல்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து அந்த இடத்தை அலங்கரிப்பவர் இந்தியாவின் சுனில் சேத்ரி மட்டுமே. சர்வதேச அளவில் அதிக கோல் அடித்த ஆசியர்களில் இவருக்கே முதலிடம்.
- அந்த அளவுக்குக் கால்பந்து விளையாட்டில் பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிய அற்புதமான வீரர் சுனில். அதுமட்டுமல்ல, இதுவரை சர்வதேச அளவில் 7 வீரர்கள் மட்டுமே 150க்கும் மேற்பட்ட கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் சுனில் சேத்ரி 150 போட்டிகளில் விளையாடிள்ள எட்டாவது வீரராவார். மேலும் 365 கிளப் போட்டிகளில் விளையாடி 158 கோல்களையும் சுனில் அடித்துள்ளார்.
- சுனில் சேத்ரியின் கால்பந்து பயணம் இரண்டு தசாப்தங்களைக் கடந்தது. 2002இல் இந்தியாவின் பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியிலிருந்துதான் சுனிலின் கால்பந்து பயணம் தொடங்கியது. 2005இல் இந்தியக் கால்பந்து சீனியர் அணியில் முதல் முறையாகச் சர்வதேசப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து முத்திரைப் பதித்தார். அதன் பிறகு கடந்த 19 ஆண்டுகளாக விளையாடி சாதித்தது வரலாறு.
- இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் பொறுப்பு 2012இல் சுனிலைத் தேடி வந்தது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ள சுனில், ஓய்வு பெறும்வரை அந்தப் பதவியில் நீடித்தது இவருடைய இன்னொரு சாதனை. சர்வதேசப் போட்டிகளில் இந்தியா வென்ற நேரு கோப்பை (2007, 2009, 2012), தெற்காசியக் கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் கோப்பை (2011, 2015, 2021), ஏ.எஃப்.சி. சேலஞ்ச் கோப்பை (2008), ஏ.எஃப்.சி. ஆசியக் கோப்பை (2011) ஆகியவற்றை வென்றதிலும் சுனில் சேத்ரியின் பங்களிப்பு அதிகம்.
- சுனில் சேத்ரி வெல்லாத விருதுகளோ பட்டங்களோ இல்லை. அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை 7 முறை பெற்றிருக்கிறார். 2013இல் அர்ஜூனா விருது, 2019இல் பத்ம விருது, 2021இல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஆகியவற்றை வென்றிருக்கிறார். 2022இல் உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபா, ‘கேப்டன் ஃபெண்டாஸ்டிக்’ என்கிற பெயரில் சுனில் சேத்ரி பற்றிய ஆவணப்படத்துக்குத் தலைப்பிட்டு, கெளரவித்தது.
- கிரிக்கெட்டை எந்நேரமும் கொண் டாடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு மெல்ல வளர்ச்சியடைய சுனில் சேத்ரி அளித்த பங்களிப்பு மகத்தானது, மறக்க முடியாதது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 06 – 2024)